இஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்

சென்ற முறை சிறுபான்மை சமூகமாக பெரும்பான்மையினுள்ளே வாழும் நிலையில் அச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கான கோட்பாட்டொழுங்கு பற்றிய பிரச்சிணையை நோக்கினோம். பிரச்சினைகளை மட்டும் எழுப்பி தீர்வுகள் சொல்லாது விடுதல் சரியான போக்கு அல்ல என்று பலரும் சொல்லக் கூடும். எனினும் ஒரு விழிப்புணர்வையும், சிந்தனையையும் தூண்டி விடலே இப் பகுதியில் எனது நோக்கம். ஏனெனில் விரிந்த ஆய்வுகளுக்கு இவ்விடம் அவ்வளவு பொருத்தமானதல்ல என்றுதான் கருதுகிறேன்.

இப்போது இன்னொரு அடிப்படையான பிரச்சினையை இங்கே முன்வைப்போம்.

கோட்பாடுகளும், சித்தாத்தங்களும் முக்கியத்துவம் பெறுவது  போலவே அவற்றிக்கான  பிரயோக வழிமுறையும் மிக முக்கியமானதாகும்.  சரியான பிரயோகத்தைக் காணாத கோட்பாடு பொருளற்றதாகும். அத்தகைய கோட்பாடு சந்தேகத்தையும், நம்பிக்கை படிப்படியாக அகலும் நிலையையுமே தோற்றுவிக்கும்.

பிரயோக வழிமுறை என்றால் என்ன என்பதை இப்போது நோக்குவோம்.

இஸ்லாத்தின் நம்பிக்கைப் பகுதி, வணக்கவழிபாடுகள் பகுதி, குடும்ப வாழ்வு, பொருளாதாரப் பகுதி என்ற எல்லாவற்றையும் நடைமுறையில் பிரயோகிப்பதற்கான கட்டமைப்புகள் யாவை? எத்தகைய பொறிமுறைகளைப் பயன்படுத்தினால் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தல் பயன் கொடுப்பதாகும்.

தற்போதைய நமது வழிமுறை க.பொ.த சாதாரண தரம் வரையிலான பாடசாலைக் கட்டமைப்பிலான பிரயோகம், பல்வேறு அரபு, இஸ்லாமியக் கல்விக்கான   மத்ரஸாகள், அஹதிய்யா என்ற ஞாயற்றுக்கிழமை பாடசாலை ஒழுங்கமைப்பு, அல்குர்ஆன் மத்ரஸா, இறுதியாகப் பள்ளி என்ற நிறுவனம் என்பவையாகும். இப் பகுதியில் இஸ்லாமிய இயக்கங்களும் தமது பங்களிப்பைச் செய்கின்றன.

இப்போது எம் முன் எழும் கேள்வி இதுதான் :       

இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தலுக்கான இந்த வழிமுறைகள் வெற்றியளித்துள்ளனவா? எந்தளவு தூரம் வெற்றியளித்துள்ளன? இக் கேள்விக்கான பதிலைக் கீழ்வருமாறு தேடுவோம்.

இஸ்லாத்தைப் படிக்க வேண்டும்மென்ற ஆர்வம் பரவளாக எழுந்துள்ளது. தொழுகை, நோன்பு, ஹஜ்  என்ற வணக்கங்கள் அதிகரித்துள்ளன. இஸ்லாமிய நிகழ்ச்சிகள் பரவலாகவும், அதிகமாகவும் நடக்கின்றன.

இந்த உண்மைகளின் பின்னால் கவலைப் படத்தக்க நிகழ்வுகளும் உள்ளன.

தொழுகை போன்ற வணக்கங்களின் உயிரோட்டம் என்பது நன்கு அறிமுகமாகக் கூட இல்லை. அல் குர்ஆனுடனான தொடர்பு மிகப் பரவலாக சமூகமயப் படவில்லை.

இஸ்லாம் பற்றிய பொதுத் தெளிவு இருந்தாலும் அது மேலோட்டமாகவும் பொது உண்மைகள் பற்றிய தெளிவாகவுமே உள்ளது. இஸ்லாம் பற்றிய ஆழ்ந்த தெளிவும், அதனை நடைமுறைப் படுத்தல் சம்மந்தமான தெளிவும் மிகவும் குறைவாகவே உள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் உள்ளே போதைப் பொருள் பாவனை போன்ற குற்றச் செயல்களும், குடும்ப வாழ்வோடு சம்மந்தப்பட்ட சீர்குலைவுகளும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

அண்மைக்காலங்களில் இஸ்லாத்தை விட்டு அப்புறப்பட்டு நாஸ்திக சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், யுவதிகள் கூட்டமொன்று உருவாகி வருகிறது. இது விரிவடையும் அபாயம் உள்ளது.

இந்தப் பின்னணி தான் மேலே நாம் பார்த்த இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தலுக்கான வழிமுறைகளில் பல குறைபாடுகளும், கோளாறுகளும் காணப்பட வேண்டும் என்பதை நாம் உறுதி செய்கிறோம்.

இந்த இடத்தில் தான் இஸ்லாம் என்ற உன்னதக் கோட்பாட்டுக்கும் அதனை சமூக யதார்த்தத்தின் மீது பிரயோகிக்கும் செயற்திட்ட ஒழுங்கிற்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பிருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம்.

சரியான செயற்திட்ட ஒழுங்கில்லாத போது இஸ்லாம் என்ற உயர்ந்த கோட்பாடும் நல்ல பயனைக் கொடுக்காது. அத்தோடு நிற்காது வெறும் உயிரற்ற வெளித்தோற்ற இஸ்லாமாக அது இருந்து, இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரகமாக அமைந்து விடும் அபாயம் உள்ளது.

நாம் வாழ்வது எந்தவொரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்யும் தொழில்நுட்ப யுகத்திலாகும். மிக நுணுக்கமான நிர்வாகக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் காலமும் இதுவாகும். எனவே இத் தொழில்நுட்பத்தையும், நுணுக்கமான நிர்வாகக் கட்டமைப்பையும் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி பெற எமக்கு நிறையவே சந்தர்ப்பமுள்ளது.

இக் கருத்தை சில நடைமுறை உதாரணங்களோடு அடுத்த முறை நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

Reply