இஸ்லாமிய அரசியல்…?

முஸ்லிம்களின் சமூக வாழ்வில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று அவர்களது ஆன்மாவைப் பலப் படுத்தி இறைபயமும், உயர்ந்த ஒழுக்கமும் கொண்டவர்களாக அவர்களை ஆக்கும் பணி. இப் பகுதியைக் கட்டியெழுப்பும் வகையிலேயே பள்ளி, அல் குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா, மார்க்கக் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகளில் இஸ்லாம், அரபுப் பாடத் திட்டம் என்பன காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் இப் பகுதியில் இரண்டு வேலைத் திட்டங்களைக் கொண்டு செல்லலாம்:

  1. இத்தகைய நிறுவனங்களைப் பாதுகாத்தலும், அவற்றுக்கான வசதிகளை அரசாங்கம் மூலமாகப் பெற்றுக் கொடுத்தலும்.
  2. இந் நிறுவனங்கள் பற்றிய ஆய்வுகளை செய்து அவற்றை மேலும் செயற்திறன்மிக்கதாக மாற்ற இப் பகுதியில் என்ன மாற்றங்களை அரச நிர்வாகத்தின் மூலமாகக் கொண்டு வரலாம் என்ற வேலைத் திட்டங்களுக்கு வருதல்.

தொழுகையுடனான ஆழ்ந்த ஈடுபாடும், அல் குர்ஆனுடனான தொடர்பும் உள்ள அரசியல் வாதிதான் இவ்வாறு சிந்திக்க முடியும், தொழுகையற்ற, அல் குர்ஆன் ஓதாத அரசியல் வாதி இவற்றின் பெறுமதி நன்கு விளங்கப் போவதில்லை. அவ்வாறே இஸ்லாம் பற்றிய விரிந்த சிந்தனைப் போக்குள்ள அரசியல் வாதியே இதனைச் சாதிக்க முடியும். இறுக்கமும், கடின போக்கும் கொண்ட ஒருவர் சிறுபான்மை சமூகத்தில் இப் பகுதியில் எதனையும் சாதிப்பது கடினம்.

இரண்டாவது பகுதி முஸ்லிம் சமூகத்தின் பௌதீக வாழ்வாகும். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒரு கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன இவற்றில் அடங்கும். இப் பகுதி மனிதனின் வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகளாகும். இவை நன்கு நிறை வேறாத போது ஆன்மீக வாழ்வு  கூடக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இப் பௌதீக வாழ்வுப் பகுதிக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஓர் அரசியல் வாதி அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்கக் கூடியவற்றை சாதித்துக் கொடுப்பதில் திறமை படைத்தவராக இருக்க வேண்டும். இதற்கு தூய்மையும், தியாக உணர்வும், அரசியல் சாணக்கியமும் அடிப்படைத் தகுதிகளாகும்.

எமது அரசியல் செயற்பாட்டில் இஸ்லாத்தை முன் வைத்தல் என்ற ஒரு பகுதி இருக்க முடியுமா? என்ற கேள்வியும் இங்கு எழ முடியும். இதற்கு நாம் ஆம் என்று பதில் சொன்னால் அதற்கு வித்தியாசமான  எதிர் விளைவு இருக்க முடியும். முதலில் அந்தக் குறிப்பிட்ட அரசியல் வாதி ஒரு அடிப்படைவாதியாகப் பார்க்கப்பட்டு அடுத்த சமூக அரசியல் வாதிகளால் ஒதுக்கப்பட முடியும். இந் நிலையில் இஸ்லாத்தை முன் வைப்பது எப்படிப் போனாலும் மேலே விளக்கப்பட்ட முஸ்லிம் சமூகத் தேவைகளுக்காகப் பேசுவது கூட அத்தகைய அரசியல் வாதிக்கு சாத்தியமற்றுப் போகலாம். அத்தோடு நாட்டை இஸ்லாமிய மயப் படுத்தப் போகிறான் என்ற எதிர்கோஷம் எழுந்து முஸ்லிம் அரசியலையே அது குழப்பக் கூடும். ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த அரசியல் வாதிக்கு எதிராக நிற்கக் கூடிய சூழலும் உருவாகுவது தவிர்க்க முடியாமல் போகும்.

இத்தகைய சூழல்களின் பின்னணியில் நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்தல் என்ற கருத்தோடு களமிறங்குவதே பொருத்தமானதாகும். இந் நிலையில் அவர் இரண்டு வகையில் செயற்பட வேண்டும்:

  1. ஊழல், மோசடி, ஒழுக்க சீர்கேடுகள், சூழல் மாசடைதல், பல் தேசியக் கம்பெனிகளின் மோசமான சுரண்டல் போன்ற பொதுத் தீமைகளுக்கெதிராகப் போராடுவதில் முன்னணியில் நிற்றல். வறுமைப் பட்ட மக்கள், அநீதியிழைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கதினர், அடிப்படை வசதிகளற்ற அல்லது போதுமானளவு இல்லாத கிராம மக்கள் இவர்கள் பக்கமாக நின்று உழைப்பதும் இன்னொரு முக்கிய பகுதியாகும்.
  2. நாட்டைக் கட்டியெழுப்புவதில் சிந்தனைப் பங்களிப்பொன்றைச் செய்தல். இஸ்லாம் மனிதர்களுக்காக வந்தது. அவர்களது பிரச்சினைகளுக்கு அங்கே நிச்சயமாகத் தீர்விருக்கிறது. இந்தக் கருத்துப் பின்னணியில் நின்று தீர்வுகளை முன் வைத்தல்.

இதற்கு குறிப்பிட்ட அரசியல் வாதிக்கு இஸ்லாம் பற்றிய ஒரு பரந்த அறிவுத் தெளிவிருக்க வேண்டும். அத்தோடு தனக்கு பின்னால் ஓர் ஆய்வுப் பிரிவினரையும் அவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடலை சுமுகமாகவும், விட்டுக் கொடுப்புகளோடும் கொண்டு செல்ல தனது சமூகத்தைப் பயிற்றுவித்தலுக்கான வழி பற்றியும் எமது அரசியல் வாதி திட்டமிட வேண்டும்.

இங்கு விளக்கிய பகுதிகளை ஓரளவாவது திட்டமிட்ட வகையில் தியாகத்தோடும், தூய்மையோடும் கொண்டு சென்றால் அதுவே இந் நாட்டைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய அரசியலாகும். அத்தகைய அரசியல்வாதிக்கு அல்லாஹ்விடத்தில் பெரும் கூலி கிடைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

Reply