ரோஹிங்கியா முஸ்லிம்கள்

மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள். பி.பிஸியின் தகவலின்படி 1000 வருடங்களுக்கு முன் குடியேறிய முஸ்லிம் வியாபாரிகளின் வழித்தோன்றல்களே இவர்களாவர்.

1824-1948 காலப்பிரிவு பிரிடிஷ் ஆட்சியின் போது குறிப்பிடத்தக்கதொரு இந்திய வங்காள தேச முஸ்லிம் வியாபாரிகள் மியன்மார் நோக்கி நகர்ந்தனர். இந்தியாவின் ஒரு மாநிலமாகக் கொண்டு பிரிடிஷார்  மியன்மாரை ஆட்சி செய்தமையால் இது நாட்டின் உள்ளே நடந்த நகர்வாகவே கணிக்கப்பட்டது. இது ஹியூமன் ரைட் வொச் தரும் தகவலாகும்.
-Human Right Watch-

அராகான் என்ற பகுதியில் குடியேறி வாழ்ந்து அங்கு பெரும் பான்மையாக வாழும் இம் முஸ்லிம்களின் தொகை தற்போது 1.1 மில்லியன் ஆகும். எனினும் அவர்களில் பெருந்தொகையினர் தற்போது வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

உலகிலேயே மிகக் கூடுதலாகக் கொடுமைக்குட்படுத்தப்படும் சிறுபான்மையினர் என வர்ணிக்கப்படும் இவர்களது பிரஜா உரிமை கூட 1982ம் ஆண்டு பறிக்கப்பட்டது. தொடர்ந்து கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் இவர்கள் இந் நாட்களில் இனச் சுத்திகரிப்பு என்ற பயங்கரக் கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி இங்கு விவரிக்கத் தேவையில்லை. அவை மிக அதிகமாகவே ஊடகங்கள்  ஊடாகப் பேசப்பட்டு விட்டன. இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில உண்மைகளைப் பார்ப்போம் :

  1. நீண்ட காலமாக பல கொடுமைகளுக்கும் உட்படுத்தப் படும் இவர்கள் தம்மை மிகச் சரியாக ஒழுங்கு படுத்திக் கட்டமைத்துக் கொள்வதில் வெற்றி பெறவில்லையா ? ஒரு சிறுபான்மை தனது நீண்ட எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் போதுமானளவு கவனத்தில் கொள்ளவில்லையா?
  2. ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாம் வாழும் பிரதேசத்தை ஒரு முஸ்லிம் நாடு போல் தோற்றமெடுக்கும் வகையில் அழைத்துக் கொண்டார்களா ? முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாமிய மயப்படுத்தல் பற்றிய பயம் வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டதா ?
  3. ரோஹிங்கிய முஸ்லிம்களின் அழிவை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான அதன் நகர்வுகள் மிக மெதுவாகவே உள்ளன. இஸ்லாமிய உலகம் கூட இப் பகுதியில் காத்திரமாக எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் வாழும் முஸ்லிம் சிறுபான்மைகள் இந்த உண்மைகளை நன்கு அவதானத்தில் கொண்டே வாழ வேண்டும். அவர்கள் தம்மை நன்கு ஒழுங்கு படுத்திக் கொள்வதே அவர்களுக்கான உண்மையான பாதுகாப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

Reply