கைருல் பஷர் என்ற எளிமையில் வாழ்ந்துயர்ந்த மனிதர்

கைருல் பஷர் என்ற அந்த நல்ல நண்பனின் மரணச் செய்தி சென்ற 12ஆம் திகதி பகல் வேளையில் கேட்ட போது திடுக்கிட்டுப் போனேன். என்னால் நம்ப  முடியவில்லை. செய்தி சொன்ன சகோதரர் இப்திகாரிடம் இன்னொரு முறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள் என்றேன்.

கைருல் பஷர் பெயருக்கேற்ற நல்ல மனிதர். மென்மையான மனிதர். தந்திரங்கள், நாடகமாடுதல், குழி பறித்தல் போன்ற எதுவும் தெரியாது வெளிப்படையாக வாழ்ந்த மனிதர்.

ஆரவாரமற்ற ஒரு பிரச்சாரகர். பல நல்ல நூற்களை ஆக்கியவர். சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியவர். ஒரு நல்ல பேச்சாளர். குத்பாக்கள் ஓதி வந்தவர். பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடாத்தியவர். தனது வீட்டை அண்மித்திருந்த பள்ளியில் வழமையாக இஷாவின் பின்னர் ஆன்மீக உரை ஒன்றை நடாத்தி வந்த அவர் தனது பகுதிமக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்.

தான் பிறந்த தர்ஹா டவுனின் பள்ளி வாசல்களில் வழமையாகக் குத்பா ஓதி அந்த மக்களின் சிந்தனையை அவர் வளர்த்தார். இஸ்லாமியக் கருத்துத் தெளிவைக் கொடுத்தார். அந்த ஊரின் ஸகாத் நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்ததோடு அதனை அவரும் சேர்ந்து வளர்த்தார். இறுதிவரையில் அப்பெரிய ஊரின் பல நிறுவனங்களுடனும் தொடர்பாக இருந்து ஊரின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு வாழ்ந்தார்.

தேசிய ரீதியாக எழுத்துக்கள் மூலமாகவும், பல நிகழ்ச்சிகள் மூலமாகவும் அவர் பணி புரிந்தார். அவரது எழுத்துக்களை ஒன்று திரட்டினால் அவரது பங்களிப்பு இன்னும் தெளிவாகத் துலங்கும். ஆங்கிலத்திலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது. எனவேதான் இறை தூதர் (ஸல்) அவர்கள் குறித்து ஆங்கிலத்தில் ஒரு நூலை அவர் ஆக்கி இருக்கிறார். எனினும் அது வெளிவரவில்லை.

இலக்கிய ஈடுபாடு அவரிடம் இருந்தமை அவரது சிறப்பம்சம். கவிதைகள் இயற்றுதில் தனி ரசனை அவரிடம் காணப்பட்டது. கவிதைகள் பலவற்றை அவர் ஆக்கியுமுள்ளார். அவர் ஆக்கிய கவிதை நூலொன்று இன்னமும் வெளியிடப் படாமலே உள்ளது என்ற ஒரு செய்தியும் கிடைத்தது.

அவரிடம் இரண்டு சிறப்பம்சங்கள் காணப்பட்டன. ஒன்று எளிமை, வெளிப்படைத் தன்மை கபடமற்ற மனம். இரண்டு ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு. தொழுகையில் அவர் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுவார். அல்குர்ஆனை ஆழ்ந்து ரசனையோடு ஓதுவார். இதில் அவருக்கொரு தனியான  ஈடுபாடிருந்தது.

இவ்வாறு பல் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பூமி சிறக்க அமைதியாக வாழ்ந்தார் கைருல் பஷர்.

தனது குடும்பம் தாய், தந்தையருடன் ஒரு மிகச் சிறந்த மகனாக எப்போதும் இருந்தார். தன் சகோதரர்களுடன் உடன் பாட்டுடனும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்பவராகவும் வாழ்ந்தார்.

இது பொதுவாக கைருல் பஷர் என்ற மனிதர்.

கைருல் பஷர் என்ற நழீமிக்கு இன்னொரு பக்கமுண்டு.

