எமது வாழ்நிலையும் சட்டத்தீர்வுகளும் (பத்வாக்களும்)

நம்பிக்கைகள் உள்ளத்தோடும், சிந்தனையோடும் சம்பந்தப்படுபவை. அந்த வகையிற்றான் மனிதனை அவை இயக்கும். ஆனால் சமூக வாழ்வில் அவன் இயங்கும் ஒழுங்கை விளக்குவது சட்டமாகும். எனவே சட்டங்கள் பற்றிய தெளிவு தனிமனிதர்களுக்கும், சமூகங்களுக்குமே அவசியமாகும். இந்த வகையில் சட்டரீதியாக வழிகாட்டல்களை வழங்கும் பணி ஆழமாகச் செய்யப்பட வேண்டும்.

வணக்க வழிபாடுகளோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் சமூக இயக்கத்தில் பாரிய எதிர் வினைகளைத் தோற்றுவிப்பதில்லை. அப் பகுதியில் ஆங்காங்கே காணப்படும் சில சட்டங்கள் மட்டும் சமூகத்தில் அப்படியான எதிர் வினைகளைத் தோற்றுவிப்பதுண்டு. நோன்பு, பெருநாட்களின் போதான பிறை பார்த்தல் சட்டங்கள், பாங்கு சொல்லல் போன்றன இதற்கு சில உதாரணங்களாகும்.

ஆனால் கொடுக்கல் வாங்கல் சட்டங்கள், முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் சார் சட்டங்கள் அரசியல் வாழ்வு சார் சட்டங்கள், மருத்துவப் பகுதிசார் சட்டங்கள் போன்றன இவற்றிக்குச் சில உதாரணங்களாகும்.

இத்தகைய சட்டத்தீர்வுகள் (பத்வாக்கள்) மிக அவசியமாகும். ஏனெனில் அவையே முஸ்லிம் சமூக அங்கத்தவர்களைச் சரியாக இயங்க வைக்கும். சட்டத் தீர்வுகள் என்ற வழிகாட்டல்கள் இல்லாத போது அது முஸ்லிம் தனிமனிதர்களை பிழையான நடத்தைக்கு இட்டுச் செல்லும் அல்லது அவர்களது செயற்பாடுகளில் ஒரு வகைத்தடுமாற்ற நிலையை தோற்றுவிக்கும்.

இந்தச் சட்டத்தீர்வுகளின் போது நாம் கவனிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன:

  1. நாம் 21 ம் நூற்றாண்டின் அரசியல், சமூக, பொருளாதார, தொழிநுட்ப யுகத்தின் உள்ளே வாழ்கிறோம். இது ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் காலப் பிரிவை விட தலைகீழ் மாற்றங்கள் பலவற்றைக் கொண்டது. எனவே எமது சட்டப் பாரம்பரியத்திலிருந்து தெரிவு செய்தல், சில போது புதிய இஜ்திஹாதுகள் நோக்கிச் செல்லல் என்ற கொள்கையைக் கடைப் பிடித்தலே மிகப் பொருத்தமானதாகும்.
  2. சட்ட வசனம், சமூக யதார்த்தம், விளைவு என்ற மூன்று அம்சங்களையும் சட்டத் தீர்வின் போது நாம் கடைப் பிடிக்க வேண்டும். எமது தீர்வு எமது சமூகத்தின் உள்ளே குறுகிய நீண்ட காலத்துள்ளே என்ன விளைவைக் கொடுக்கும். அது என்ன வகைத் தாக்கத்தை அடுத்த சமூகங்களின் உள்ளே ஏற்படுத்தும் என்பதுவே விளைவை நோக்குதல் என்பதன் பொருளாகும் இதனை “மஆல்” என சட்டப் பரி பாஷையில் அழைப்பர்.
  3. நடைமுறைப் படுத்த இலகுவானதாக குறிப்பிட்ட சட்டத்தீர்வு அமைய வேண்டும். இல்லாத போது மக்களில் ஒரு பெரிய தொகையினர் அதனைப் பின்பற்றமாட்டார்கள். அல் குர்ஆனும் சுன்னாவும் சட்டங்களின் இவ்வாறான இலகு தன்மையை அதிகமாக வலியுறுத்தியுள்ளமை கவனத்திற் கொள்ளத் தக்க விடயமாகும்.
  4. மகாஸித் அல் ஷரீஆ என்ற சட்டக் கொள்கை சட்ட வாக்கத்தில் மிகவும் முதன்மைப்பட்ட ஒன்றாகும். அதனைப் பின்பற்றி சட்டத்தீர்வுகளை முன் வைத்தலே மிகப் பொருத்தமாக அமையும்.

சிறுபான்மை சமூகமாக வாழும் போது நாம் நான்கு விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது:

  1. அடுத்த சமூகங்களினுள்ளே இன உணர்வுகள் தூண்டப் படாததாக எமது நடத்தை அமைய வேண்டும். இன உணர்வு தூண்டப் படலுக்குக் காரணமாக அமையும் எமது நடத்தை எமக்கு பாரிய அபாயங்களைக் கொண்டு வரும். உடனடியான அந்த அபாயங்கள் வரா விட்டாலும் ஓரளவு நீண்ட எதிர்காலத்தில் அந்த அபாயங்கள் தோன்ற முடியும். அதாவது அந் நிலையில் எமது இரண்டாவது மூன்றாவது தலைமுறையினருக்கு வாழ முடியாத ஒரு நாடாக இந் நாட்டை நாம் விட்டுச் சென்று விடுவோம்.
  2. நாம் தஃவாவின் சமூகம் – எமது தூதை முன்வைத்தல் எமது முதன்மைப்பட்ட கடமையாகும், அதற்கு, அடுத்த சமூகங்களின் மன நிலையே மிகவும் அடிப்படையானதாகும். எம்மைப் பற்றிய நல்ல மனநிலையை அவர்களுக்கு மத்தியில் உருவாக்கலில் நாம் வெற்றியடைய வேண்டும்.
  3. எமது தனித்துவத்தைக் காத்துக் கொள்ளல் மிகவும் அடிப்படையானதாகும். இங்கு நாம் எமது தனித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய நல்ல தெளிவுக்கு வர வேண்டும். தனித்துவத்தைக் காத்தல் என்ற பெயரில் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய மூடுண்ட சமூகமாக நாம் மாறி விடக் கூடாது.
  4. கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக எம்மைப் பலமாகக் கட்டியெழுப்பிக் கொள்ளல் எமது பௌதீக மானசீக இருப்புக்கு மிகவும் அடிப்படையானதாகும்.

இந் நான்கு பகுதிகளிலும் முஸ்லிம்கள் அறிவு பூர்வமாகக் கவனமாக வழிநடாத்தப் பட வேண்டும். இஸ்லாமிய சட்ட தீர்வுகள் இந் நான்கு பகுதிகளிலுமே தாக்கமேற்படுத்தும் படுத்தும் என்ற  உண்மையை விளங்கி மேலே காட்டப்பட்டவாறு எமது சட்டத் தீர்வுகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளல் மிக அவசியமானதாகும்.

Reply