உள்ளூராட்சித் தேர்தல் – சில குறிப்புகள்

உள்ளூராட்சி முறைமை என்பது அரசியலில் அடிமட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்துவதாகும். இம் மன்றங்கள் மூலம் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல் முழுமையாகச் சாத்தியப் படாவிட்டாலும் மக்களின் அடிமட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இவை உந்து சக்தியாக உள்ளன.

ஒரு ஜனநாயக நாட்டில் சகல மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பது  அடிப்படையானது. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதாக இந்த உள்ளூராட்சி மன்றங்கள் அமைகின்றன.

உள்ளூர் மட்டத்தில் நிருவாக மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் பங்கு பற்றுவதற்கு பெருமளவு வாய்ப்புக்களை ஏற்பாடு செய்யும் நோக்குடன்  உருவாக்கப் பட்டதே இந்த உள்ளூராட்சி மன்றங்களாகும்.

பொது மக்கள், சுகாதாரம், பொது பயன்பாட்டு சேவைகள் என்பன தொடர்பான காரியங்களை ஒழுங்கு படுத்தல், கட்டுப் படுத்தி நிர்வகித்தல், மக்களின் சேம நலனையும், வாழ்க்கை வசதிகளையும் பாதுகாத்தல், மேம் படுத்தல் என்பவையே இதன் பணிகளாகும்.

(இலங்கையின் அரசியற் திட்டங்களின் பரிணாம – வளர்ச்சி – வேலுப் பிள்ளை குணரத்தினம்)

இது உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த மிகச் சுருக்கமான ஆனால் ஒரு தெளிவான விளக்கமாகும். இந்த விளக்கத்திலிருந்து கீழ்வரும் உண்மைகளை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

  1. அரசியற் பகுதியில் பயிற்றுவித்தலுக்கான முதல் நடைமுறை ஒழுங்காக இது அமைகிறது. எனவே மக்களை நிர்வகித்து ஆள்வதில் ஆரம்பப் பயிற்சியை இச் சபையில் அங்கத்துவம் வகிப்பவர் பெறுகிறார். இவ்வாறு நன்கு பயிற்சி பெறுபவர் ஒரு சிறந்த அரசியல் வாதியாக எதிர்காலத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
  2. தான் பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதேசத்தின் தேவைகள் குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருத்தல். அத்தகையதொரு கணிப்பீடு இந்த உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதியிடம் இருத்தல் அடிப்படையானதாகும். அத் தேவைகளை நிறைவேற்றும் தனது சக்தி பற்றிய மதிப்பீட்டின் மூலமாக தனது பிரதேசத்தில் தான் சாதிக்கக் கூடியது இவ்வளவுதான் என்ற நிர்ணயம் காணப்படல்.
  3. குறிப்பிட்ட கட்சிகள் தமது அங்கத்தவர்களைக் கூட்டாக இயங்குவதற்கான வாய்ப்புருவாகும் வகையில் ஒழுங்கு படுத்தி இருத்தல். அந்த வகையில் நிர்வாகக் கட்டமைப்பு, தனது பிரதேசத்தின் செயற்பாடுகளுக்கான வேலைப் பகிர்வு என்பவற்றை அது மிகச் சரியாக உருவாக்கி இருத்தல். அத்தோடு தனது செயற்பாடுகள் குறித்த கணிப்பீடு, விமர்சனம் என்பவற்றிக்கான நிர்ணயிக்கப்பட்ட கூட்டத்தொடரை அது கொண்டிருத்தல்.
  4. உள்ளூராட்சி மன்றத்தின் ஏனைய கட்சிகளோடு உறவாடுவதற்கான கொள்கையையும், ராஜதந்திர ஒழுங்குகளையும் ஆராய்ந்து ஒழுங்குபடுத்தி இருத்தல்.
  5. உள்ளூராட்சி மன்றத்தின் உள்ளே முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடலை மிகவும் கவனமாகக் கொண்டு செல்லல். அதற்கான வழிமுறை, கொள்கைத் தெளிவு என்பவை குறித்து கட்சியானது அங்கத்தவர்களைப் பயிற்றுவித்தல்.
  6. மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களோடு பேசுவதற்கான, அவர்களது விமர்சனங்களையும், தேவைகளையும் கேட்பதற்கான ஒரு வழிமுறையை ஒழுங்கு செய்ய கட்சியோ, தனி அங்கத்தவரோ தவறிவிடக் கூடாது.

இவ்வணைத்து விடயங்களையும் நோக்குகையில் உள்ளூராட்சித் தேர்தலில் நிற்கும் ஒருவர் கீழ்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் எனலாம்.

  • நேர்மை, உண்மை, நீதி என்ற உயர் ஒழுக்கங்களோடு அரசியல் சாணக்கியம் கொண்டவராக இருத்தல். அதாவது அரசியல் துறைக்குக் குறிப்பிட்ட நபர் பொருத்தமானவரா என நோக்க வேண்டும். நல்லவராக மட்டும் இருந்து போதாது அரசியல் சாணக்கியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • அரசியல் அறிவைக் குறிப்பாகவும், அபிவிருத்தி, வளப்படுத்தல் பற்றிய அறிவைப் பொதுவாகவும் கொண்டவராக இருத்தல்.
  • மக்களோடு இயல்பாகவே கலந்துறவாடும் பண்பு நிலை கொண்டவராக இருத்தல். இதற்கு பொறுமை, சகிப்புத் தன்மை, உணர்ச்சி வசப் படாமை, நெகிழ்ந்து கொடுக்கும் போக்கு, கருணை என்ற பண்புகளைக் குறிப்பாக மக்களை ஆள வருபவர் பெற்றிருக்க வேண்டும்.

மக்கள் இவற்றைக் கவனித்து தமது அங்கத்தவர்களைத் தெரிவு செய்வது அவர்களது பொறுப்பாகும்.

மக்களின் இப் பொறுப்பு பற்றி அடுத்து இன்ஷா அல்லாஹ் விளக்குவோம்.

 

Reply