இலங்கை அரசியலும் தேர்தல் தந்த செய்தியும்

தேர்தல் நடந்து முடிந்தது. உள்ளூராட்சி சபைகள் இம் மாதம் இயங்க ஆரம்பிக்கும். இத்  தேர்தலில் முன்னால் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றார் என்றாலும் மொத்தவாக்குகளில் 45 % க்கூட அவரது கட்சி தாண்டவில்லை எனும் போது பொதுவாக மக்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமையாக அவரில்லை என்பதே உண்மையாகும்.

சிறீ லங்காவின் பிரச்சினை இதுதான். சுதந்திரத்திற்குப் பின்னான அதன் வரலாற்றில் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமை தோன்றவே இல்லை. அந்தப் பின்னணியில் இன முரண்பாடும் அதனால் உருவாகும் சிக்கல்களும், கைகலப்புகளும், இனக் கலவரங்களும் இந்த நாட்டின் சாபக் கேடாகிப் போய்விட்டது. சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற பிரதான சமூகங்கள் ஒன்றிலொன்று நம்பிக்கையின்றி ஒன்றையொன்று பார்த்துப் பயத்துடன் வாழ்வதே இந்த நாட்டின் தலைவிதியாகப் போய்விட்டது.

உண்மையில் அனைத்து சமூகங்களினதும்  பொதுமக்களின் நிலையும் இதுவா எனக் களத்தில் நின்று ஆராய்ந்தால் அவ்வாறல்ல என்று சொல்ல வேண்டும் போலுள்ளது. முதன்மையாக எல்லா சமூகங்களில் அரசியல் தலைமைகளும், மத தலைமைகளில் சிலரும், படித்த வர்க்கத்தினரில் ஒரு சாராருமே இந்த இன முரண்பாடுகளை வளர்த்து வருகிறார்கள் என்பதை ஓரளவு இனங்கான முடிகிறது.

அரசியல் தூய்மையற்று சிக்கல்கள் பல நிறைந்ததாக இலங்கை காணப்பட இதுவே முதன்மையான காரணம். இந்தப் பின்னணியில் கீழ்வரும் போக்குகள் விளைவாக வருகின்றன:

  1. வாக்களிக்கும் போது மக்கள் பெரும்பாலும் நேர்மையானவரோ இல்லையோ, தகுதியானவரோ, தகுதியற்றவரோ தம் இன மக்களையே தெரிவு செய்கிறார்கள்.
  2. குறிப்பிட்ட இனப் பின்னணியைக் கொண்ட கட்சிகள் தோன்றுவது இயல்பானதாக ஆகிறது.
  3. நாட்டின் பொது நன்மைக்காக உழைப்பது பின் தள்ளப் பட்டு ஒவ்வொரு சமூகமும் தங்கள் அரசியல் தலைமைகள், கட்சிகள் ஊடாக தமது இன நலனை மையப் படுத்தியே செயற்படுகிறார்கள்.
  4. நாட்டில் காணப்படும் பொதுத் தீமைகளுக் கெதிராகப் போராட அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்தல் சாத்தியமற்றதாகவே உள்ளது.

இந்த வகையில் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாயிருப்பது இந்த இன முரண்பாடேயாகும். இதன் காரணமாகவே அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்யும் எமது ஜனநாயக செயற்பாடுகளும் இந்தப் போக்கில் உள்ளன.

இது எமது நாட்டு அரசியலில் காணப்படும் பிரதான அடிப்படையான சிக்கல். இப்போது இரண்டாவது பிரச்சினைக்கு வருவோம்.

சுதந்திரத்தோடு நாடு எமக்கு கையளிக்கப்பட்டது. மேற்கத்திய ஜனநாயகம் எமது அரசியல் முறைமையாக மாறியது. ஆனாலும் ஜனநாயக விழுமியங்களை ஏற்கும் அறிவு, மனப் பக்குவம் எமது மக்களுக்கு ஊட்டப்பட்டதா என்பது கேள்விக்குறியே. அதன் விளைவாக ஜன நாயக விழுமியங்களுக்கு மாற்றமான கீழ்வரும் அடிப்படைச் சீர்கேடுகளை நாம் அவதானிக்கிறோம்:

