உசைர் ஆசிரியர் – ஒரு பன்முகப்பட்ட ஆளுமை

உசைர் ஆசிரியர் 18-09-2017 திங்கட் கிழமை இரவு இறையடி சேர்ந்தார். அவர் எனது தாயின் சகோதரியின் மகன் – எனது நாநா. எனக்கு சொந்த நாநா இல்லை. நானே வீட்டின் மூத்த பிள்ளை. அந்த நாநா இல்லாத குறையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

இந்தப் பின்னணியில் உசைர் நாநா என்ற எனது சொந்த உறவு பற்றி சற்றுச் சொல்கிறேன். அது எப்படி உறவினர்கள் கொஞ்சம் கரிசனை செலுத்தும் போது ஒரு குடும்பத்தையே வாழ வைக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருக்க முடியும்.

தந்தை இறக்கும் போது எனக்கு வயது 12 இருக்கும். என்னை விட இளையவர்கள் ஏனைய எல்லோரும். எனக்கு பின்னால் நான்கு சகோதரர்கள் மூன்று சகோதரிகள். தந்தை திடீரென மரணித்தார். அப்போது எங்களுக்கு ஒரு வீடு கூடக் கிடையாது. தந்தைக்குச் சொத்துக்கள் சில இருந்தன. ஆனால் அவை எங்கே எப்படி இருந்தன என்பது பற்றி அறிவு சின்னவர்களான எங்களுக்கு இருக்க நியாயமில்லை. எனினும் கலேவெலயில் இருந்த மூன்று கடைகளில் இரண்டால் வரும் கூலியால் மிகவும் கஷ்டப் பட்டு வாழும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.

எனது தந்தையோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர் உசைர் மாஸ்டர். இரவுகளில் நீண்ட நேரம் இருவரும் கதைத்துக் கொண்டிருப்பதை நான் பல முறை அவதானித்திருக்கிறேன்.

தந்தையின் மரணத்தின் போது மிகவும் வருந்தி அழுதவர்களில் மிகவும் முதன்மையானவர் உசைர் மாஸ்டர். அந்த அழுகையின் போது அவர் குறிப்பிட்டதெல்லாம் எங்களைக் காட்டி இந்த பிள்ளைகள் இனி எவ்வாறு வாழ்வார்கள் என்பதைத்தான். இந்த பிள்ளைகள் வாழ ஏதாவது செய்து விட வேண்டும் என்ற துடிப்பு எப்போதும் அவரிடமிருந்தது.

இந்தப் பின்னணியில் நான் GCE O/L பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்த அன்றே எமது சமையலறை உள்ளே வந்து எங்களுடனேயே சாப்பிட்டவாறு நளீமிய்யாவில் சேர்ப்பது பற்றி உசைர் நாநா பேசினார். இறுதியில் அவரது முயற்சியால் நளீமிய்யாவில் சேர்ந்தேன். தொடர்ந்து நளீமிய்யாவில் ஒரு ஆசிரியரானேன். ஆசிரியரான அந் நாட்களில்தான் தனியாக நாம் குடும்பத்தோடு இரண்டே அறைகளும் ஒரு சமையலறையும் கொண்ட சிறிய வீட்டில் குடியேறினோம். நளீமிய்யாவில் கிடைக்கும் சம்பளமே நீண்ட காலத்திற்கு எமது வாழ்வுக்கு ஒரே ஆதாரமாக அமைந்தது.

நழீமிய்யாவின் சேர்ந்தமை பெரியதொரு இஸ்லாமியப் பணிக்கு மிகவும் காரணமாக அமைந்தது என்பது மிகத் தெளிவு. அதற்கும் உசைர் மாஸ்டரே காரணமானார்.

இப்போது உசைர் மாஸ்டர் என்ற ஆளுமைக்கு வருவோம்.

முதலில் அவர் ஒரு நல்ல ஆசிரியர்:

மிகத் திறமையான ஆசிரியர். தான் எடுக்கும் பாடத்தை மாணவர்களை நன்கு கவர்ந்தீர்ந்து முன் வைப்பதில் அவர் மிகத் திறமைசாலி. எந்தச் சிக்கலான விஷயத்தையும் அவர் இலகுவாக முன்வைப்பதில் வெற்றி காண்பார். இது அவரிடம் படித்த  மாணவர்கள் பலரும் கண்ட உண்மை.

