உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க…

தேர்தல் ஓரளவு சூடு பிடித்துள்ள நாட்களில் வாழ்கிறோம். பல்வேறு கட்சிகளும் சமூக அடிமட்டத்திலிருந்து தமது பலத்தை ஓரளவு பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. மாகாண சபைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க இந்தத் தேர்தலின் வெற்றி தோல்வி ஒரு புள்ளியாக அமைய முடியும்.

இந் நிலையில் வாக்காளர்களான நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்வது மிகவும் முக்கியமானது:

இத்தகைய தேர்தல் குறித்த கவனத்தையும் அறிவையும் பெறுவது மிக முக்கியமானதாகும். யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லையாயினும் அது ஒரு நிலைப்பாடு என்ற வகையில் அதற்கான சரியான காரணம் குறிப்பிட்ட நபரிடம் இருக்க வேண்டும்.

  1. இத்தகைய அரசியல் செயற்பாடுகள் குறித்த விளிப்புணர்வூட்டும் வேலைத் திட்டமொன்று எம் மத்தியில் இல்லாமை மிகப் பெரியதொரு நஷ்டமாகும்.

அரசியல் என்பது புறக்கணிக்கக் கூடியதல்ல. குறிப்பாக சிறுபான்மையினர் அதனால் பாதிக்கப் படுவது உலகெல்லாம் நாம் காணும் உண்மையாகும். அந்த வகையில் எமது நாட்டு அரசியற் போக்கு எவ்வாறுள்ளது? நாடு எவ்வாறானதொரு அரசியற் தலைமையை நோக்கிச் செல்கிறது? அது எவ்வாறு முழு நாட்டுக்கும், சிறுபான்மைக்கும் சாதகமாக அல்லது பாதகமாக அமைய முடியும்? என்பதெல்லாம் நாம் பதில் தேட வேண்டிய கேள்விகள்.

ரணில் விக்கிரமசிங்கவைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன இருவரின் தலைமையின் கீழும் பிரிந்து நிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கிட்டத்தட்ட ஒரு மூன்றாம் சக்தியாக ஜே.வி.பி. இவையே மையக் கட்சிகள்.

இக் கட்சிகளின் சிந்தனையும், அகவயமான போக்குகளும் யாவை? இனத் தீவிரவாத சக்திகளின் அரசியற் போக்கு எவ்வாறுள்ளது? அவர்களது எதிர்காலத் திட்டங்கள் யாவை? இக் கேள்விகளுக்கான சரியான இந்த அறிவுப் பின்னணியிலிருந்தே எமது அரசியற் போக்குகளை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வகையில் எமது அரசியற் தலைமைகளும், கட்சிகளும் இந்த அறிவுப் பின்னணியிலிருந்துதான் செயற்படுகின்றனவா? இதனை நன்கு விளங்கிக் கொள்ள அரசியற் பிரச்சாரங்களுக்கு வரும் அவர்களோடு நாம் இத்தகைய விரிந்த கலந்துரையாடல்களுக்கு செல்ல வேண்டும்.

உள்ளூராட்சி என்ற அடிமட்ட தேர்தலின் போது கூட உள்ளூராட்சி சபைகளில் தேர்தலில் நிற்கும் அரசியல் சக்திகளை நாம் மேற்கூறிய வகையில் இனம்காண வேண்டும். தேர்தலோடு உருவாகப் போகும் எமது உள்ளூராட்சி சபையின் அமைப்பில் நாம் எந்த இடத்தைப் பெறப் போகிறோம் என்பது பற்றிய அறிவு எமக்கிருக்க வேண்டும்.