  1. நாட்டின் வளங்களை மக்கள் அனைவரும் அனுபவிக்க வழி செய்யும் வகையில் அவ்வளங்கள் நீதியான முறையில் பகிரப்படுவதில்லை என்பது அவதானிக்கத் தக்க உண்மை.
  2. நாட்டை ஆளும் அதிகாரம், பாராளுமன்றம் முதல் நாட்டை ஆளும் நிர்வாக கட்டமைப்புகள் வரை எல்லா சமூகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று கூற முடியாத நிலையும் உள்ளது.
  3. எதிர்க்கட்சி ஒழுங்கு எப்படியாவது ஆட்சியிலிருக்கும் கட்சியை வீழ்த்திவிட்டு, தான் அவ்விடத்தில் உட்கார்வதற்கான செயற்பாடுகளைக் கொண்டே இயங்குகிறது. ஆட்சியிலிருக்கும். அரசாங்கத்தின் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைத்து நாட்டு நலனை நோக்காகக் கொண்டு அத்தகைய ஒத்துழைப்பதுவே எதிர்க்கட்சியின் பணியாகும். ஆனால் அதனை நாம் எம் நாட்டில் காண்பது மிகவும் அரிது.

நாம் இதுவரை குறிப்பிட்டுவந்த எமது ஜனநாயகப் பின்னணியிலேயே கடந்த உள்ளூராட்சித் தேர்தலும் நடந்து முடிந்தது. அத் தேர்தலின் புள்ளி விபரங்களை பலரும் பகுத்துப் பிரித்து ஆராய்ந்துள்ளனர். அதனை நாம் மீண்டும் விவரிக்காது தேர்தல் காட்டும் சில அடிப்படை உண்மைகளை அவதானிப்போம்:

  1. 50% க்கு மேல் வாக்கைப் பெற்று மக்கள் பெரும்பான்மையால் தெரிவு செய்யப்படும் கட்சி இங்கொன்றுமே இல்லை. வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா பொது ஜன பெரமுண69% வாக்குகளைப் பெற்றது. அவர் கட்சியை சிறுபான்மையினர் பெரும் பாலும் புறக்கணித்துள்ளனர். பெரும்பான்மையினரான சிங்கள மக்களில் கூட ஒரு கணிசமான தொகையினர் அவரைப் புறக்கணித்துள்ளனர்.

சிறுபான்மையினர் பெரும்பான்மை இனத் தேசிய கட்சிகளை ஏற்காது ஒதுங்குதல் 1980க்குப் பிறகான பொது உண்மையாகப் போயுள்ளது. ஆனால் இம் முறை பெரும்பான்மைச் சமூகத்தினர் கூட தம்மை ஆளும் கட்சி எதுவாக இருக்க வேண்டும் என்பதில் ஒரு வகைத் தடுமாற்றத்தையே காட்டியுள்ளனர்.

  1. சிறுபான்மைச் சமூகத்தினுள்ளும் இதே நிலைமையைத் தெளிவாகவே அவதானிக்க முடிகிறது. வட கிழக்கில் ரவுப் ஹகீம், ரிஷாட் பதிஉத்தீன், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் என்போரில் யாருமே முழுமையாக ஏற்கப் படவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் பல பகுதிகளில் பின்வாங்கியுள்ளது என்பதுவே உண்மை. ஆயினும் அந்த இடத்தில் இன்னொரு கட்சியை அமர்த்தவும் மக்கள் தயங்கி உள்ளனர். பழைய தலைமைகளை எம்மால் ஏற்க முடியவில்லை, முழுமையாக விடவும் என்ற செய்தியைத்தான் மக்கள் சொல்ல முயன்றுள்ளனர்.
  2. தமிழ் சிறுபான்மையினரும் இதே நிலையையே அடைந்துள்ளனர். இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பின்னடைவை இத் தேர்தலில் கண்டுள்ளது என்பது மிகவும் தெளிவான உண்மை. ஈ.பி, டி.பி, ரெலோ, குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் இடம் பிடித்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாக ஆட்சியமைக்கும் நிலையைப் பல இடங்களில் இழந்து கூட்டுச் சேர வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது.
  3. முஸ்லிம், தமிழ் சமூகங்களினுள்ளே புதிய அரசியல் தலைமைகளை நோக்கி நகர முற்படும் நிலைமையொன்றுள்ளது. ஆனால் புதிய தலைமைகள் பற்றிய முழு நம்பிக்கை இன்மையாலும், அப் புதிய தலைமைகள் அரசியலுக்கான புதிய பாதையைத் தெளிவாகக் காட்டாமையாலும் அந்த நகர்வு மிகவும் தயக்கத்துடனேயே இடம் பெறுகிறது. NFGG முஸ்லிம்களுக்கான புதிய அரசியல் தலைமையை முன் வைக்கிறது. அவர்கள் வெற்றிகாணவில்லை. காத்தான்குடி போன்ற கிழக்கு மாகாணப் பகுதிகளில் கூட ஒரு வட்டாரத்திலேனும் வெற்றி பெறவில்லை என்பது உண்மையேயாயினும் பல உள்ளூராட்சி சபைகளில் பலமான எதிர்க்கட்சியாக உட்காரும் சந்தர்ப்பம் அதற்குக் கிடைத்துள்ளது. அத்தோடு அதன் தோல்வி சிறியது. மக்கள் இரண்டாவது கட்சியாக அதனைக் கண்டுள்ளனர் என்று இந்த வகையில்தான் கூற முடிகிறது.

