அடுத்த சமூகங்களோடு உறவாடல் – ஒரு கோட்பாட்டு விளக்கம்

இனக் கலவரங்களை அடிக்கடி சந்தித்து வரும் இலங்கை முஸ்லிம்  சமூகத்தினுள்ளே முஸ்லிம் அல்லாதவர்களோடு உருவாகும் முரண்பாடுகளையும், வன்முறைசார் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது எவ்வாறு என்பது இப்போது  பேசு பொருளாகவும், நீண்ட கலந்துரையாடல்களாகவும் மாறிப் போயிருப்பதை அவதானிக்கிறோம்.

இக் கலவரங்களின் பொதுக் காரணங்களை ஆராய்வது போன்றே எம்முள்ளே காணப்படும் உறவாடல்களில் சிக்கல்களை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்வதும் அவசியமானது. இந் நிலையில் நாம் எமது சிந்தனைகளையும், வாழ்வொழுங்குகளையுமே மீள் பரிசோதனைக்குட்படுத்தத் தயங்கக் கூடாது. யாருக்கோ பயந்து நாம் இவற்றைச் செய்வதாகக் கருதாது இஸ்லாமியப் பார்வையில் அர்த்தமற்றவற்றை வீம்புடன் பிடிவாதமாகப் பின்பற்றுவது எந்த வகையிலும் முஸ்லிம் சமூகத்திற்கு நலன் பயப்பதல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

இப் பகுதியில் ஓர் அடிப்படைப் பிரச்சினையை ஆராய்வோம். முஸ்லிம் அல்லாதோர் பற்றிய எமது சிந்தனை அல்லது கற்பிதம் முஸ்லிம் அல்லாதோர் நோக்கிய எமது நடத்தையை நெறிப்படுத்தும் அடிப்படைக் காரணியாகும்.

இஸ்லாத்தின் வட்டத்திற்கு வெளியிலிருப்போன் “காபிர்” – நிராகரிப்பாளன் என அடையாளப்படுத்தி அத்தகைய முஸ்லிம் அல்லாதோர் அனைவரையும் எம்மை பௌதீக ரீதியாகவும், மானசீகரீதியாகவும் அழிக்க வரும் கூட்டத்தினர் எனக் கொள்ள வேண்டுமா? அப்போது அவர்களை நோக்கிய எமது நடத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய மூடுண்ட அமைப்பையே கொண்டிருக்கும்.

ஆனால் அல்குர்ஆன் பொதுவாக மனிதர்களை உடன்பிறந்த சகோதரர்களாகப் பார்க்கிறது. அல் குர்ஆன் பேசுகிறது :

மனிதர்களே உங்களை நாம் ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம்………” (ஸூரா ஹுஜராத் : 49 : 13)

மனிதர்களே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்களது இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள்…..” (ஸூரா நிஸா  : 04 : 01)

இந்த வகையில் ஒரு முஸ்லிம் அடுத்த இனத்தின், சமூகத்தின், மதத்தின் அங்கத்தவர்களை இரத்த உறவு கொண்ட மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

அல்குர்ஆன் மேலும் விவரிப்பதைப் பார்ப்போம் :

மலக்குகளை நோக்கி உமது இரட்சகன் கூறினான் : நான் மனிதனை மண்ணால் படைக்கப் போகிறேன். அவனைச் சீராக செப்பனிட்டு அவனில் எனது ஆன்மாவை ஊதினால் நீங்கள் அவனுக்கு சிரம் தாழ்த்துங்கள்”. (ஸூரா ஸாத் : 38 : 71, 72)

இந்த வசனத்தின் பின்னணியில் மனிதர்கள் அனைவரும் – முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட அல்லாஹ் படைத்த விஷேட ஆன்மாவைக் கொண்டவர்கள். எனவே அவர்கள் எல்லோரிடமும் ஒழுக்க உணர்விருக்கும், சீரான அறிவு நிலையும் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வகையிலேயே முதன் முதலாக இறங்கிய ஐந்து வசனங்களின் இறுதியாக அல்லாஹ் : “மனிதனுக்கு அவன் அறியாதவற்றை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்” என்கிறான். இந்த வசனத்தில் “மனிதனுக்கு” என அல்குர்ஆன் குறிப்பிட்டமையை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