அவர் ஒரு நல்ல நிர்வாகி:

இயல்பாகவே அவரிடம் இந்தத் திறமை அமைந்திருந்தது. வீட்டில் பல முறை அதனை நான் அவதானித்ததுண்டு. பாடசாலையிலும் அதிபரோடு இணைந்து பாடசாலையை திறம்பட அவர் இயக்கிச் செல்வார். சில பாடசாலைகளில் அதிபராக இருந்து அக் குறிப்பிட்ட பாடசாலைகளை நன்கு இயக்கியுள்ளார். வெற்றிகரமான நிலைக்குக் கொண்டு வந்தார் என்பதை அக் கிராம மக்கள் பல சம்பவங்களாக சொல்வார்கள்.

அவர் ஒரு நல்ல வாசகர்:

அவரிடம் ஒரு நல்ல வாசிகசாலை இருந்தது. 1960 களில் வீடுகளில் வாசிகசாலை என்பது மிகவும் அரிதாக அவதானிக்கத் தக்க விடயம். அந்த வாசிகசாலையில் கிட்டதட்ட ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. அங்கு இஸ்லாமிய நூல்களோடு, கதைப் புத்தகங்களும், நாவல்களும், அறிவை வளர்க்கும் பொதுத் தலைப்புகளைக் கொண்ட நூல்களும் காணப்பட்டன. அறிவை வளர்க்கவும், என்னில் வாசிப்புப் பழக்கத்தை விட முடியாத பழக்கமாக உருவாக்கிக் கொள்ளவும் அந்த வாசிகசாலையே காரணமாக இருந்தது.

பிரச்சினைகளின் போது துரித முடிவெடுத்து இயங்குபவராக:

உசைர் மாஸ்டரிடம் இருந்த ஓர் அருமையான பண்பு பதட்டமுறாமை, நிதானம், கவனமாக இயங்கல் என்பவையாகும். ஆனால் அவர் சரியான முடிவுகளைத் துரிதமாகவே எடுத்தியங்குவார். நான் கண்ட இரண்டு உதாரணங்களை இங்கே பதிகிறேன்:

ஒரு முறை உம்மா சமையலறையில் வேலையாக இருந்தார். திடீரென உடையில் நெருப்புப் பற்றிக் கொண்டது. அங்கிருந்த எல்லோருக்கும் பதறிக் கூச்சலிடத்தான் முடிந்தது. ஆனால் அங்கு வந்த உசைர் மாஸ்டர் எந்தப் பதட்டத்தையும் காட்டாமல் நன்கு ஈரமாக அங்கு இருந்த சாக்கொன்றைத் தூக்கி உம்மாவின் மீது போட்டார். உடனே நெருப்பு அணைந்து எக் காயமும் இல்லாமல் உம்மா தப்பினார்.

ஒரு இரவு திடீரென சிறிய தம்பிக்கு வலிப்பு வந்து விட்டது. எல்லோரும் செய்வதறியாது பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தோம். உசைர் நாநா அங்கே வந்தார். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. தம்பியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். அப்போது தம்பிக்கு வாந்தி வெளியாகிக் கொண்டிருந்தது. அவற்றை எல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. அவரை தூக்கி ஊரிலிருந்த ஒரே ஆயுர்வேத வைத்தியரிடம் கொண்டு சேர்த்தார்.

பாடசாலை இயங்குவதில் அதிபரோடு ஒத்துழைக்கவும், அல்லது அவரே அதிபராக இருந்து இயங்கவும் அவருக்கு இப் பண்புகள் பெரிதும் கைகொடுத்தன. அவர் மிகச் சிறந்த நிர்வாகியாக இருக்க இப் பண்புகளே காரணம்.

இந்த பின்னணியில்  அவர் இறுதி காலப் பிரிவுகளில் பங்கொள்ளாமடை பள்ளி நிர்வாக சபையின் தலைவராக இருந்தார். அப்போது பள்ளியின் சொத்துக்களைக் காப்பாற்றுவதில் பெரும் பங்களிப்பு செய்தார். ஊரிலிருந்த பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிக்கவும், பள்ளியை ஒழுங்கு படுத்தவும் மிகுந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டார். இப் பகுதிகளில் அவர் பல இடங்களில் வெற்றி கண்டார்.

இறுதியாக அவரைப் பற்றி ஒரு முக்கிய பகுதியைக் குறிப்பிட்டாக வேண்டும்:

அவரிடம் இடதுசாரி சிந்தனையின் பாதிப்பிருந்தது. கம்யூனிஸ்டாக, ஷோசலிஸ்டாக அவர் இருந்தார் என்று நான் கூறவில்லை. சமூகத்தில் – குறிப்பாக பங்கொள்ளாமடையில் அக்குரணையில் பண பலமுள்ளவர்களும், உயர் குடியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்பட்டோரும் தலைமை வகிப்பது அவரைப் பொறுத்தவரையில் ஏற்கக் கூடியதாக இருக்கவில்லை. எனவே அடிமட்ட மக்களும் சமூகத்தின் தலைமைகளில் அமர வேண்டும் என அவர் கருதினார். அந்த வகையில் தனது ஊரில் அவர் போராடினார். அதில் வெற்றியும் கண்டார்.

