இஸ்லாமிய வேலைத் திட்டம் – ஒரு கருத்து

இஸ்லாமியப் பணி என்பது: கீழ் வருவனவாகும்:

ஆன்மீக ரீதியாக முஸ்லிம்களைப் பக்குவப் படுத்தி நல்லொழுக்கம் உள்ளவர்களாக அவர்களை மாற்றல்.

குடும்பம், கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக வாழ்வின் பல்வேறு பகுதிகளுக்கான ஷரீஆவின் இலக்குகளைக் கண்டு அவற்றை நடைமுறைக்குக் கொண்ட வரல்.

அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை எத்திவைத்தல் என்ற கடமையின் பிரதான அடிப்படையான முன்மதிரி சமூகமாக இருத்தல்.

அடிப்படையில் இந்த மூன்று இலக்குகளை அடையவே இஸ்லாம் பற்றிய கருத்துச் தெளிவைக் கொடுக்கும் பயான்கள், வெள்ளிக் கிழமை குத்பாக்கள், கட்டுரைகள், புத்தகங்கள் பிரசுரம், அல் குர்ஆன் விளக்க வகுப்புகள், .இயக்கங்களின் மகா நாடுகள், பயிற்றுவித்தல் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடாத்தப்படுகின்றன.

எனினும் எமது சமூகம்:

ஒழுக்க ரீதியாகப் பின்தங்கிய சமூகம்

கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த சமூகம்.

முன்னைய காலத்தை விட குடும்ப ரீதியான பிரச்சினைகள் நிறைந்த சமூகம்.

அடுத்த சமூகங்களுக்கு முன்மாதிரியாக இருப்பது எப்படிப் போனாலும் இஸ்லாத்திற்கான பிழையான முன்மாதிரி வழங்கும் சமூகம்.

இவற்றிக்கெல்லாம் காரணங்கள் யாவை? எங்கே நாம் தவறுவிட்டுள்ளோம். இக் கருத்தை விளங்கிக் கொள்ள ஆன்மீகப் பக்குவத்தை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தொழுகை, நோன்பு, ஹஜ், இன்னும் சுன்னத்தான வணக்க வழிபாடுகள் அதற்காகவே உள்ளன. ஆயினும் எம் சமூகத்தில் சரியான ஆன்மீகப் பக்குவமோ, அதன் விளைவான நல்லொழுக்கமோ காணப்படவில்லை. காரணம் இந்த வணக்க வழிபாடுகள் தாக்கம் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி நாம் கவனமெடுக்கவில்லை. அவ்வாறே இதனை சமூகமயப்படுத்தல் வழிமுறை பற்றியும் எம்மிடம் நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டமொன்று இல்லை.

ஒரு போதும் இதனை அதாவது ஆன்மீக பயிற்றுவித்தலுக்கான ஒழுங்கை அல் குர்ஆனோ, ஹதீஸோ தெளிவாக முன் வைக்காது. இது எமது ஆய்வுக்கு விடப்பட்ட பகுதியாகும்.

இது தவிர கல்வியும், சுகாதார ஒழுங்கும், சிறந்த குடும்பத்தை ஆக்குவதற்கான வழிமுறையும், அரசியல் போராட்ட ஒழுங்கும் நேரடியாக அல் குர்ஆனிலிருந்தோ, சுன்னாவிலிருந்தோ பெற முடியாதவையாகும். அவற்றை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும்.

இவையே எமது சமூக வாழ்க்கையாகும். இவை பற்றிய செயற்திட்ட ஒழுங்கும், அவற்றை சமூக ரீதியாகப் பிரயோகிக்கும் வழிமுறையும் எம்மிடம் இல்லாவிட்டால் பயான்கள், குர்ஆன் வகுப்பு, சாதாரண தர ஆன்மீகப் பயிற்சி, ஜும்ஆ குத்பா என்பவை சரியான, திட்டமான பயன்கள் எதனையும் கொடுக்காது.

இந் நிலையில் நாம் சிறுபான்மை நாடுகளில் கிளைச் சட்ட வசனங்களில் மூழ்காது ஷரீஆவின் உயர் இலக்குகள் பற்றியும் அவற்றைச் சாத்தியப் படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றியுமே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Reply