மேலே நாம் பார்த்த அல்குர்ஆன் வசனங்களின் பின்னணியிலேயே மனிதர்கள் அனைவரும் கண்ணியத்துக்குரியவர்கள் என அல்குர்ஆன் கூறுகிறது :

நிச்சயமாக நாம் மனிதர்களை கண்ணியப்படுத்தினோம். கரையிலும், கடலிலும் நாம் அவர்களைச் சுமந்தோம். அவர்களுக்கு சிறந்தவற்றை உணவாக அளித்தோம். நாம் படைத்த அதிகமானவற்றை விட அவர்களை மேம்படுத்தினோம்(ஸூரா இஸ்ரா : 17 : 70)

இந்த வகையில் மனிதன் என்ற வகையில் முஸ்லிமோ, முஸ்லிம் அல்லாதவரோ அனைவரும் கண்ணியத்துக்குரியவர்கள். மனிதர்கள் என்ற வகையில் அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அனைவருக்கும் அவர்ளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

அல்குர்ஆன் மேலே குறிப்பிட்ட வசனங்களில் மட்டுமல்ல, மிகப் பல இடங்களில் மனிதனைப் பற்றியோ அல்லது அவனை விளித்தோ பேசுகிறது. அல்குர்ஆனில் “இன்ஸான்” – மனிதன் என்ற சொல் 63 முறைகள் வருகின்றது. அதன் ஒத்த கருத்துள்ள சொல்லான “பனீ ஆதம்” – ஆதமின் பிள்ளைகள் என்ற சொல் ஆறு முறைகள் வருகிறது. பன்மை சொல்லான “நாஸ்” – மக்கள் என்ற சொல் 240 முறைகள் வருகின்றது.

அல்குர்ஆனின் இத்தகைய போக்கின் காரணமாகவே மானுடம் அல்லது மனிதம் இஸ்லாத்தின் ஒரு சிறப்புப் பண்பாகக் கொள்ளப்படுகிறது. “இஸ்லாத்தின் பொது சிறப்புப் பண்புகள்”என்ற தமது நூலில் ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி இதற்காக ஒரு தனி அத்தியாத்தை ஒதுக்கி ஆராய்ந்துள்ளார்.

இந்த வகையில் முஸ்லிம்கள் “காபிர்” என்ற சிந்தனைச் சிறையில் மூடுண்டு அடுத்த மனிதர்களை நோக்காது “மனிதம்” எள்ற பொதுத் தளத்திற்கு வர வேண்டும். இந்த மனித சமூகத்தின் நலன்களுக்காகவும், சுபீட்சமான வாழ்விற்காகவும் பாடுபட வேண்டும். உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் பணி அதுவேயாகும். அல்குர்ஆன் கூறுகிறது :

நீங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமூகத்தினர்…….” (ஸூரா ஆல இம்ரான் 3 : 110)

இங்கு “மக்களுக்காக” என்ற பிரயோகத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். மக்களோடு உறவாடி அவர்களோடு இணைந்து நன்மைகளை வளர்த்து, தீமைகளை ஒழித்து வாழுங்கள் என முஸ்லிம்களை நோக்கி இவ் வசனம் கட்டளை இடுகிறது.

“காபிர்” என்ற பிரயோகம் இறை தூதர் (ஸல்) அவர்களது பிரச்சார ஓட்டத்தில் உருவாகியதாகும்.அக் காலப் பிரிவில் இஸ்லாமியத் தூதை எத்தி வைப்பதை சிலர் கடுமையாக எதிர்த்தார்கள். இஸ்லாதை்தை ஏற்றோர் மீது அநியாயங்களையும், கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்டார்கள். சத்தியம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் தம் அறிவை மூடிக் கொண்டார்கள். பின்னர் மதீனாவுக்கு முஸ்லிம்கள் புலம் பெயர்ந்த போதும் அவர்களை இவர்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து போர்தொடுத்து முஸ்லிம்களையும் அவர்களது மார்க்கத்தையும் பூண்டோடு அழித்து விட முயற்சித்தார்கள். இப் பின்னணியிலேயே காபிர்கள் என்ற பிரயோகத்தையும் அவர்கள் மீதான கடுமையாக சாடல்களையும் அல்குர்ஆனில் காண்கிறோம்.

இக் கருத்துப் பின்புலத்திலேயே அல்குர்ஆனின் அக் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கான “காபிர்” பற்றிய அக் கடும் பிரயோகங்களை முஸ்லிம் அல்லாத அடுத்த சமூகங்கள் அனைத்தின் மீதும் பொதுமைப்படுத்தி பிரயோகிகக்க் கூடாது என்கிறோம்.