இதே நிலைதான் தமிழ் சமூகத்திலும் புதிய தலைமைத்துவமொன்றை அங்கும் மக்கள் எதிர் பார்க்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களில் இதனை மிகச் சரியாகவே இனங்காணலாம். ஆனால் ஒரு ஷரத்து இரண்டு சமூகங்களிலும் அந்த புதிய தலைமைகள் தம்மை மிகச் சரியாக முன்வைக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் தாம் விட்ட தவறுகளை மிகச் சரியாக இனம் கண்டு அவற்றை நீக்கி சீரமைத்துக் கொள்ளவும் வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அதற்கான அரசியல் பாதை என்ன? அதற்கான கோட்பாட்டு விளக்கம் யாது? யதார்த்த உலகில் அதன் பிரயோகமென்ன? முஸ்லிம் சமூக அபிவிருத்திக்கான எமது திட்டங்கள் யாவை? இந்தக் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களோடு மக்கள் முன் இப் புதிய தலைமைகள் செல்ல வேண்டும். அவ்வாறே இன்னொரு முக்கிய அடிப்படைக் கேள்வி உள்ளது:

தனிக்கட்சி அரசியல் என்பது இரண்டு கேள்விகளை தற்போதைய சூழலில் எழுப்புகிறது:

  1. அது ஒரு இனவாத அரசியலாக அமைகிறது. தேசத்தைப் பிரதிநித்துவப் படுத்தாது ஓர் இனத்தை அது பிரதி நிதித்துவப் படுத்துகிறது. இந்த வகையில் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று இன முரண்பாட்டுக்கு வழி வகுக்கும் இப் போக்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தடையாக அமைகிறது. நடந்து முடிந்த தேர்தலில் இனப் பின்னணியைக் கொண்ட கட்சிகள் வெற்றிபெறத் தவறியமை இக் கருத்தைக் காட்டுவதாகவும் அமைகிறது என இவ்வாறெல்லாம் தனிக்கட்சி பற்றி வாதிக்கவும் முடிகிறது.

உண்மையில் ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுத்தீன், அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் தம்மை முஸ்லிம் தனித்துவத் தலைமையாகக் காட்டிக் கொண்டாலும் பெரும்பான்மைக் கட்சிகளின் விசுவாசமான தலைமைகளாகவே அவர்கள் உள்ளனர்:

இந் நிலையில் தனிக் கட்சியாக எழுந்துள்ள புதிய தலைமைகள் இக் கேள்விக்கான நடைமுறைப் பதில் பற்றிச் சிந்திக்கக் கடமைப் படுகின்றனர். இதே பின்னணியிலேயே தனிக் கட்சி என்ற சிந்தனை வட கிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தினாலும் தெற்கு முஸ்லிம்களது அரசியல் சூழலோடு  அது ஒத்துவரமாட்டாது என்ற பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இக் கருத்தையும் கவனத்தில் கொண்டு இப் பிரச்சினை ஆராயப்பட வேண்டும்.

