ஜின்தோட்டை இனக்கலவரத்தின் பின்னணியில் எழுந்த சில சிந்தனைகள்

சிறுபான்மை பெரும்பான்மையால் நசுக்கப்படுவது உலகில் பொதுவாக நாம் காணும் உண்மை. அவ்வாறே சிறுபான்மையினர் அவர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக மதிக்கப் படுவது நாம் அவதானிக்கத்தக்க இன்னொரு பொது உண்மை.

எம்மைச் சுற்றியுள்ள சிறுபான்மையினர்களோடு ஒப்பிடும் போது எமது நிலை சிறந்தது என்பதும் ஏற்க வேண்டிய உண்மையாகும். இந்தியா, சீனா, மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களது நிலைமை எம்மை விட மிகவும் மோசமானது.

குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினரே அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள், நாட்டை இஸ்லாமிய மயப் படுத்த முனைபவர்கள் என நோக்கப்படுகிறார்கள். இதற்கு சர்வதேச சூழ்நிலையே பிரதான காரணம்.

இந் நிலையில் எம்முன் எழும் கேள்வி

சிறுபான்மை பெரும்பான்மை மோதல் தவிர்க்க முடியாததா? நாம் என்ன முயற்சி செய்தாலும் இந்த இனக்கலவரத்தில் எரிந்து போவதைத் தவிர்க்க முடியாதா? என்பதாகும்.

உண்மையில் 1974 துவக்கம் ஒவ்வொரு வருடமும் ஒரு இனக் கலவரமென தொடர்ந்து நாம் பாதிக்கப்பட்டே வந்துள்ளோம். சில வருடங்களில் இரண்டு இனக் கலவரங்களும் நடந்துள்ளது.

இப் பின்னணியில் மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கான பதிலை இவ்வாறு நாம் எடுத்துக் கொள்வது மிகவும் யதார்த்தபூர்வமாக இருக்கும்:

இனக் கலவரங்களை எம்மால் மிகவும் குறைக்கலாம். அத்தோடு இனக் கலவரத்தால் ஏற்படும் பாதிப்புக்களையும், இழப்புகளையும் எம்மால் பெரிமளவு குறைக்க முடியும்.

குறைந்தது இதனை இலக்காக கொண்டாவது எமது செயற்பாடுகள் அமைய வேண்டும், அதற்கான சில ஆலோசனைகளை இங்கே தருவோம்:

அ. முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவாடல் குறித்த கொள்கை ரீதியான சிந்தனையும், ஷரீஆ சட்டரீதியான விளக்கமொன்றை நாம் தயாரிக்க வேண்டும்.

ஆ. அந்த கருத்துத் தெளிவின் பின்னணியில் கிராமம் கிராமமாக முஸ்லிம்கள் பயிற்றுவிக்கப்படல் வேண்டும். இந்தப் பயிற்றுவித்தல் கிராமத்தின் எல்லா மட்டங்களையும் எட்ட வேண்டும். வெறுமனே கிராமத்தின் சிறியதொரு வீதத்தினரைக் கூட்டி அவர்களுக்கான ஒரு பயானாக அது அமைந்து விடக் கூடாது.

அவ்வாறே சிங்கள சமூகத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒரு மட்டத்தினருடனான பேச்சுவார்த்தையாக மட்டும் அது அமைந்து விடவும் கூடாது.

இ. முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவாடல்களுக்கான ஒரு சபை எல்லாக் கிராமங்களிலும் தொடராக இயங்கி வர வேண்டும். அவர்களிடம் அதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்று இருத்தலும் அதனை தொடர்ந்து நடாத்தி வரலும் முக்கியமானது.

ஈ. அரசியற் பகுதிசார் எமது வேலைத்திட்டங்களை இரண்டு வகையில் நாம் ஒழுங்குபடுத்தல் அவசியமாகும்:

  • தன்னலமற்ற, தூய்மையான அரசியல் தலைமைகளை கிராமம் கிராமமாக நாம் உருவாக்க முயற்சி செய்தல்.
  • பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் போது அது முஸ்லிமாகவே இருக்க வேண்டும் என்ற ஷரத்தை விட்டு விட்டு நல்லவராகவும், நாட்டு நலனுக்காக உழைப்பவராகவும், சிறுபான்மையினரின் பிரச்சினைகளைப் புரிந்து ஏற்றுக் கொள்பவராகவும் இருத்தல் என்ற விடயங்களுக்கு அழுத்தம் கொடுத்து இயங்குதல் பிரச்சினைகளை ஓரளவு அதிகமாகக் குறைக்கும்.