அல்குர்ஆனும் இந்த உண்மையை தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. “மார்க்க விடயத்தில் உங்களோடு போராடாதவர்கள், உங்களை, உங்களது வீடுகளை விட்டு  வெளியேற்றாதோர்இவர்களோடு உதவி, ஒத்தாசைகள் புரிந்து நடந்து கொள்ளல், நீதியாக நடந்து கொள்ளல் இவற்றை அல்லாஹ் தடுக்கவில்லை”. (ஸூரா அல் மும்தஹினா : 60 : 08)

அதாவது நான் குறிப்பிட்ட எதிர்ப்புக் கொண்டோரையே குறிப்பிடுகிறேன். அதனை நீங்கள் அனைத்து முஸ்லிம் அல்லாதோர் மீதும் பொதுமைப்படுத்தாதீர்கள். முஸ்லிம் அல்லாத, எதிர்ப்புப் போக்கற்றவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள்வதையும் நான் தடுக்கிறேன் எனப் பிழையாகப் புரிந்து கொள்ளாதீர்கள் என்றுதான் இவ் வசனம் கூறுகிறது.

இறை தூதர் (ஸல்) அவர்களது பின்னால் காலப் பிரிவிலும் ரோம, பாரசீக சாம்ராஜ்யங்களோடு முஸ்லிம்கள் கடுமையாக மோதினார்கள். பயங்கர சூழ்ச்சிகளையும், சதிகளையும் எதிர்கொண்டார்கள். அன்றைய காலம் சாம்ராஜ்யம், மன்னராட்சிக் காலம். தேசியம், எல்லை வகுக்கப்பட்ட நாடுகளின் காலமல்ல அது. மனிதம், மனித உரிமைகள் பற்றிய அறிவுத் தெளிவுகளோ அதற்கான சர்வதேச நிறுவனங்களோ கொண்ட காலமாகவும் அது இருக்கவில்லை. இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே அன்று முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் உறவு பற்றிய சட்டங்கள் வகுக்கப்பட்டன. எனவே அக்கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் இது பற்றிய சட்டத் தீர்வுகளில் ஓரளவு கடும்போக்கும், இறுக்கமும் காணப்படுவது இயல்பானது; புரிந்து கொள்ளத்தக்கது.

அவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும். மனிதம் – மானுஷீகம் என்ற அல்குர்ஆனின் அடிப்படை சிந்தனைக்கு நாம் வர வேண்டும். அந்த அடிப்படையிலிருந்தே முஸ்லிம் அல்லாதவருக்கு வாழ்த்துச் சொல்லலாமா, ஸலாம் சொல்லலாமா? அவர்களை நோய் விசாரிக்கச் செல்லலாமா? அவர்களது சுக துக்கங்களில் கலந்து கொள்ளலாமா? போன்ற அடுத்த சமூகங்களுடன் உறவாடல் பகுதிக்கான சட்டத் தீர்வுகளை நாம் ஆராய வேண்டும்.

இஸ்லாம், குப்ர் எல்லாம் ஒன்றுதான், அவற்றை எல்லாம் கவனத்திற்கொள்ளத் தேவையில்லை என நான் இங்கே சொல்வதற்காக பிழையாக வாங்கிக் கொள்ளக் கூடாது. எல்லா மார்க்கங்களுக்கும், கோட்பாடுகளும், கொள்கைகளும் உள்ளன. அவ்வாறே இஸ்லாத்திற்கு ஒரு நம்பிக்கைக் கோட்பாடுள்ளது. அதனை விட்டு ஒருவர் வெளியேறியதாக எந் நிலையில் கணிக்கப்படுவார் எனவும் இஸ்லாம் விளக்கியுள்ளது. அது நம்பிக்கை – நிராகரிப்பு சார் கோட்பாட்டு விளக்கங்களாகும்.

இந்தக் கோட்பாட்டு உண்மை பற்றி நாம் விளக்க வரவில்லை. மாற்றமாக முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடுவது எவ்வாறு என்பதற்கான அடிப்படைக் கோட்பாட்டையே நாம் விளக்கினோம்.

இதன் அடுத்த பகுதியை அடுத்த வாரம் நோக்குவோம்….

Reply