நிரந்தரத் தீர்வை நோக்கி…

இன்னமும் கண்டி முஸ்லிம் கிராமங்களில் பல இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஒரு வகைப் பீதியுடனும், அச்சத்துடனுமே அவர்கள் வாழ்கிறார்கள். இலங்கை முழுவதிலுமுள்ள முஸ்லிம்களும் கலக்கத்துடனும், பதட்டத்துடனுமே சிறு நிகழ்ச்சிகளையும் கூட எதிர் கொள்கிறார்கள். அத்தோடு அழிந்துபட்ட கிராமங்களுக்கான நிவாரணங்கள், வன் முறைக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் என்பவற்றிலும் முஸ்லிம்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார்கள்.

இவ்வாறு கலக்கத்துடனும், பதட்டத்துடனும் தொடர்ந்து வாழ முடியாது. உடனடித் தீர்வுகளுடன் நாம் நின்று விடவும் கூடாது. நிரந்தரத் தீர்வு நோக்கி நாம் நகர வேண்டும்.

நிரந்தர தீர்வு என்பது இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று முஸ்லிம் அல்லாத சமூகங்கள் குறிப்பாக சிங்கள பௌத்த சமூகத்திற்கு எம்மை பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்கி நல்லெண்ணத்தை விதைவித்தலாகும். இது பௌத்த சமூகத்தின் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டிய வேலைத் திட்டமாகும். இது சாதிக்க முடியாததொரு வேலைத்திட்டமன்று. எமது சமூகத்தையும் மேல் மட்டத்திலிருந்து அடித்தட்டு மக்கள் வரை ஒழுங்கு படுத்தும் போது இது மிக இலகுவாகவே சாத்தியமாகும்.

சிங்கள, பௌத்த சமூகத்திற்கு மத்தியில் காணப்படும் முஸ்லிம்கள் பற்றிய தப்பெண்ணங்களை நீக்கி நல்லெண்ணங்களை விளைவிப்பது என்பது எம்மை நாம் ஒழுங்கு படுத்துவதிலேயே அடிப்படையில் தங்கியிருக்கிறது.

சிங்கள பௌத்த சமூகமும், முஸ்லிம் சமூகமும் மோதும் நிலைக்கு இட்டு வந்த காரணிகள் யாவை என நோக்கும் போது வரலாற்று ரீதியாக தொடரும் சிங்கள இனவாதமே அதற்கு முழுமையான காரணம், அந்த இன வாதம் தமிழன் என்ற எதிரியின் பின்னர் முஸ்லிம் என்ற எதிரியைக் கட்டமைத்துக் கொண்டது என்று மட்டும் கூறுவது பன்முகம் கொண்டு சமூகப் பிரச்சினைக்கு ஒற்றைப் பரிமாணம் கொடுப்பதாக அமையும். அப் பின்னணியில் இன வாதத்தின் வளர்ச்சிக்கு நாம் நடத்தையாலும், கருத்துக்களாலும், சிந்தனையாலும் பங்களிப்புச் செய்துள்ளோம் என்பதை நாம் பார்க்காமல் விட்டால் பிரச்சினைக்கான உண்மையான தீர்வுக்கு வரமாட்டோம்.

எமது அரசியல் செயற்பாடுகள், பொருளாதார நடத்தைகள், மார்க்க வாழ்வொழுங்குகள் என்பவற்றில் பல முஸ்லிம் அல்லாதவர்களைச் சங்கடப் படுத்துவதாகவும், பிழையான புரிதல்களுக்கு இட்டுச் செல்வதாகவும் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றை முஸ்லிம்கள் காய்தல் உவத்தலின்றி மிக நேர்மையாக விமர்சனத்திற்குட்படுத்த வேண்டும்.

இந் நிலையில் பலரும் எழுப்பும் கேள்வி அடுத்தவர்களுக்காக நாம் மார்க்கத்தை விட்டுக் கொடுப்பதா என்பதாகும். இதற்கு நாம் முன்வைக்கும் பதில் கீழ்வருமாறு:

  1. நாம் பின்பற்றுபவை அனைத்தும் மார்க்கம்தானா? மார்க்க அடிப்படையில் அவை ஸுன்னத், வாஜிப் என்ற தரத்தைப் பெறுமா? என்று ஆராய்ந்து எமது பல செயற்பாடுகளை ஒழுங்கு படுத்தல்.
  2. எமது எதிர்கால இருப்பு நிலைக்கே அச்சுறுத்தல் என்ற நிலை வரும் போது மார்க்கம் எமக்கு எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  3. பெரும்பாலும் நிலத்தொடர்பற்றுச் சிதறிப்போன கிராமங்களாக வாழும் நாம் எமது வாழ்வமைப்பை நெகிழ்ந்து கொடுக்கும் மூலோபாயத் திட்டங்களின் ஊடாகவே வடிவமைக்க வேண்டும்.

இவற்றின் ஊடாக நாம் சாதிக்க விரும்புவது மூன்று விடயங்களையாகும்:

  1. முஸ்லிம்கள் மூடுண்ட சமூக நிலையிலிருந்து வெளியேறி மைய நீரோட்டத்தில் கலத்தல்.
  2. முஸ்லிம் அல்லாதவர்களுடனான சிறந்த சுமூக உறவாடல்.
  3. நாட்டுக்குப் பங்களிப்புச் செய்பவர்களாக மாறல்.

இவை அனைத்தையும் சாதிக்க வேண்டுமாயின் ஓருண்மையை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் ஆழ்ந்த மார்க்க உணர்வு கொண்டவர்கள். எனவே மார்க்க வழிகாட்டல் ஊடாகவே அவர்களை இயக்க முடியும் என்பதுவே அவ்வுண்மையாகும்.

மார்க்கம் இப் பகுதியில் மிகவும் அழகாக வழிகாட்டுகிறது இரண்டு கோட்பாடுகளை அது எமக்கு முன்வைக்கிறது. ஒன்று ஷரீஆவின் உயர் இலக்குகள் என்ற மகாஸித் அல் ஷரீஆ இரண்டாவது முஸ்லிம் அல்லாதவர்களுடன் பெருமளவு கலந்து இணைந்து வாழும் நிலையிலுள்ள பூமிக்கான சிறப்புச் சட்ட ஒழுங்கு.

இவ்விரு கோட்பாடுகளையும் புரிந்து அதற்கேற்ப எமக்கான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்வதில் நாம் ஈடுபாடு காட்டினால் இன மோதல் என்ற நிலையை மிகப் பாரியளவு நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.

இது பற்றிய கலந்துரையாடல்களையும், ஆய்வுகளையும் சமூகம் ஆரம்பிப்பதற்கான வரலாற்றுக் காலத்தில் நாம் நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வோமாக. உண்மையில் இறை வழிகாட்டல் தெளிவாகவே உள்ளது. ஆனால் அதனைத் தேடும் அறிவு முயற்சியும், மனப் பக்குவமும்தான் எம்மிடமில்லை.

Reply