உசைர் மாஸ்டர் அக்குரணையின் பாரம்பரிய UNP போக்கை சரிகாணவில்லை. அக்குறணை மக்கள் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும் என அவர் கண்டார். பத்யுத்தீன் மஹ்மூத் தான் முஸ்லிம் சமூகத்தை சரியாக வழிநடாத்தக் கூடிய தலைமை  எனக் கண்ட அவர் பின்னால் திரண்ட ஆசிரியர்கள் பலரோடு அவரும் நின்றார். Director ஷரீப் முஸ்லிம் சமூகத்திற்காக உழைத்த கலாநிதி பதியுந்தீன் மஹ்மூதோடு நின்ற ஒரு கல்வியாளர் அவரின் பின்னாலேயே உசைர் மாஸ்டரும் நின்றார்.

வெறுமனே கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதுக்கு ஆதரவு தெரிவித்தல் என்பதோடு அவர் நின்று விடவில்லை. நேரடி அரசியலிலும் இறங்கினார். டாக்டர்  மௌரூபை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது அக்குறணையின் கல்வியில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கண்டு அதற்காக இறங்கி உழைத்தார். ஆனால் அவராலும் அவர் இணைந்திருந்த குழுவாலும் அதனைச் சாதிக்க முடியவில்லை.

பின்னர் அரசியல் பலி வாங்களுக்கு உட்பட்ட உசைர் மாஸ்ட்டர் இறுதியில் ஆசிரிய தொழிலில் நம்பிக்கை இழந்த போது அதனை விட்டு விட்டு வியாபாரத்தில் நுழைந்தார். அந்தப் பாதையிலும் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்நோக்கினார் போல் தெரிகிறது.

இன்னொரு முக்கிய விடயம் அவரது விட்டைச் சுற்றி வாழ்ந்தவர்கள் பெருந் தொகையினர் மாற்று மதத்தவர்களாவர். அவர்களோடு சுமூகமாக உறவாடி எப் பிரச்சினையுமின்றி வாழ்வதில் அவர் வெற்றிகண்டார் என்பது மிகத் தெளிவு.

இவ்வாறு பன்முக ஆளுமை கொண்டு நேர்மையானதொரு போராளியாகத் திகழ்ந்த உசைர் மாஸ்டர் சமூகத்தில் நன்கு பிரகாசித்திருக்க வேண்டும். சமூகம் அவர் மூலம் பாரிய பயன்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏறத்தாழ அறியப்படாத மனிதராகவே வாழ்ந்து மரணித்தார். இதற்கான காரணங்கள் யாவை என்பது நன்கு நோக்கப்பட வேண்டியதாகும் :

  1. சமூகத்தின் பொதுப் புத்திக்கு எதிராகப் போவோர் பலருக்கு இவ்வாறு நடப்பது இயல்பு. சமூகத்தின் பல்வேறு சக்திகள் இத்தகைய மனிதர்களை மேலெழ விடுவதில்லை.

    உண்மையில் அது சமூகத்திற்குப் பெரும் நஷ்டமாகும். உசைர் மாஸ்டருக்கு உரிய முறையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு கல்லூரியையே அழகாக நடாத்தும் அதிபராகவும் ஒரு கல்வி நிர்வாகியாகவும் மிளிர்ந்திருப்பார்.

  2. அவர் இணைந்திருந்த குழுவினர் திட்டமிட்டு உழைத்துப் பாடுபடும் போக்கைக் கொண்டிருக்கவில்லை போல் தெரிகிறது. இலங்கையின் அரசியலும் 70களின் பின்னர் ஒரு குறிப்பிட்டகாலம் வரை UNP சார்பாகவே இருந்தது. இது இவர்களுக்கு பாதகமாக அமைந்தது.
  3. இஸ்லாத்திற்காக உழைக்கும் இயக்கங்களும் இத்தகைய மனிதர்களைப் புரிந்து அரவணைத்துக் கொள்ளும் நிலையில் அக்காலப்பிரிவில் இருக்கவிலலை என்றுதான் கூற வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் பல பகுதிகளில் இத்தகைய மனிதர்கள் பலரைச்சந்திக்க முடியும். ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளப் படாமையாலும், சமூக சக்திகள் அத்தகையவர்களைப் பலப்படுத்தாமையாலும் சமூகம் பாரிய இழப்புக்கு உட்படுகிறது.

Reply