சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் சமூக இயக்கம்

வணக்க வழிபாடுகளின் பின்னர் சமூக விவகாரங்கள் சார்ந்த இயக்கமொன்று முஸ்லிம் சமூகத்திற்குள்ளது. அப் பகுதிக்கான வழிகாட்டலும் மிகவும் அடிப்படையானது. இப் பகுதி பற்றியே இங்கு நோக்குகிறோம்.

இப் பகுதியில் மிகவும் முக்கியமானதொன்றே கல்வித் துறையாகும். அது மூன்று துறைகளாக அமைகிறது:

கலைத்துறை : அரசியல், பொருளாதாரம், சமூகவியல், மனோதத்துவவியல், இலக்கியம் போன்ற பல கல்விப் பகுதிகளை இது அடக்கியதாகும்.

விஞ்ஞானத்துறை : மருத்துவம், பொறியியல், என்பவற்றோடு இன்னும் பல துறைகளும் இதில் அடங்குகின்றன.

கைத்தொழில் துறை : கட்டிடம் சார் பகுதி, மரவேலைகள் சார்ந்தவை, பல்வேறு இரும்புத் தொழில் சார்ந்தவை, வாகன திருத்தங்களோடு சம்பந்தப் பட்டவை என்பவற்றோடு இன்னும் பல பகுதிகளாக இவை பிரிகின்றன.

அடுத்து ஊடகத்துறையும், தனிக் கலையாக வளர்ந்து மனிதன் மீது மிகப் பாரிய தாக்கத்தை விளைவித்து வருகிறது.

அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்டே கல்வித்துறை இயங்குகிறது. கல்விப் பகுதியில் தனியார் துறைக்கு ஒரு பங்களிப்பு இருந்தாலும் அரசின் சட்ட ஒழுங்குகள் சார்ந்தே அதுவும் இயங்க வேண்டியுள்ளது.

இப் பகுதியில் சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடு கீழ்வருமாறு அமைய வேண்டும்:

  1. A/L தரம் வரையிலான பாடசலைகளை இயக்குவதில் பங்களிப்பு செய்தல்.
  2. கல்விப் பகுதியில் எமக்குள்ள உரிமைகளைப் பெற உழைத்தல்.
  3. பொதுவாகக் கல்விப் பகுதியில் பாலர்ப் பிரிவிலிருந்து பல்கலைக் கழக மட்டம் வரையில் சமூகத்தின் தேவைப் பற்றிய அறிவுடனும், நடத்தைச் சீர் நிலையைக் கவனத்திற் கொண்டும் மாணவர்களை நெறிப்படுத்தல்.
  4. பொதுவாக முஸ்லிம் சமூகம் ஓர் அறிவு சார் சமூகமாக அமைதல் வேண்டும் என்ற வகையில் சமூகத்தை விழிப்புணர்வூட்டல்.

கல்விப் பகுதியில் இன்னுமொரு முக்கியவிடயமுண்டு. எமது கல்வித்துறை முழுமையாக மதச்சார் பின்மையை அடித்தனமாகக் கொண்டது. எனவே பாடத்திட்டமும், கற்பித்தல் முறையும் அந்தப் பின்னணியையே கொண்டிருக்கும். அத்தோடு பாட நூல்கள், பல இடங்களில் இஸ்லாமியக் கருத்துகளுக்கு முரணான பகுதிகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக கலைத் துறையில் இதனை நன்கு அவதானிக்க முடியும்.

உண்மை இவ்வாறிருந்த போதும் இப் பாடத் திட்டங்களின் போக்கிலேயே கற்க நாம் நிர்ப்பந்திக்கப் படுகிறோம். ஒரு சில இடங்களில் மட்டும் பாடத்திட்டத்தின் அவ்வாறான பகுதிகளை மாற்றுவது பற்றி நாம் சிந்திக்க முடியும். ஆனால் பாடத் திட்டத்தில் பொதுவாக மாற்றம் கொண்டுவருவது என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்டதாகும். இந்நிலையில் மாணவர்கள் அப் பகுதிகளில் அறிவூட்டப் படலே சாதிக்கக் கூடியதாகும்.

கல்வித்துறை பற்றி இவ்வாறு நாம் நோக்கும் போது அது அத்தியாவசியம், தேவை, நலன் என்ற இஸ்லாமிய சட்டக் கொள்கைகளோடு சம்பந்தப்பட்டதாகும் என்பது தெளிவு. அந்த விதிகள் சுருக்க வசனத்தில் கீழ்வருமாறு:

  1. அத்தியாவசியமான நிர்ப்பந்த நிலை தடுக்கப்பட்டவற்றையும் – ஹராமானவற்றையும் – ஆகுமானதாக ஆகும்.
  2. சமூகப் பொதுத் தேவையானது தனிப்பட்ட மனிதனின் அத்தியாவசிய நிலை என்ற தரத்தைப் பெறும். இது இமாம் அபுல் மஆலி அப்துல் மலிக் அல் ஜுவைனி அவர்கள் வகுத்து பிறகு மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட விதியாகும்.
  3. நலன்களைப் பெற்றுக் கொள்ளலும், தீமைகள், சீர்கேடுகளை நீக்கலும் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படை என்பது இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.

சமூகத் தேவை, தனி மனித நிர்ப்பந்தம், நலன் என்பவற்றை கல்வித்துறை என்ற இப் பகுதியில் துல்லியமாகக் கணிப்பிட்டு அதற்கேற்ப தனி நபர்களையும், சமூகத்தையும் வழி நடாத்துவது இத்துறைசார் புத்திஜீவிகளுக்கே அடிப்படையில் சாத்தியமாகும். இஸ்லாமியத் துறை சார்ந்தோர் இப் பகுதியில் உதவியாளர்களாகவும், ஷரீஆப் பக்கத்திலான ஆலோசனை வழங்குபவர்களாகவும் இருப்பதே பொருத்தமாகும்.

இந்த வகையில் கிராமம் கிராமமாக அமைந்த புத்திஜீவிகள் குழுக்களின் வழிகாட்டல் மிக அவசியமாகும். அது சரியாக முன்னெடுக்கப் படும்போது மட்டும் தான் முஸ்லிம் சமூகத்தை வெறும் பாடத்திட்டங்கள் ஊடாக கல்வி பெற்ற சமூகமாக மட்டுமல்ல அறிவுசார் சமூகமாகவும் மாற்றுதல் சாத்தியமாகும்.

 

Reply