இஸ்லாத்தைக் கற்கும் வழி பற்றி ஒரு மீள் பரிசீலனை?

இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு இஸ்லாத்தைக் கற்கிறார்கள்? அவர்கள் அனைவரும் ஒரு முறையான கல்வி ஒழுங்கின் ஊடே இஸ்லாத்தைக் கற்றுக் கொள்கிறார்களா? முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் முதலாம் ஆண்டிலிருந்து கல்விப் பொதுதராதர சாதாரண தரம் வரையில் ஒரு முறையான ஒழுங்கின் ஊடே இஸ்லாத்தைக் கற்றுக் கொள்கிறார்கள்.

அதன் பின்னர் அவர்களில் பெரும்பாலோர் முறையாக இஸ்லாத்தைக் கற்கும் வாய்ப்பைப் பெறுவதில்லை. அவர்கள் “பயான்கள்” எனும் பேச்சுக்கள், உபதேச உரைகள் ஊடாகவே இஸ்லாத்தை தொடர்ந்து விளங்குகிறார்கள்.

மிகைப் படுத்திக் கூறல், குறிப்பிட்டதொரு கருத்துக்கு அழுத்தம் கொடுத்தல், உணர்ச்சி பூர்வமாகக் கருத்துக்களை முன்வைத்தல் என்பவை பயான்கள் – பேச்சுக்கள், உபதேசங்களின் இயல்பு. அத்தோடு பயான் நிகழ்த்துபவர்  ஒரு பாடம், ஒரு கட்டுரை எழுதத் தயாராவது போல் நுணுக்கமாகத் தயாராவதில்லை.

மிகப் பெரும்பாலான எமது பொது மக்களது நிலை இதுவாகும். பொதுமக்கள் எனும் போது எமது புத்திஜீவிகளையும் அடக்கியே கூறுகிறேன். அவர்களும் கூட இஸ்லாத்தை முறையாக கற்கப் பெரும்பாலும் முனைவதில்லை.

நூல்களோடு தொடர்புபட்டு இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள முனைவோரும் பொதுமக்களில் மிகச் சொற்ப தொகையினரேயாவர். ஆங்கிலத்தில் இஸ்லாத்தைப் படிக்க போதுமானளவு நூல்கள் இருந்தபோதும் எமது புத்திஜீவிகளில் பெரும்பாலோர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை.

இந்தப் பின்னணியிலேயே பயான்கள் – உபதேச உரைகள் – இஸ்லாத்தை மக்களுக்கு முன்வைப்பதில் பெரியதொரு இடத்தை வகிக்கின்றன என்று சொன்னோம். பயான்களின் – பொதுவான இயல்பின் காரணமாக இஸ்லாத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு.  மாறாக பிழையாக விளங்கிக் கொள்ளும் வாய்ப்பும் ஒரு கணிசமான அளவுக்கு இருக்கவே செய்கிறது.

இந்த சமூக நிலையின் காரணமாக பொது மக்களுக்கு மத்தியில் இஸ்லாம் பற்றிய நல்ல தெளிவு இல்லாததோடு இஸ்லாத்தின் பல பகுதிகள் பற்றிய பிழையான புரிதல்களும் காணப்படுகின்றன.

சுன்னத்துகள் சில வாஜிபின் தரத்திற்கு உயர்வதும், வாஜிபுகள் பல பொருட்படுத்தப்படாமல் விடப் படுவதற்கும், ஹராம்களுக்கு மத்தியில் தரவேறுபாடு புரியப்படாமைக்கும் காரணமிதுவேயாகும்.

இந்த அறியாமை அல்லது சரியான புரிதலின்மை தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை எல்லாப் பகுதிகளிலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் இஸ்லாமிய அறிவை அல்லது வழிகாட்டலைப் பெறும் வழிமுறை பற்றி கூடுதல் கரிசனை காட்டுவது அவசியம். இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்கள் போன்றன இவ் விடயத்தில் கவனம் செலுத்துவது எமது சமகாலத் தேவைகளில் மிக முக்கியமானதாகும்.

இப் பகுதியில் கவனம் செலுத்தப் படாத விடத்து நடத்தைக் குழப்பங்களும், வளங்கள் பொருத்தமற்றுப் பிரயோகிக்கப் படுவதும் இஸ்லாத்தைப் பிறசமூகத்தினர் பிழையாக புரிந்து கொள்ளலும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருக்கும்.

ஏன் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்கிறோம்? சுன்னத்தான உம்ரா ஏன் பலமுறை செய்யப்படுகிறது? பல்வேறு துறைசார் பர்ளு கிபாயா அறிவுப் பகுதி உலகக் கல்வி என ஏன் ஒதுக்கப் படுகிறது? இவ்வாறு இன்னும் பல சமூக நடத்தையோடு சம்பந்தப்பட்ட உண்மைகளை எடுத்துக் காட்ட முடியும். இக் கோளாறு திருத்தப்படுவது சமூகத்தின் சீர் நிலைக்கும், தனி மனிதர்களின் சீரிய சிந்தனைக்கும் வழி அமைப்பதாக அமையும்.

Reply