நழீமிய்யாவின் அவரது மொத்த வாழ்வு 43 வருடங்கள். அதில் 7 வருடங்கள் மாணவராகவும், 36 வருடங்கள் ஆசிரியராகவும் அவர் வாழ்ந்துள்ளார்.

மாணவராக வாழ்ந்த போது, புதுச் சூழலில், பரிச்சயமற்ற புது வாழக்கை என்பதன் காரணமாக எல்லா மாணவர்களுக்கும் ஏற்பட்ட தடுமாற்ற நிலை அவருக்கும் ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்து அவர் அவசரமாகவே மீண்டு கொண்டார்.

எப்போதும் அவர் படிப்பில் ஈடுபாடு காட்டும் மாணவர். தனக்கிருந்த நழீமிய்யா வாழ்வு குறித்த தடுமாற்ற நிலையிலும் கூட அவர் அப்படியே இருந்தார். இந்த வகையில் அரபு மொழியில் நல்ல புலமையை அவர் பெற்றுக் கொண்டார். இஸ்லாமியக் கலைகளையும் ஈடுபாட்டுடன் படித்துக் கொண்டார்.

வகுப்புப் பாடங்களோடு நிற்காது வாசிகாலையைப் பயன்படுத்தித் தன்னை நன்கு வளர்த்துக் கொண்டார். எனவே, நவீன இஸ்லாமிய சிந்தனையோடு அவருக்கு நல்ல பரிச்சயமிருந்தது. அவரது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் இதனை அவதானிக்க முடியும்.

விளையாட்டில் அவருக்கு ஈடுபாடிருந்தது. ஆனால் இளைஞர்களிடம் பல போது காணப்படும் வீண் விளையாட்டுக்களில் நேரத்தைக் கழித்தல், சட்டங்களை மதிக்காது துஷ்டத்தனமான காரியங்களை இழைத்தல் என்பவை அவரிடம் அறவே காணப்படவில்லை. ஒழுக்கத்தோடும் பண்பாட்டோடுமே அவர் வாழ்ந்தார்.

பின்னர் அவர் ஆசிரியராக, விரிவுரையாளராக உயர்ந்த போதும் அந்த எளிமை அவரிடம் தொடர்ந்திருந்தது. மாணவ பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தபோது அவர் எடுத்துக் கொண்ட பாத்திரமும் ‘‘ஓர் ஏழை” என்பதே. அப்பாத்திரத்தால் அவர் எல்லோரையும் அன்று கவர்ந்தார்.

மாணவர்களோடு தந்தை போன்று பழகுவார். கண்டிப்பு, இறுக்கம், வன்மை அவரிடம் காணப்படாத பண்புகள். தனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்தை தன்னால் முடிந்தளவு அழகாக அவர் செய்வார்.

இப்படி இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்குவதில் அவருக்கும் ஒரு பெரிய பங்கிருந்தது.

இவ்வாறு நழீமிய்யாவின் வளர்ச்சியில் அவர் தூய்மையோடு ஈடுபட்டார். நழீமிய்யாவின் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதே அவரது இறுதி செயற்பாடாகியது.

எமக்கு முன்பிருந்த மாணவர் பிரிவு வெளியாகாததன் காரணமாக நாங்களே முதல் மாணவர் பிரிவாகினோம். அம் மாணவர்களில் முதல் தரமான மாணவர் ஒருவரையே நாமிழந்து நிற்கிறோம்.

இரண்டாவது நமீமிய்யா ஒரு நல்ல விரிவுரையாளரை இழந்து விட்டது. அத்தோடு அவரது குடும்பம் நல்லதொரு தந்தையையும், பாட்டனையும் இழந்து விட்டது.

அல்லாஹ் அந்த நல்ல மனிதரை அங்கீகரிப்பானாக. இறைவனே ஒவ்வொரு மனிதனையும் பற்றி நன்கறிந்தவன். நாமறிந்த வகையில் அந்த நல்ல மனிதரின் குற்றங் குறைகளை இறைவா நீ மன்னித்து விடுவாயாக. அவருக்கு மறுமையின் சுவர்க்க வாழ்வைக் கொடுப்பாயாக!

Reply