இலங்கையின் பொதுவான அரசியற் போக்கு என்ன? குறிப்பிட்ட கட்சியில் அங்கத்துவம் வகிக்கக் காரணமென்ன? சுயேட்சையாயின் அதற்கான காரணமென்ன? வெற்றியடைந்ததன் பின்னர் அவரது நிலைப்பாடு எவ்வாறிருக்கும்? உள்ளூராட்சி சபையின் தேர்தலின் பிறகான அமைப்பு எவ்வாறிருக்கும் என்பது பற்றிய அவரது பார்வை என்ன? இனத் தீவிர வாதக் கட்சிகளின் நிலை யாது? போன்ற இக் கேள்விகளை எல்லாம் கலந்துரையாடி உங்களது வேட்பாளரைப் பற்றிய ஒரு தெளிவுக்கு நீங்கள் வர வேண்டும்.

இவ்வாறான தெளிவை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதும் மிக முக்கியமானதாகும். அதனை பொதுமக்களுக்கு மத்தியிலான அரசியல் பின்னணியுள்ள குழுக்கள் கொண்டு செல்ல வேண்டும்.

  1. மேற்குறிப்பிடப்பட்ட அறிவுப் பின்னணியோடு கூடிய செயற்பாடாக எமது வாக்களிப்பு இருக்க வேண்டுமே தவிர உலக இலாபங்களுக்காக அமைந்து விடக் கூடாது. அந்த உலக இலாபம் எதிர்காலத்தில் பல்வேறு உதவிகளைப் பெறுவதாகவோ எமது குடும்பத்தில் ஒருவரை உள்ளூராட்சி மன்றத்திற்கு அனுப்புவதாகவோ இருக்கலாம். வாக்களித்தல் என்பது இந்த நபர் தகுதியானவர்தான் எனச் சாட்சி வழங்குவதாகும். அந்தச் சாட்சி பொய்ச் சாட்சியாக அமைந்து ஒரு பெரும் பாவத்தை நாம் இழைத்துவிடக் கூடாது. தகுதியற்றவரை அனுப்பினால் அவர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நாமும் ஒரு வகையில் பொறுப்பாகிறோம் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தலைமைகளுக்குப் பொதுவாகவும் அரசியற் தலைமைகளுக்குக் குறிப்பாகவும் வரும் நோய்தான் ‘நான்’ என்ற மிகையுணர்வு. அதீத கௌரவம், பெருமை. தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னால் இந்த கௌரவ, பெருமை உணர்வை வளர்த்து மக்களை விட்டு அப்பால் நிற்க அத்தகையவர் முனைவர். படிப்படியாகப் பொருளாதார ரீதியாகவும் தன்னை அவர் உயர்த்திக் கொள்வார். இந்த நோயுள்ளவர்களை மிகச் சரியாக நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும். இத்தகையவர்களை எக் காரணத்தைக் கொண்டும் மேலே அனுப்பி விடக் கூடாது.

அடுத்து ஒரு ஹதீஸை உங்களது கவனத்திற்கு விடுகிறோம்:

மறுமைநாளில் மூன்று பேரை அல்லாஹ் பார்க்கமாட்டான் – அதாவது புறக்கணிப்பான்- அவர்களைத் தூய்மையானவர்களாகவும் காண மாட்டான். அவர்களுக்கு வேதனை தரும் தண்டனையுமுண்டு.

அவர்களில் ஒருவராக இறை தூதரால் சுட்டிக்காட்டப்பட்டவர்:

ஒரு மனிதன் ஒரு தலைமைக்கு பைஅத் செய்கிறான் – அதாவது அவரைத் தலைமையாக ஏற்கிறான் – ஆனால் தலைமையாக அவன் அவரை ஏற்றது உலகுக்காகத்தான். அந்த உலகால் அந்தத் தலைமை கொடுத்தால் திருப்தியடைகிறான். கொடுக்கா விட்டால் வெறுப்படைகிறான். (ஸஹீஹ் புகாரி: 2358)

இந்த விளக்கங்களிலிருந்து நாம் தேர்தலில் வாக்களிக்க இரண்டு தகுதிகள் வேண்டுமென்பதைப் புரிந்து கொள்கிறோம்:

  1. அறிவு: தேர்தல் பற்றியும், அரசியல் நிலைப் பற்றியும், வேட்பாளர்களாக நிற்போர் குறித்தும்.
  2. தூய்மை: உலக இலாபங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தாதிருக்க.

Reply