ஓர் உயர்ந்த தனியார்  சட்ட நகலும் நாமும்.

“உம்மை நாம் உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பி வைத்தோம்.” (ஸூரா அன்பியா: 107)

“நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிகச் சீரான நிலைகளுக்கு வழிகாட்டும்.” (ஸூரா இஸ்ரா: 09)

“நிச்சயமாக நாம் எமது தூதர்களை தெளிவான ஆதாரங்களுடன் அனுப்பி வைத்தோம். அவர்களோடு வேதங்களையும், சமநிலைகாணும் நிலையையும் இறக்கி வைத்தோம். மக்கள் நீதியை மேற்கொண்டு நடக்க வேண்டும் என்பதற்காக…….” (ஸூரா ஹதீத்: 25)

இந்த வசனங்களின் பின்னணியில் இறை வழிகாட்டல், இறை தூது மனித வாழ்வுக்கு அருளையும், வளத்தையும், பெரும் நன்மைகளையும் இட்டு வருகிறது எனவும் அந்த வகையில் அது எப்போது மிகச் சீரான நிலைகளுக்கே வழிகாட்டும் எனவும் அந்த சீர்நிலைகளின் அடிப்படையானது மனித வாழ்வில் நீதியை நிலவச் செய்வது எனவும் புரிந்து கொள்கிறோம்.

அல்குர்ஆனின் சட்ட வசனங்களே தனி மனித, குடும்ப, சமூக வாழ்வியக்கத்தை நெறிப்படுத்துகின்றன. அந்த வகையில்  அவையே அடிப்படையில் வாழ்வின் நலன்களுக்கும், அருள்களுக்கும், நன்மைகளுக்கும் காரணமாக அமைகின்றன.

இந்தப் பின்னணியிலிருந்து கருத்து முரண்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும் தனியார் சட்ட நகலை அவதானிப்பின் அது முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் அருமையான சந்தர்ப்பம் எனப் புரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அழகிய மிகவும் உயர்ந்த ஒரு சட்ட நகலைத் தயாரித்து முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு அல்குர்ஆனின் வழிகாட்டலது உயர்வை நாம் முன்வைத்திருக்க முடியும். முஸ்லிம் அல்லாதவர்களும் கூட இஸ்லாத்தின் வழிகாட்டலது உயர்வை அவதானிக்க அப்போது வழிபிறந்திருக்கும்.  எமது பாராளுமன்ற அலுவலகத்தவர்களும் கூட பெருமையோடு இஸ்லாமிய சட்டத்தின்  உயர்வை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்திருப்பர்.

நீதி அமைச்சர் ஒரு பெண். முஸ்லிம் அல்லாதவர். அவரும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய வழிகாட்டல்களைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பார். ஏன் நாம் இச்சட்டங்களிலிருந்து பயன்பெறக் கூடாது. என்று சிந்தித்திருப்பார்.

சட்டத்தரணி சலீம் மர்சூபின் பிரிவில் சில சிங்கள சகோதரர்கள் உள்ளார்கள். அவர்களுக்கும் இதன் மூலம் இஸ்லாத்தை விளங்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இவை எதுவுமே நடக்காதது மட்டுமல்ல. அடுத்த சமூகங்களுக்கு மிகப் பிழையான உதாரணமாக நம் இருக்கிறோம்.

அத்தோடு முரண்பாடுற்றோர் கருத்து வேறுபாடு என்ற நிலையைத் தாண்டி அடுத்த பிரிவினர் ஷரீஆவுக்கு மாற்றமாகப் பேசுகிறார்கள் என்றனர். முஸ்லிம் தனியார்  சட்டத் திருத்தத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இருப்பதை ஒரு சாதக நிலையாகப் பார்க்காது அதையே குறைபாடு  என்று எங்களில் ஒரு பிரிவினர் வாதிக்கின்றனர்.

ஆனால் வீரமந்திரி போன்ற சட்டவியலாளர்கள் இஸ்லாமிய சட்டம் பற்றி எழுதியமையைக் கொண்டாடுகிறோம்.

இவ்வாறு சிறுபான்மை சமூகமாக இருந்தும் தஃவா மனநிலை இன்றியே வாழ்வது எவ்வளவு துரதிஷ்டமானது!

உண்மை இவ்வாறிருந்து போதும் இஸ்லாமிய சட்டத்தை மிகச் சரியாக முன்வைப்பதற்கு சில அடிப்படைகள் புரியப்பட வேண்டும். நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்ற சட்ட கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது அதில் முதன்மையானதாகும்.

இன்னொரு வகையில் சொன்னால் இமாம் அல் ஹரமைன் முதல் இமாம் ஷாதிபி வரையிலான பெரும் சட்ட வல்லுனர்கள் கட்டியெழுப்பிய மகாஸித் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் இமாம் தாஹிர் இப்னு ஆஷுர் முதல் இன்று  வரை நவீன இஸ்லாமிய சட்ட வல்லுனர்களால் முன்வைக்கப்பட்ட அக்கோட்பாடு பற்றிய பரந்த ஆய்வுகளோடும் எமக்கு ஆழ்ந்த பரீச்சயம் பெற வேண்டும்.

இந்த அறிவுப் பின்னணி இல்லாது எமது பழைய சட்டப் பாரம்பரியத்தை எம் காலத்தை நோக்கி நகர்த்துவது பாரிய குழப்ப நிலைகளையே ஏற்படுத்தும்.

இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் பெண்கள் விவகாரம், இலக்கியம், அரசியல், ஜிஹாத் என்பன அணுகப்பட்ட முறை மிகவும் சிக்கலானது. சமூக நிலைகள், அக்கால சர்வதேச சூழல்கள் என்பவற்றின் தாக்கம் இப் பகுதியில் ஓரளவு கடுமையாகவே காணப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இப் பிரச்சினையின் மூன்றாவது பகுதி தற்போதைய தேசிய, சர்வதேச, உள்நாட்டு சூழல்களாகும். இச் சூழல்களின் பின்னணியிலும் பெண், அவளது தனிப்பட்ட சமூக ஈடுபாடு, குடும்பம், அதன் மீதான சூழல் தாக்கங்கள் என்பவை நோக்கப்பட வேண்டும்.

குடும்ப சட்டங்கள் அல்லது தனியார் சட்டம் வகுக்கப்படும் போது இவ்வனைத்துக் காரணிகளும் கவனத்திற் கொள்ளப்படும்.

இவ்வாறு நோக்கப்படும் போது மட்டுமே அல்குர்ஆன், ஸுன்னாவின் இப் பகுதியிலான சட்டங்கள் சரியாகப் புரியப்படவும் , பிரயோகப்படவும் முடியும்.

இந் நிலையில் மட்டுமே மனிதனின் குடும்ப வாழ்வுக்கான மிகச் சிறந்த சட்ட ஒழுங்கொன்றை அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து நாம் புரிந்து கொள்வது சாத்தியமாகும்.

Reply