இஸ்லாமியக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகமும்

குறிப்பிட்டதொரு மார்க்கத்தின் அல்லது கொள்கையின் கோட்பாடுகள் முதன்மையானவை. ஆனால் அவற்றை நடைமுறையில் பிரயோகித்து விளைவுகள் காணாத போது அவை அர்த்தமற்றுப் போகின்றன. தமது கவர்ச்சியையும் இழக்கின்றன.

இப்பின்னணியில் இரண்டு உண்மைகளை இங்கே காண்கிறோம் :

கோட்பாடு = அதன் பிரயோகம்

இவ்விரு அம்சங்களும் இஸ்லாத்திற்கும் பொருந்தும். உதாரணமாக இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இஸ்லாத்தின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள். அவற்றை இஸ்லாம் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் விளக்கியுள்ளது என்பது ஒரு பக்கம். அதனூடாக கருத்து மாற்றத்தை, சிந்தனை மாற்றத்தை மனிதனில் இஸ்லாம் ஏற்படுத்துகிறது.

மனித உள்ளத்தில் அவை ஆதிக்கம் பெற்று மனித நடத்தைகளை நெறிப்படுத்துவது அக் கோட்பாடுகளின் இரண்டாம் பகுதி. இதற்கான சாதனங்களாக மூன்று அடிப்படை வணக்க வழிபாடுகளை இஸ்லாம் தந்துள்ளது. தொழுகை, நோன்பு, ஹஜ் என்பனவே அவையாகும். இதனை கீழ்வருமாறு காட்டலாம்.

இப்போது எழும் பிரச்சினைகள் இரண்டு :

  • சிந்தனை மாற்றத்தை உருவாக்கும் வகையில் கோட்பாடுகளை முன்வைக்கும் முறை.
  • அக் கோட்பாடுகள் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி நடத்தை மாற்றத்தை உருவாக்கும் வகையில் வணக்க வழிபாடுகளைப் பிரயோகித்தல் வழிமுறை.

இந்த வணக்க வழிபாடுகளின் ஒழுங்கு முறைகள் சம்மந்தமான சட்டங்கள் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். அவற்றின் இந்தப் பிரயோக ஒழுங்கு பற்றிய ஆய்வுகள் எம்மிடம் மிகக் குறைவு. எனவேதான் இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும், வணக்க வழிபாடுகளும் உள்ள சமூகமாக நாம் இருந்தும் பின்தங்கியதொரு சமூகமாகவும் சிக்கல்களும், பிரச்சினைகளும், பாவச் செயல்களும் நிறைந்த சமூகமாகவே நாம் உள்ளோம்.

கோட்பாடுகளின் பிரயோக வழிமுறை காலத்திற்குக் காலம், சமூகத்திற்குச் சமூகம், இடத்திற்கு இடம் மாறுபட முடியும். பூகோள மயமாகி விட்ட உலகில் நாம் வாழ்கிறோம். ஊடகத்துறை அதன் உன்னத வளர்ச்சியைக் கண்டுள்ளமை எமது கால யதார்த்தம். பொருளாதார சக்திகளின் சர்வதே ஆதிக்கத்தில் நாடுகளின் அரசாங்கங்கள் பலவீனப்பட்டுள்ளமை இக் காலப்பிரிவின் இன்னொரு யதார்த்தம். பயங்கரவாதம் என்று சொல்லாடலும் வலதுசாரிகளின் எழுச்சியாலும்  நாடுகளது அரசாங்கங்களின் கொடும்பிடிகளில் நசுக்குண்டு மக்கள் வாழ்வது இன்னொரு உண்மை. இந்த சர்வதேச யதார்த்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மனிதனும் கிடையாது. இத்தகையதொரு சமூக சூழலில் கோட்பாடுகளின் பிரயோக முறைமையை அதிகமதிகம் ஆராய்வது மிகவும் அடிப்படையானது.

ஸகாத் என்ற கோட்பாட்டிற்கும் இது பொருந்தும். ஸகாத் விதியாகும் பொருட்கள் அதனைப் பெறத் தகுதி பெற்றோர் என்ற சட்டப் பகுதிகளுக்கு அப்பால் வறுமையை ஒழித்தல் என்ற ஸகாத்தின் இலக்கைச் சாதிக்கும் வகையில் அதன் பிரயோக ஒழுங்கு எவ்வாறமைய வேண்டும் என்பது அதி முக்கியமான அம்சமாகும்.

நோன்பு இன்னும் ஒன்றரை மாதங்களில் வருகிறது. அந்த நாட்களிலே ஸகாத் பற்றியும் பேசுவது எமது வழக்கு. இந் நிலையில் இங்கே குறிப்பிடப்பட்ட கருத்துக்களைக் கவனத்திற் கொள்வோமாக.

Reply