சித்திலெப்பை அறிமுக நிகழ்வு சில குறிப்புகள்.

அறிஞர் சித்திலெப்பையின் பணிகளை அறிமுகப்படுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு 18.02.2017 அன்று சென்று வந்தேன். சித்திலெப்பை நிறுவகத்தால் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. ஒரு புத்தக வெளியீடும், ஒரு விவரணப் படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது. “முஸ்லிம் அரசியல் முன்னோடி அறிஞர் சித்திலெப்பை” என்பது புத்தகத்தின் பெயர். பேராசிரியர் கலாநிதி அனஸ் அப் புத்தகத்தை எழுதியிருந்தார். அறிஞர் சித்திலெப்பையின் பங்களிப்பு பற்றிய பார்க்கப் படாத பக்கம் அது.

இரண்டாவது சித்திலெப்பையின் வாழ்க்கையும் அவரது பணிகளையும் சுருக்கமாக சித்தரிக்கும் விவரணப்படம் அங்கு காட்டப்பட்டது. அதுவும் கலாநிதி அனஸ் அவர்களின் அயராத முயற்சியால் உருவானதாகும். மிகவும் அழகான, கவர்ச்சிகரமான தகவல்கள் நிறைந்த ஒரு விவரணப் படமாக அது அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பெரிய தொகையினர் கலந்து கொண்டனர். புத்திஜீவிகள், தனவந்தர்கள், முஸ்லிம் சமூகத் தலைமைகள் எனப் பல தரத்தினரும் அதில் இருந்தனர்.
பேராசிரியர்களான கலாநிதி அனஸ், கலாநிதி நுஃமான், நவமணி பிரதம ஆசிரியரும், முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் மீடியா ஆகியவற்றின் தலைவருமான அமீன் போன்றோரின் பெறுமதியான உரைகளும் அங்கு இடம் பெற்றன.

அறிஞர் சித்திலெப்பை மிகப் பெரிய ஆளுமை. முஸ்லிம் சமூகத்தின் நவீன கால எழுச்சிக்கு வித்திட்ட ஒரு பெரும் சீர்திருத்தவாதி. அவர் கல்வி, அரசியல், மார்க்கம், சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டம் என பல பரப்புக்களிலும் வேலை செய்தவர். அவர் ஒரு வழக்கறிஞர். ஆங்கிலக் கல்வி பயின்று ஆங்கில நாகரீகத்தையும் அறிந்தவர். இன்னொரு பக்கத்தில் அரபு மொழியையும் கற்று மார்க்க அறிவும் கொண்டவர். அவரது கல்விச் சீர்திருத்தங்களின் போது மார்க்கத்தையும் இணைத்துச் செல்லும் போக்கு அவரிடம் காணப்பட்டது.

இப் பின்னணியில் இப்போது நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் இவைதான் :
அறிஞர் சித்திலெப்பையின் இந்த சமூக இயக்கப் பணி தொடந்ததுவா? T.B ஜாயா, பதியுத்தீன் மஃமூத் போன்றவர்களை அவர்களின் நீட்சி எனக் கருதலாமா?
இதே காலப்பிரிவில் தோன்றிய மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் மார்க்கப் பணி என்ன? அதன் நீட்சியை எங்கு காண்கிறோம்?

20 நூற்றாண்டின் நடுப் பகுதிகளில் ஆரம்பித்த இஸ்லாமிய சீர்திருத்தப் பணியும், அதன் தொடரான இஸ்லாமிய இயக்கப் பணிகளும் சித்திலெப்பை, மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்பவர்களுடன் சேராத இன்னொரு வித்தியாசமான வரலாற்று ஓட்டமா?

சித்திலெப்பை ஸெய்யது அஹ்மத் கானின் தாக்கங்களை உள்வாங்கியவரா? அல்லது ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் அப்துஹுவின் தாக்கங்களை உள் வாங்கியவரா?

இவ்வாரெல்லாம் நாம் எமது வரலாற்றை நுணுகி நோக்க வேண்டியுள்ளது. அது எம்மையே நாம் பார்த்துக் கொள்வதாக அமையும்.

சித்திலெப்பை எமது மண்ணில் தோன்றி எமது பிரச்சினைகளோடு இரண்டறக் கலந்து அங்கிருந்தே உருவாகியவர். அந்த இலங்கை வேரிலிருந்தே நாம் வளர வேண்டும். எம்மை ஒழுங்குபடுத்த வேண்டும்.

ஒரு பக்கம் இஸ்லாம். இன்னொரு பக்கம் ஆதிக்கம் செலுத்தும் மேற்கு நாகரீகம். முஸ்லிம் உம்மாஹ்வின் புத்திஜீவிகள், தலைமைகள் இந்நிலையோடு எவ்வாறு உறவாடுகிறார்கள். எதிர் வினையாற்றுகிறார்கள் என்பதனை நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். இந்த உறவாடலும், எதிர் வினையாற்றலும் நாட்டுக்கு நாடு, சமூக நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு சித்திலெப்பை என்ற ஆளுமையை இன்னும் நெருங்கி நுணுகி ஆராய்வோம். அது எமது நிகழ்கால வரலாற்றை ஆற்றுப் படுத்த உதவக் கூடும்.

Reply