இனக் கலவரங்களும் முஸ்லிம் சமூகப் பாதுகாப்பும்

சில மாதங்களுக்கு முன்னால் ஜின்தோட்டை, இரண்டொரு கிழமைகளுக்கு முன்னால் அம்பாறை, தற்போது திகன என முஸ்லிம் – சிங்கள இனக் கலவரங்கள் தொடர்கின்றன.

முஸ்லிம் இளைஞர்கள் ஓரிருவர் – நான்கு பேர் என்று கூறப்படுகிறது – இணைந்து ஒரு சிங்கள இளைஞரைக் கொன்றமையே இனக் கலவரத்தின் உடனடிக் காரணமாக அமைந்தது. கொன்ற இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். முஸ்லிம் தரப்பினர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க சிங்களத் தரப்பினரோடு பேசினர். பெரியதொரு நஷ்டயீடு தருவதாக ஒப்புக் கொண்டு அதில் ஒரு பகுதியைக் கொடுத்தனர். இத்தோடு பிரச்சினை முடிந்து விடுவதே நியாயமானது.

ஆனால் இந் நிகழ்வு ஓரளவு பெரிய இனக் கலவரமாக வெடித்து முஸ்லிம்களுக்கு ஒரு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது என இது வரை நடந்து முடிந்துள்ள தகவல்களின் படி தெரிகிறது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்னவெனில் இன உணர்வு சிங்கள சமூகத்தில் கடுமையாக வளர்ந்துள்ளது. திட்டமிட்டு வளர்க்கவும் படுகிறது. சிங்கள இன மேலாதிக்கத்தை கல்வி, பொருளாதார, அரசியல் பகுதிகளில் நிலைநாட்ட இன உணர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரிவினர் உருவாக்கப்பட்டு விட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தமது இன மேலாதிக்கத்தை நிலைநாட்ட அடுத்த சமூகங்கள் பற்றிய மிகைப் படுத்தப்பட்ட கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அக் கருத்துக்கள் சிங்கள பௌத்த சமூகத்தினருக்கு மத்தியில் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையிலேயே ஒரு சாதாரண சம்பவமும் இனக் கலவரத்தை உருவாக்கும் பலத்தைப் பெற்று விடுகிறது.

சிங்கள சமூகத்தில் மிகச் சிறந்த மனிதர்கள் உள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடன் இந்த நாட்டைக் கட்டி எழுப்பப்பாடுபட வேண்டும் என்ற கருத்துடன் உழைக்கும் புத்திஜீவிகளும் சிங்கள சமூகத்தில் உள்ளார்கள் என்பதுவும் மிகத் தெளிவான உண்மை. எனினும் இனவாத உணர்வு மிகைத்த சிங்களப் பிரிவினரே சிங்கள பௌத்த சமூகத்தில் பலம் பெற்றுள்ளனர். அத்தோடு அரசியல் வாதிகளும் தங்களது அரசியல் இலாபத்திற்காக இன உணர்வை நன்கு பயன்படுத்துகின்றனர். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டுள்ளது. சிங்கள அரசியல் வாதிகளில் ஒரு சாராரே இந்த இன உணர்வை வளர்த்து வருகிறார்களோ என்ற சந்தேகமும் பலமாகவே எழுகிறது.

இத்தகையதொரு இலங்கைச் சமூக யதார்த்தத்தினுள்ளேயே முஸ்லிம் சமூகம் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள்ள பிரச்சினை என்னவென்றால் இனப் பிரச்சினைகளிலிருந்து தப்பிப் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பூரண வழிகாட்டலொன்று அவர்களுக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதாகும்.

இப் பகுதியில் எனது சில குறிப்புகளை மட்டும் கீழே பதிகிறேன்:

  • எமது இறை தொடர்பு மிகவும் பலவீனமானது. வணக்க வழிபாடுகள் எதுவும் எம்மிடம் ஈடுபாட்டுடன் கடைப்பிடிக்கப் படுவதாகவோ, உயிரோட்டமானதாகவோ இல்லை. எனவே இறை பாதுகாப்பில் வாழும் சமூகமாக நாம் உள்ளோமா என்ற சந்தேகம் பலமாகவே எழுகிறது. பள்ளிகள் அழகாகவும், தொகையாகவும் கட்டப்பட்டுள்ளன என்பது கண்கூடாகக் காணும் உண்மையாயினும் அப்பள்ளிகளின் முதற் பணியாகிய ஆன்மீக வேலைத் திட்டம் மிகச் சரியாக நடைபெறுவதில்லை என்பது கவலைக்குரிய உண்மையாகும்.
  • அல்லாஹ் பௌதீக விதிகளின் மீதே இவ்வுலகையும் மனித வாழ்வையும் இயங்க விட்டுள்ளான். அந்த விதிகளை ஏற்றுப் புரிந்து அதற்கேற்ப எமது வாழ்வை ஒழுங்கு படுத்தியுள்ளோமா என்பது அடுத்த பெரும் கேள்விக்குறியாகும்.

எமது அரசியல் பலம், பொருளாதார பலம், கல்விப் பலம் என்ற அடிப்படையான மூன்று பகுதியிலும் எமது பலவீனம் மிகவும் கடுமையானது. இந் நிலையில் இத்தகைய சிக்கள்களையும், அச் சிக்கள்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவதும், தொடர்ந்த அழிவுகளுக்குட்படுவதும் தவிர்க்க முடியாதது.

பொருளாதாரப் பகுதியில் இஸ்லாம் வலியுறுத்திய சமூகக் கூட்டுப் பராமரிப்பு என்ற ஒரு விடயத்தை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு முஸ்லிமும் அடுத்த முஸ்லிமுக்கு குடும்பம் என்ற வகையிலோ அண்டை வீட்டான் என்ற வகையிலோ சகோதர முஸ்லிம் என்ற வகையிலோ பொருளாதார ரீதியாகப் பொறுப்பாகிறான் என்பது இக் கோட்பாட்டின் பொருளாகும். இந்த இஸ்லாமியக் கருத்து ஓரளவாவது கடைப்பிடிக்கப் பட்டிருந்தால் வறுமை எமது சமூகத்தில் மிகக் குறைந்து போயிருக்கும். அதன் விளைவாக வறுமையால் எழும் தீமைகளும் குறைந்து போகும், இந் நிலையில் இனக் கலவரங்களுக்கான காரணங்களில் சிலவற்றை அது இல்லாமல் செய்திருக்கும்.

அரசியல், கல்விப் பலம் என்பவையும் இத்தகையவைதான். அவ்விரு பகுதிகளிலும் நாம் பலம் பெறும் போது பாதுகாப்புடன் வாழும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கும். அடுத்த பலம் ஒற்றுமைப் பலமாகும். நாம் பிளவுற்று, சிதறுறும் போது பலவீனப்பட்டுப் போவோம் என்பது தெளிவானதொரு உண்மையாகும்.

ஆனால் ஒற்றுமைக்குக் கருத்துச் சுதந்திரம் அடிப்படையாகும். எமக்கு மாற்றமான ஒரு கருத்தை அடக்கி ஒடுக்க நாம் முற்படும் போது அக் கருத்தைச் சுமந்தவன் எம்மை வெறுப்பான், குரோதம் கொள்வான், தனியாகப் பிரிந்து செல்வான். எம்மைப் போன்ற சிறுபான்மை நிலையில் அடுத்த சமூகங்களோடும் இணைந்தும் கொள்வான்.

  • முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல்:

முஸ்லிம் அல்லாதவர்களோடு ஒட்டி உறவாடும் தவிர்க்க முடியா நிலையிலுள்ள நாம் எம்மை மூடுண்ட சமூகமாக்கி, அடுத்த சமூகங்களை விட்டு ஒதுங்கி, தனிமைப்பட்டு போதல் இன முறுகல் நிலையை உருவாக்கும், கடுமையாக்கும் பிரதான காரணியாகும். எனவே அத்தகைய மூடுண்ட சமூக நிலையிலிருந்து வெளிவந்து வாழ வழிகாட்டும் இறுக்கமற்ற சிந்தனைகளையே இஸ்லாமிய அறிவுப் பாரம் பரியத்திலிருந்து நாம் தெரிவு செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் வழிகாட்டலாகிய இந்த மூன்று உண்மைகளையும் புறம்தள்ளிவிட்டு பிரார்த்தனையோடு துஆவோடு மட்டும் நின்று விடுவது பசியின் போது உணவைத் தேடாது இறைவா என் பசியைப் போக்கிவிடு என்று பிரார்த்திப்பதற்கு ஒப்பாகும்.

Reply