மீண்டும் வரலாற்றை நோக்கி…

“நாம் கட்டாருக்காகவோ துருக்கி சார்பாகவோ வாதாடவில்லை.  மீண்டும் வரலாற்று மேடையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரும் சமூகத்திற்காகவே வாதாடுகிறோம்.” (அறிஞா் முஹம்மத் முக்தார் அல் ஷின்கீதி)

முஸ்லிம் சமூகம் இப்போது நிற்கும் இடம் வரலாற்று மாற்றத்தின் கட்டமாகும். அரபு வசந்தம் என்ற  அரபுலகப் புரட்சி என்பது நீண்ட வரலாற்றின் மிக மோசமான சுமைகளை எடுத்தெறிந்து சமூகம் எழுந்த நிகழ்ச்சியாகும்.

ஒரு சமூகம் நீண்ட நெடுங்காலமாக தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை இலகுவில் எடுத்தெறிய முடியாது. பல நூற்றாண்டு சீர்கேடுகளை ஓரிரு நாட்களில் சீர்படுத்துவது ஓரு போதும் சாத்தியமில்லை. அரபுலகில் நாம் காணும் குழப்ப நிலை என்பது இந்தப் பின்னணி கொண்டதாகும்.

இக் கருத்துப் பின்னணியில் அரபு வசந்தம் செத்துப் போய்விடவில்லை அது பயங்கரத் தடைகளை எதிர் கொண்டு மிகுந்த சிரமங்களுடன் அடியெடுத்து வருகிறது. அரபு வசந்தத்தின் இன்னொரு அலையொன்று பாரியளவில் எழும் சந்தர்ப்பம் இன்னும் இரண்டொரு வருடங்களில் நடைபெறவுள்ளது. இது முன்ஸிப் அல் மா்ஜுகி, பேராசிரியா் யூசுப், பேராசிரியர் அபூ யஃரப் அல் மா்ஜுகி, கலாநிதி ஹாகிம் அல் முதைரி, பஹ்மி ஹுவைதி, ராஷித் அல் கன்னூஷி, முஹம்மத் முக்தார் அல் ஷின்கீதி போன்ற ஆய்வாளர்களது கருத்தாகும்.

அரபு உலகப் புரட்சி எழுந்த போது அதனை ஒடுக்க சமூக சீர்கேடுகளால் இலாபம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்த எதிர்ப் புரட்சியாளர்களும் எழுந்தார்கள். அவர்கள் ஆங்காங்கே சில தற்காலிக வெற்றிகளையும் கண்டுள்ளார்கள். அத்தோடு சர்வதேச அழுத்த சக்திகளும் எதிர் புரட்சியார்களைப் பலப்படுத்தினார்கள் இந்தப் பின்னணி கொண்டதே கட்டாருக்கு எதிரான முற்றுகையாகும் இந்த வகையில் புரட்சி பல பயங்கர சவால்களை எதிர்க் கொண்டுள்ளது.

ஒரு போதும் சமூகப் பொது நாட்ட அலைக்கு முன்னால் நிற்பது சாத்தியமில்லை. ஆயினும் புரட்சிகள் எதுவும் இலகுவில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எனவே பல்வேறு பயங்கர அழிவுகள் சோதனைகளுக்கும்  பின்னர்தான் இப் புரட்சி வெல்லும்.

இறை தூதை சுமந்து சாதனைகள் படைத்த சமூகம் பல்வேறு சமூகக் காரணிகளால் பின் தள்ளப்பட்டு ஒடுங்கியது. இரண்டு நூற்றாண்டு காலமாக அதனை மீளெழுப்ப நடந்த முயற்சிகளின் விளைவாக அந்த சமூகம் மீண்டும் வரலாற்றுக்கு வருகிறது. நாம் அந்த சமூகத்தை நோக்குகிறோம். கட்டார் துருக்கி சவுதி அரேபியா, எகிப்து என்ற மக்கள் அபிப்ராயத்திற்கு முரணான செயற்கை எல்லைகள் கொண்ட நாடுகளை நோக்கவில்லை. இந்த அரபுப் புரட்சியின் அங்கத்தவர்கள் இந்த எல்லா நாடுகளிலும் உள்ளார்கள். அவர்கள் கட்டாரிலும், துருக்கியிலும் மட்டுமல்ல.

எனவே கட்டாரா, துருக்கியா, சவுதியா என்று முரண்பட்டு மோதிக்கொள்வதல்ல. இறை தூதர் (ஸல்) அவர்கள் அமைத்த அந்த உன்னத சமூகம் மீண்டும் வரலாற்று மேடைக்கு வரப் பிரார்த்திப்போம்.

Reply