பொருளாதாரம், அரசியல் துறை சார்ந்த எமது இயக்கம்

இம்முறை இன்னொரு பகுதியைப் பார்ப்போம். அது பொருளாதாரப் பகுதியும், அரசியல் பகுதியுமாகும். முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் வாழ்வியக்கம் குறித்து தொடராகப் பார்த்து வருகிறோம். முதலில் பொருளாதாரப் பகுதி. அது சமூக வாழ்வின் பலத்தைத் தீர்மானிப்பதில் அடிப்படை பங்கை வகிக்கிறது. பொருளாதார ரீதியாகப் பலவீனமுற்ற சமூகம் கல்வி, அரசியல், குடும்பம், சுகாதாரம் போன்ற அனைத்துப் பகுதியிலுமே பலவீனமுறும். எனவே இப் பகுதி பற்றிய கரிசனை எமக்கு மிகக் கூடுதலாக இருக்க வேண்டும்.

இப் பகுதி கீழ்வரும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

  • பொருள் உற்பத்தி, பணிசார் உற்பத்தி, வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் போன்ற பல்வேறு கிளைப் பிரிவுகள்.
  • நிர்வகித்தல் திறன், திட்டமிடல்.
  • இறை மார்க்கத்தின் வரையறைகள், அது சுமத்தும் பொறுப்புகள்.

முதலிரண்டு பகுதிகளிலும் வழிநடாத்தும் தகுதி படைத்தவர்கள் அத் துறைசார் நிபுணர்களேயாவர் என்பது தெளிவு. மூன்றாவது பகுதி இஸ்லாமிய சட்டம் சார்ந்த ஆய்வாளர்களுக்குரியதாயினும் பொருளாதார துறைசார் அறிஞர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுதல் மிக முக்கியமானதாகும்.

இந்த வகையில் சமூக வாழ்வின் இப்பகுதியும் முஸ்லிம் துறை புத்திஜீவிகளின் பங்களிப்பை வேண்டி நிற்கிறது என்பது தெளிவு.

அரசியல் பகுதி சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் நலன்கள் சார்ந்த இஸ்லாமிய ஆய்வுப் பகுதி சார்ந்ததாகும். நேரடியான அல்குர்ஆன், ஸுன்னா சட்ட வசனங்கள் எதனையும் அங்கே காண்பது மிக அருமை. பொதுவான இஸ்லாமிய அரசியல் சித்தாந்தம் பற்றி இங்கு நாம் பேசவில்லை. அப்படிப் பேசினால் நிறைய அல்குர்ஆன், ஹதீஸ் வசனங்களை அங்கே நாம் காணலாம். ஆனால் நாமிங்கே சிறுபான்மை அரசியல் குறித்தே பேசுகிறோம்.

இந்த வகையில் எமது அரசியல் போக்கு குறித்து சிந்திக்க வேண்டியவைகள் கீழ்வருமாறு:

வட, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் சூழல் வித்தியாசமானது. ஏனெனில் அவர்கள் தமிழ் சமூகத்தோடு வாழ்கிறார்கள். அத்தோடு ஓரளவு பெரிய கிராமங்களில், பல பிரதேசங்களில் நெருக்கமாக அமைந்துள்ள கிராமங்களில் வாழ்கிறார்கள். ஆனால் வடகிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் சனத் தொகையில் பெருந்தொகையினராயினும் பெரும்பாலும் அவர்கள் சிறு சிறு கிராமங்களில் சிதறுண்டும் நிலத் தொடர்ச்சியற்றும் வாழ்கிறார்கள். இந்தப் புவியியல் காரணியின் பின்னணியில் முஸ்லிம் தனி கட்சி அரசியல், தேசிய பெரும்பான்மைக் கட்சிகளின் உள்ளே அரசியல் செய்தல் என்ற இரண்டில் எது முஸ்லிம்களது நலன்களுக்குப் பொருத்தமானது?

முஸ்லிம் சமூக உரிமைகளைப் பெற முயலும் அரசியற் போராட்டம், மைய நீரோட்டத்தில் கலந்து நாட்டின் நலன்களை வளர்ப்பதில் பங்களிப்பு செய்தல் என்ற அரசியற் போராட்டம் இந்த இரு நிலைப்பாடுகளை ஒரு சமநிலையில் வைத்துக் கொள்ளத் தக்க வகையில் அரசியல் போக்கை அமைத்துக் கொள்ளல்.

முஸ்லிம் தனித்துவத்தைக் காத்துக் கொள்ள உருவாகி உள்ள தனிப்பட்ட சமூக நிறுவனங்களைக் காத்துக் கொள்ளலும் அவற்றின் சாதாரண ஓட்டத்திற்கு வழி செய்தலும் அத்தோடு அதற்கான அரச ரீதியான ஏற்பாடுகளை ஆக்கிக் கொள்ளலும் என்ற இந்த அடிப்படையின் மீது அரசியல் செயற்பாட்டைக் கட்டியெழுப்பல்.

இன உணர்வு தூண்டப் படாத வகையில் அரசியல் வேலைத் திட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ளல். ஏனெனில் அரசியல் செயற்பாட்டிற்கும், போக்குக்கும் இன உணர்வு தூண்டப்படலுக்குமிடையே பலமான தொடர்பிருந்ததனை இறந்தகாலத்தில் நாம் பலமுறை அவதானித்தோம்.

இந்த வகையில் அரசியல் வேலைத் திட்டம் என்பது ஒரு புறத்தில் திட்டமிடல், கொள்கை வகுத்தல் ஆகவும் இன்னொரு புறத்தில் களத்திலான அரசியற் செயற்பாடாகவும் அமைகிறது. எனவே இதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் இரு வகையினராவர். அரசியற் துறைசார் அறிஞர்கள் அவர்களில் ஒரு வகையினர். இவர்களே கொள்கை வகுப்பாளராகவும், திட்டமிடுவோர்களாகவும் இருப்பர். இன்னொரு சாரார் களத்தில் உழைக்கும் அரசியல் வாதிகள்.

இஸ்லாமிய துறை சார்ந்தோரைப் பொறுத்த வரையில் அவர்களில் இஸ்லாமிய அரசியலை ஆழ்ந்து கற்று நடைமுறை இஸ்லாமிய அரசியற் போராட்டங்கள் குறித்த பரந்த அறிவுடையோர் ஒரு நல்ல பங்களிப்பை இப் பகுதியில் செய்ய முடியும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் எமது சுகாதாரப் பகுதி குறித்து நோக்குவோம்.

 

Reply