எமது ஆன்மீகப் பலவீனம்

புனித ரமழான் மாதத்தின் அரைவாசியை கழித்து விட்டோம். மனிதர்களை புனிதர்களாக மாற்ற இந்த மாதம் எம்மை எவ்வளவு மாற்றியதோ தெரியவில்லை.

அற்புதமானதொரு மாதம். மனிதர்களுக்கு இறுதி இறை வழிகாட்டல் இறங்கியதைப் பின்னணியாகக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட மாதம்.

உடலின் வீரியத்தை, சாப்பாட்டில் ஓரளவு கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் குறைக்க முயல்கிறது இம் மாதம்.  அதன் விளைவாக தீமையை நோக்கி உடல் இழுபடுவது குறையும், அத்தோடு தீமைகளிலிருந்து ஒதுங்கும் மனக்கட்டுப்பாட்டை பேண நன்கு முயல வேண்டும் என இம் மாதம் வலியுறுத்துகிறது.

அதிகமதிகம் தர்மம் செய்ய வேண்டும் என இம் மாதம் மிகவும் வேண்டுகிறது. சக மனிதனின் துயர் துடைக்கும் மனப் பாங்கை இதன் மூலம் இம் மாதம் வளர்க்கிறது.

“உன்னை யாரும் ஏசினால், அல்லது உன்னோடு சண்டை பிடிக்க வந்தால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று சொல்…” என உபதேசிப்பதன் மூலம் வன் முறைகளைப் புறக்கணித்து சுற்றுச்  சூழலில் அமைதியையும், சமாதானத்தையும் இம் மார்க்கம் உருவாக்க முயல்கிறது.

இப் பின்னணியில் நோன்பின் இந்த இலக்குகளை அடைந்து கொள்ள எமது பள்ளிகள் ஆன்மீகப் பயிற்சிப் பாசறைகளாக மாற வேண்டும்.

எனினும் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ரமளானின் கஞ்சிக்கு நடக்கும் ஏற்பாடாவது இப் பகுதியில் நடக்குகிறதா என்பது சந்தேகமே. மனிதர்களை மாற்றுவதில் அல் குர்ஆனுக்கு ஓர் அற்புதமான சக்தி இருக்கிறது. இந்த மாதத்தில் இதனை நாம் நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில்தான் – கியாமுல் லைல் – தராவீஹ் தொழுகை – ஒரு சிறப்பான இடத்தை இம் மாதத்தில் வகிக்கிறது. ஆனால் அங்கு ஓதும் குர்ஆன் அவ்வாறு பயன்படுத்தப் படுகிறதா என்பது சந்தேகமாகவே உள்ளது.

கருத்தோ, விளக்கமோ புரியாத வெறும் ஓதல், பல பள்ளிகளைப் பொறுத்த வரையில் மிக வேகமான ஓதல் என்ன தாக்கத்தை தொழுபவர்கள் மீது விளைவிக்கப் போகிறது?!

முஸ்லிமின் வாழ்வில் அடிப்படையாக இருக்கும் ஆன்மீகப் பகுதியில் கூட இவ்வளவு தூரம் பலவீனமாக இருந்து கொண்டு எதனை நாம் சாதிக்கப் போகிறோம்???

Reply