மாற்றம் என்ன, எவ்வாறு?

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாதை விரைவானதாக அமைய முடியும்.

மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட அரசியல் வேலைத் திட்டமொன்று இருந்தால் மட்டுமே இதனைச் சாதித்துவிடலாம். இதன் பொருள் ஏனைய வேலைத்திட்டங்கள் தேவையற்றவை என்பதல்ல. அவை அந்நாடுகளைப் பொறுத்தவரையில் இரண்டாந்தரமானவை என்றே இங்கு கூற வருகிறோம்.

இதற்கு துருக்கி நல்லதொரு உதாரணம்.

பல சர்வாதிகாரிகளை தூக்கியெறிந்த அரபு வசந்தம் இன்னொரு உதாரணம். அரபு வசந்தம் இன்னும் வாழ்கிறது. சர்வதேசியச் சதிகளால் அது நெருக்கடிகளுக்குட்பட்டிருக்க முடியும். ஆனால் அது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் முன்னேறி வருகிறது.

டியூனீசியா, மொரோக்கோ, கட்டார், குவைத் என்ற நாடுகள் அரபு வசந்தத்தின் தாக்கத்தைக் காத்து வருகின்றமை மேலுமொரு உதாரணம்.

இஸ்லாமிய நாகரீகத்தின் சிக்கல் அரச – சமூகக் கட்டமைப்புக்கான முறைமை பற்றிய சிக்கலேயாகும் அரபு வசந்தத்தோடு அந்த சிக்கலிலிருந்து இஸ்லாமிய நாகரீகம் வெளிவரத் துவங்கி விட்டது என நவீன உலகின் தலை சிறந்த அறிஞர்களில் ஒருவரான முக்தார் ஷின்கீதி கூறுகின்றமை இக் கருத்துப் பின்னணியிலாகும்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது சிறுபான்மையாக வாழும் எமது சிக்கலென்ன  என்பதாகும். ”சமூகமாற்றம்” என்பதன் பொருள் எம்மைப் பொறுத்தவரையில் என்ன? நாம் எதிர் கொள்ளும் சிக்கல் என்ன? அந்தச் சிக்கலிலிருந்து நாம் எவ்வாறு வெளிவரப் போகிறோம் ?

இந்தக் கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் சரியான பதில்களே எம்மைச் சரியான வழியில் இயங்கச் செய்யும். நாம் விரும்பும் மாற்றத்தையும் சாதிக்கச் செய்யும்.

சமூக மாற்றம் என்பது எம்மைப் பொறுத்வரையில் சீர்கேடுகளாலும், சமூகத்தின் உள்ளே பரவியுள்ள தீமைகளாலும் இஸ்லாத்தை விட்டுத் தூரமாகி இருக்கும் எம் நிலையை சீர்படுத்திக் கொள்வது மட்டுமல்ல. வித்தியாசப் பட்டுள்ள நாட்டு யதார்த்ததிற்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக் கொள்ளல் அதன் ஒரு முக்கிய பகுதியாகும். அதுவே எமது முதன்மை வேலைத் திட்டமாகும். இந் நிலையில் எமது சிக்கல் பன்மைத்துவ சமூக யதார்த்தக் கட்டமைப்போடு தகவமைத்துக்  கொள்ளும் முறைமை பற்றிய சிக்கலாகும்.

இச் சிக்கலிலிருந்து விடுபட சிறுபான்மை சார் மைய நீரோட்ட நிலையை விட்டு ஒதுங்கும் நிறுவனக் கட்டமைப்புகளில் ஒரு புரட்சி தோன்ற வேண்டும். அதற்கு முன்னால் சிறுபான்மை நடத்தையை ஆளும் ஷரீஆ சட்டங்கள்சார் புரட்சியொன்றும  அவசியம். இந்தப் பின்னணியில் எமது வேலைத் திட்டம் ஒழுங்குபடுத்தப்படாதபோது எமது இஸ்லாமியக் கற்பித்தல்களும், பயிற்றுவித்தல்களும், பயான்களும், உரைகளும் பெரிய தாக்கம் எதையும் விளைவிக்கும் சக்தியற்றவையாகவே இருக்கப் போகின்றன.

Reply