உ. ஒவ்வொரு ஊரும் அறிவு நுணுக்கம் கொண்ட, தன்னலமற்று உழைக்கக் கூடிய புத்திஜீவிகள் குழுவொன்றின் தலைமையை உருவாக்கத் திட்டமிட்டு இயங்கல் அதி முக்கியமானதொரு தேவையாகும்.

இறுதியாக: ஜின்தோட்டை முஸ்லிம் சகோதர்களுக்கு கீழ்வரும் சில ஆலோசனைகளை முன்வைக்கிறோம்:

அ. நீங்கள் நடந்து முடிந்த சம்பவங்களை மீட்டிப் பார்க்கவும், உங்களை மீள் ஒழுங்கு படுத்தவும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது மிகவும் அவசியம். அக் கூட்டத்தில் பின்வருவனவற்றை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்வது பொருத்தமாக அமையலாம்:

  • எமது புறத்தால் நடந்த தவறுகள் என்ன?
  • சென்ற காலங்களில் நாம் நடந்து கொண்ட முறை, எமது வாழ்க்கை அமைப்பு சிங்கள சமூகத்தினருக்கு மத்தியில் வெறுப்பையும், பொறாமையையும் உருவாக்கி இருக்கக் கூடுமா? அதனால்தான் எம்மோடு ஒட்டி வாழ்ந்த சில சிங்கள சகோதரர்களே எமக்கு எதிராக வேலை செய்தார்களா?
  • சகோதர சிங்கள சமூகத்தால் நிகழ்ந்த தவறுகளும், அத்துமீறல்களும் எவை? அவற்றை நாம் எப்படி நோக்க வேண்டும், எவ்வாறு மதிப்பிட வேண்டும்.
    சிங்களவர்கள் மத்தியில் எம்மை பற்றிய வெறுப்புணர்வு மிகக் கடுமையாக இருந்தது. அது பற்றி எரிய ஒரு சிறிய சந்தர்ப்பத்தை மட்டுமே எதிர்ப்பார்த்திருந்தது. என்று கூறலாமா? அல்லது சந்தர்ப்பத்தை மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொண்ட சில தீய சக்திகள் திடீரெனக் கிளம்பிவிட்ட அழிவு நிகழ்ச்சியா இது. அதாவது ஜின்தோட்டைப் பகுதியில் வாழ்ந்த சிங்கள சமூகத்தின் பெரும்பான்மையினர் நிகழ்ச்சி இவ்வாறு சென்றதை விரும்பவில்லையா?

ஆ. மீண்டும் எமக்கும் சிங்கள சமூகத்திற்குமிடையே நல் உறவை மிகவும் சிறந்த முறையில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்.

இந் நிலையில் இரு விடயங்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்:

  • இது ஒரு மார்க்கக் கடமை. கோபம், குரோதம், வெறுப்புணர்வு அதன் விளைவான அடி, தடி, சண்டை, இரத்தம் சிந்தல் என்பவற்றை இஸ்லாம் வெறுக்கிறது. இஸ்லாமிய சகோதரத்துவம் என்பதோடு மனித சகோதரத்துவத்தையும் அது வலியுறுத்துகிறது.
  • எமது வாழ்வு யதார்த்தமும் இதனை வேண்டி நிற்கிறது.

இப் பின்னணியில் எந்த விலை கொடுத்தாவது சமாதானத்தை நாம் கட்டியெழுப்பவே வேண்டும். அந் நிலையில் எமது வெறுப்புணர்வு, கோபம், ஆத்திரம் அனைத்தையும் விழுங்கிவிட்டு அமைதியுடன் இப்பணியை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு உறவைக் கட்டியெழுப்புவதில்தான் எமது எதிர்கால நல் வாழ்வு தங்கியுள்ளது என்ற வகையில் அதற்கான நுணுக்கமானதொரு திட்டத்தைத் தயாரித்துக் கொள்வதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இ. நஷ்டங்களையும், இழப்புகளை ஈடு செய்தல்: இதற்கான கணிப்பீட்டை மேற் கொள்ளலும், ஈடு செய்வதற்காக ஊரிலும் வெளியிலும் நிதி சேகரிப்பில் ஈடுபடலும்.

ஜின்தோட்டையின் எமது சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. அவர்களுக்கு ஸ்திரமான வாழ்வைக் கொடுப்பானாக. திட்டமிட்டு உழைப்பதற்கான மன அமைதியையும் திட சங்கற்பத்தையும் கொடுப்பானாக.

 

Reply