அரசியல் விளிப்புணர்வும் தேர்தலும்

இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு நீண்ட அரசியல் வரலாறு உண்டு. அவர்கள் இலங்கையைத் தமது தாய் நாடாக ஏற்ற காலத்திலிருந்து இலங்கை அரசோடு அவர்கள் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தனர். அது மன்னர்கள் கால ஆட்சியின் போதான அவர்களது அரசியல் செயற்பாடாகும்.

பின்னர் ஐரோப்பியர்கள் இந்த நாட்டை அடிமைப் படுத்தி ஆண்ட போது போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் காலத்தில் முஸ்லிம்களது அரசியற் செயற்பாடுகள்; அடுத்து ஆங்கிலேயர் பாராளுமன்ற அரசியல் ஒழுங்கை அறிமுகப்படுத்தும் வகையில் சில அரசியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து இன்று வரையிலான முஸ்லிம்களது அரசியற் செயற்பாடுகள் என இவ்வாறு முஸ்லிம்களது இந் நாட்டின் அரசியல் வரலாற்றை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். இந்த நாட்டின் எமது அரசியல் வரலாற்றை விமர்சனக் கண்ணோட்டத்தில் விஞ்ஞான பூர்வமாக நாம் இது வரை ஆராயவில்லை.

கோல்புறூக் ஆணைக் குழுவின் பின்னணியில் பிரித்தானிய அரசு கொண்டு வந்த ஆட்சி முறையின் விளைவாக எம்.ஸி அப்துர் ரஹ்மான் என்பவர் முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்ட சபைக்கு நியமனம் பெற்றார். குறிப்பாக அது தொடக்கம் இன்று வரை நாம் செய்து வந்த அரசியல் செயற்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வாவது எதிர்காலம் நோக்கிய எமது அரசியல் பயணத்திற்கு அவசியமாகும்.

அத்தோடு அரசியலை ஒரு விஞ்ஞானமாகப் பார்த்து அது பற்றிய ஆய்வுகள் செய்து அதன் விளைவாக உருவாகும் முடிவுகள் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் ஒரு அரசியல் விளிப்புணர்வை உருவாக்கும் வேலைத் திட்டமும் எம்மிடம் முன்னெடுக்கப் பட வேண்டும்.

சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல், இராஜ தந்திரம், கொள்கை வகுப்பு, அரசியல் சிந்தனை வரலாறு போன்ற இப் பகுதிகள் பற்றிய கலந்துரையாடல்கள், ஆய்வுகள் என்பன எம்மிடையே வலுக்க வேண்டும். மார்க்க விடயங்கள் என்று நாம் சொல்லிக் கொள்ளும் சில பகுதிகளில் மட்டும் சர்ச்சைப் பட்டுக் கொள்ளல், அவற்றிக்காக மட்டும் பாரியளவு செலவழித்தல் என்பவற்றிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்.

இவ்வாறான “அரசியற்காலம்” வரும் போது மட்டும் அது பற்றிப் பேசி அவசர அவசரமாக யாரையோ சிலரை அல்லது சந்தர்ப்பத்தில் உருவாகிய சிலரை எமது அரசியல் தலைமைகளாக தெரிவு செய்து அனுப்புகிற பணியிலிருந்து விலகி அரசியல் விளிப்புணர்வு கொண்டவர்களாக நாம் மாற வேண்டும்.

வடக்கிலிருந்து முழுமையாக நாம் விரட்டப்பட்ட நிகழ்வு, அண்மைக் கால ஜின்தோட்ட கலவரம் வரை அடிக்கடி நிகழ்ந்து வரும் இனக் கலவரங்கள், பொருளாதார ரீதியாக நாம் பின்தங்கி வருகின்றமை, கல்விப் பகுதியில் எமது பாடசாலைகளில் வசதியின்மை, எமது பல கிராமங்கள் கீழ்க் கட்டமைப்பு வசதிகள் கூட இன்றி வாழ்கின்றமை என்பவை எல்லாம் எமது கவனத்தை ஈர்க்க வேண்டும். இத்தகைய நிலைகளுக்கும் எமது அரசியல் செயற்பாட்டிற்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய ஆழ்ந்த புரிதல் எமக்கு அவசியம்.

இறுதியாக எமது எதிர்கால அரசியற் போக்கு எவ்வாறமையும் என்ற எதிர்காலப் பார்வையொன்றும் எமக்கு அவசியம். அப்போதுதான் அதற்கேற்ப எம்மை அரசியல் ரீதியாக ஒழுங்கு படுத்திக் கொள்ளல் சாத்தியமாகும்.

இந்த சிந்தனைகளை கவனத்திற் கொண்டு எமது தேவைகள், உரிமைகள், எதிர்கால எமது அரசியல் என்பவற்றை நிர்ணயித்து வாக்களிக்க முயல்வோம்.

Reply