இஸ்லாம் நடைமுறையாதல் – ஒரு சிந்தனை

இஸ்லாம் நான்கு பகுதிகளைக் கொண்டது. நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், ஒழுக்கம், சட்டம் என்பவையே அவையாகும். ஷரீஆவை நடைமுறைப் படுத்துகிறோம் என்னும் போது இந்த நான்கு பகுதியுமே அடங்கும். இந்த வகையில் ஷரீஆவின் பாரியதொரு பகுதியை சிறுபான்மையினரான நாமும் நடைமுறைப் படுத்த முடியும் என்பது தெளிவு.

நம்பிக்கையைக் குறிப்பாக இறை நம்பிக்கையையும், மறுமை நம்பிக்கையையும் மிகச் சரியாகக் கொடுப்பதிலும், அதன் மீது பயிற்றுவிப்பதிலும் நாம் வெற்றியடைய வேண்டும். இரண்டாவது வணக்க வழிபாடுகளை உயிரோட்டமாக நடைமுறைப்படுத்துவதிலும் நாம் வெற்றிபெற வேண்டும். இவ்விரண்டும் மிகச் சரியாக அமையும் போது ஒழுக்க வாழ்வு இயல்பாகவே சீர் பெறும். எனினும் ஒழுக்க வாழ்வை மிகச் சரியாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது மூன்று பகுதிகளாகப் பிரியும்:

  1. இறை தொடர்பு சார் ஒழுக்கங்கள்:
    உ-ம் இறைவன் மீது அன்பு வைத்தல், அவன் மீது பொறுப்புச் சாட்டல், அவனிடம் எதிர்பார்ப்பு வைத்தல், அவனிடம் திருப்தி காணல்…
  2. மனித தொடர்புகள்சார் ஒழுக்கங்கள்:
    உ-ம் உண்மை, நேர்மை, நீதி, பொறுப்புணர்வு, நம்பிக்கையோடு நடத்தல், உடன்பாடுகளை நிறைவேற்றல்…
  3. சிவில் ஒழுக்கங்கள்:
    உ-ம்: சூழல் பேணல், பொதுச் சொத்துக்களோடு நேர்மையாக உறவாடல், பொது நிர்வாக ஒழுங்குகளை மதித்து நடத்தல்…

நம்பிக்கை, வணக்க வழிபாடு, ஒழுக்கம் என்ற இம் மூன்று பகுதிகளும் சீராக அமையும் போது சட்டங்களின் தேவை குறைவாகவே இருக்கும். சட்டங்களை மதித்து நடப்பதுவும் மிகச் சீராகும்.

முஸ்லிம் சிறுபான்மை சமூகம் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா, பள்ளி, இயக்கங்கள் போன்ற பயிற்றுவித்தல் நிறுவனங்கள் ஊடாக சட்டம் தவிர்ந்த ஏனைய மூன்று பகுதிகளையும் நடைமுறைப் படுத்துவதில் திட்டமிட்டு இயங்க வேண்டும். வெற்றிகரமாக இதனைச் சாதிக்க பாடதிட்டம், பயிற்றுவித்தல் முறை, வளவாளர், புத்தகம், சஞ்சிகை, இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றைப் பயன்படுத்தும் திறன் அப் பயிற்சி  நிறுவனங்களிடம் காணப்பட வேண்டும்.

இஸ்லாத்தின் பெரும் பகுதியை நடைமுறைப் படுத்தும் சாதக நிலை எம் முன்னே காணப்படுகிறது. அப் பொறுப்பை மிகச் சரியாகச் சுமந்து இயங்கும் திறனையே நாம் பெற வேண்டும். இப் பகுதியில் எம் மத்தியில் காணப்படும் குறைபாடுகளும், கோளாறுகளும் யாவை என்பது பற்றி ஆராய்ந்து அவற்றை சீர் திருத்திக் கொள்ளும் நிலைக்கு நாம் வர வேண்டும். இப்போது நாம் ஓரளவு இயங்குகிறோம். பலவற்றைச் சாதித்தும் இருக்கிறோம். ஆனாலும் அவற்றையிட்டுத் திருப்தி காணமுடியாத நிலை எம்மிடம் உள்ளது. சில பகுதிகளில் எமது குறைபாடு மிகப் பாரியதாகவும் உள்ளது என்பது தெளிவு.

 

Reply