நோன்பு – பிரார்த்தனை – எமது சமூக இயக்கம்

இப்போது நாம் அல் குர்ஆன் இறங்கிய அந்த மகத்தான இரவை கண்ணியப் படுத்தும் இரவைத் தேடுகிறோம். முஸ்லிம் சமூகம் எத்தனையோ சோதனைகளால் சூழப்பட்டுள்ள நாட்களும் இதுவேதான். இந்த மாதத்தின் அருளால், அந்தப் புனித லைலதுல் கத்ர் இரவின் பரகத்தால் இத் துன்பங்களிலிருந்து மீள மாட்டோமா என்ற அங்கலாய்ப்பும் எம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதற்கான ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் செய்து வருகிறோம்.

நாம் கட்டாயம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை முஸ்லிமின் கையிலுள்ள சிறந்த ஆயுதங்களில் ஒன்று என்பதை யாரும் மறுப்பதில்லை.

ஆனால்,

மனித வரலாற்று ஓட்டத்தையோ பௌதீக உலகின் ஓட்டத்தையோ அல்லாஹ் பிரார்த்தனைகளின் மீது மட்டும் அமைக்கவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தவகையில் மனித வரலாற்று ஓட்டத்தினதும் பௌதீக உலக இயக்கத்தினதும் நியதிகளையும் விதிகளையும் புரிந்து அதற்கேற்ப நாம் இயங்கவும்வேண்டும். அல்லாஹ்வே அமைத்து வைத்துள்ள இந்த நியதிகளையும் விதிகளையும் புறக்கணித்து விட்டு பிரார்த்தனைகளில் மட்டும் தங்கி இயங்கினோமாயின் இறுதியில் அது நம்பிக்கையில் குழப்ப நிலைக்கே கொண்டு செல்லக் கூடும்.

நோன்பின் மாதம் நிறைய வெற்றிகளை சாதித்துத்தந்த மாதம். பத்ர் யுத்தம் முதல் 1973ஆம் ஆண்டு ஒக்டோபர் எகிப்து இஸ்ரேலிய யுத்தம் வரை பல வெற்றிகளை அது சாதித்துத் தந்தது. ஆனால் அந்த வெற்றிகளின் பின்னால் கவனமான திட்டமிடல்களும் பாரிய உழைப்பும் இருந்தது என்பதை நிராகரிக்க முடியாது.

பத்ர் யுத்தம் இறை தூதர் (ஸல்) அவர்களின் கவனமான திட்டமிடலின் ஒரு தொடரேயாகும். மதீனாவுக்கு சென்ற ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை வாழவிடாது எதிர்த்து வரும் மக்காவின் மீது ஒரு பொருளாதார முற்றுகையை மேற் கொள்வது என்று இறை தூதர் (ஸல்) அவர்கள் தீர்மாணித்தார்கள். அதன் தொடர் விளைவே பத்ர் யுத்தமாகும். பத்ரின் போது இறை தூதர் (ஸல்) அவர்கள் மேற் கொண்ட இராணுவ நுணுக்கங்கள் பிரசித்தமானவை.

மக்காவின் மீதான வெற்றியும் இம்மாதத்தில் நிகழ்ந்ததுவேயாகும். அப்போதும் இறை தூதர் (ஸல்) அவர்கள் மிகுந்த நுணுக்கத்துடனேயே படை நடாத்தினார்கள். இரத்தம் சிந்தலை முழுமையாகத் தவிர்ப்பது எவ்வாறு என்பது பற்றி இறை தூதர் (ஸல்) அவர்கள் அப்போது மிகவும் சிந்தித்தார்கள். அதற்கான மிகக் கவனமான நடவடிக்கைகளையும் மேற் கொண்டார்கள்.

எனவே, இறை தூதரின் ஸுன்னா வரலாற்று ஓட்டம், பௌதீக உலக நியதிகள் என்பவற்றைக் கவனத்திற் கொள்ளலும் பிரார்த்தனையுமாகும். இரண்டையும் இணைத்தே நாம் கைக் கொள்ள வேண்டும்.

எம்மை நெருக்கும் பிரச்சினைகள் குறித்து இப்படி நாம் சிந்திப்போமாக. இந்த நோன்பு நாட்கள்குறிப்பாக இந்த இறுதிப் பத்தின் நாட்கள் எம்மை ஆன்மீக ரீதியாகப் புடம் போடுவதோடு அந்த இரவுகளில் கேட்கும் குர்ஆன் எம்மை சிந்திக்கச் செய்யுமாக. பௌதீக உலக நியதிகளையும் வரலாற்று ஓட்ட ஒழுங்குகளையும் விளக்கும் இறை வசனங்கள் தான் எத்தனை எத்தனை உள்ளன!

இன்னும் ஒரு கிழமை செல்லும் போது நோன்புப் பெருநாளை நாம் சந்திப்போம். அப்போது மூன்று விடயங்களைக் கவனத்திற் கொள்வோமாக.

  1. நோன்புப் பெருநாள் என்பது நோன்பை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தியவருக்கே உண்மையாகச் சொந்தமாகும். அவனுக்கே அது சந்தோஷமான நாள்.
  2. பெருநாளை மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் நாம் கொண்டாடுவோம். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று உலகம் முழுக்க எமது சமூகம் மிகுந்த துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் வாழ்கிறது. இரண்டு எம்மைச் சுற்றியிருக்கும் மாற்று மத சகோதரர்கள் எம்மைப் பற்றியும் எமது மார்க்கம் பற்றியும் பிழையான மனப் பதிவுகளுக்கு உட்பட்டு விடக் கூடாது.
  3. எம்மைப் போலவே வறுமையில் நொந்து போன எமது சகோதரர்கள் பெருநாளைக் கொண்டாட வழி செய்வோம். அதற்காக ஸகாத் அல் பித்ரையும் கொடுப்போம். மேலதிகமாக ஸதகாக்களையும் செய்வோம்.

அல்லாஹ் எம் எல்லோரையும் ஏற்று, அங்கீகரிப்பானாக.

Reply