  1. தனிக் கட்சி அரசியல் என்பது யதார்த்த நிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கொள்கைவாத இலட்சிய அரசியலாகவே காணப்படுகிறது. சாதாரண மக்களது மன நிலைக்கும், முஸ்லிம் சமூக வாழ்வின் யதார்த்தத்திற்கும் இது பொருந்தமாட்டாது என பலரும் வாதிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த இரண்டு கருத்துப் பின்னணிகளிலிருந்தும் அரசியல் புகுந்துள்ள புதிய தலைமைகள் தமது அரசியல் போக்கை ஒரு முறை நன்கு மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து தமது அரசியல் போக்கை மிகச் சரியாக வகுத்துக் கொண்டு ஒரு வழிவரை வரைபடத்தோடு (Road Map) களமிறங்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன முன்னால் நிற்கின்றன. அவற்றுக்கு முன்னால் ஓரளவு கால அவகாசமுள்ள இந் நிலையில் மீளாய்வுக்கான மிகச் சிறந்த காலப் பிரிவு இது எனக் கருதலாம்.

தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்களும் முள்ளிவாய்க்காலின் பாரிய பின்னடைவின் பின்னர் பாரியதொரு கோட்பாட்டுச் சிக்கலிலும், அரசியல் நகர்வுக்கான மிகத்தெளிவான வழிவரைபடமின்றியும் தடுமாறுகிறார்கள் என்பது இந்தத் தேர்தல் மூலமாகவும் தெளிவாகிறது. பழைய தலைமைத்துவங்களைப் புறக்கணிக்க முடியாமல் புதிய தலைமைத்துவங்களை முழுமையாக ஏற்க முடியாமலும் இடைநடுவே தடுமாறும் நிலையையே இத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில் தனித் தமிழ்த் தயாகக் கோட்பாடு என்பதற்கான போராட்டம், அதனைக் கைவிட்டு எத்தகையதொரு இலக்கை முன் வைத்துப் போராடுவது, அல்லது அரசியலை மக்களது பொதுவான நல் வாழ்வுக்காக மட்டும் கொண்டு செல்வதா என்ற மூன்று வகைச் சிக்கலோடு தமிழ் சமூகம் இம் மூன்று சிந்தனைகளோடும் சிதறி நிற்கிறது.

சிங்கள பௌத்த சமூகத்தைப் பொறுத்த வரையில் சிறுபான்மை சமூகங்கள் நாட்டைக் கடித்துக்குதறி விடுவார்களோ? நாட்டின் மீதான முழு ஆதிக்கமும் எம்மிடமே இருக்க வேண்டும், அதனை அவர்கள் விடுவார்களோ, நாட்டு வளங்களில் பெரும் பகுதி எம்மிடமே இருக்க வேண்டும்: அதனைச் சிறுபான்மைச் சமூகங்கள் கவர்ந்து கொண்டு விடுவார்களோ? இந்தப் பயங்களே அவர்களை ஆட்டிப் படைக்கின்றன. இந்த மன நிலைகளிலிருந்து அவர்களால் வெளி வர முடியவில்லை. எனவே அவர்கள் நாட்டுத் தலைமைக்கு ஒரு பௌத்த சிங்களத் தலைமையையே தேடுகிறார்கள்.

இனங்களின் முரண்பாடு இந்த நாட்டை பின்தங்கச் செய்யும் அடிப்படையான காரணிகளில் ஒன்று. இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும், கூட்டு ஒத்துழைப்பும் இந் நாட்டை முன்னணி நாடுகளில் ஒன்றாக்கும் என்ற இந்தக் கருத்துக்கு வந்து இயங்கும் ஒரு சமூக அலை அவர்களுக்கு மத்தியில் தோன்றவில்லை. பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் இவ்வாறான ஒரு போக்கு பாரியளவு எழும் போதுதான் ஏனைய சமூகங்கள் தமது இன ரீதியான போக்கைச் சீர் திருத்திக் கொள்வது இலகுவாகும்.

பெரும் பான்மை சமூகத்தில் இவ்வாறான சிந்தனைப் போக்கு கொண்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் அது ஒரு பலம் பெற்ற சக்தியாகவோ சமூக அலையாகவோ மாற வில்லை. ஆயினும் அப்படி ஒரு வேலைத் திட்டம் அவர்களுக்கு மத்தியில் காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. அந்தச் சக்தியோடு சிறுபான்மை சமூகத்தவர்கள் எவ்வாறு இணைவது என்று சிந்திப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

Reply