இஸ்லாமிய சிந்தனையின் தேக்க நிலையும், விளைவும்

இஸ்லாம் மனித சமூகத்திற்கான இறுதித் தூது. மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மார்க்கம் அது.இறை வார்த்தைகளால் ஆனது அதனது அடிப்படை நூலான அல் குர்ஆன்.

உண்மை இவ்வாறாக இருப்பினும் இன்று இம் மார்க்கம் அறிவுத் தலைமையில் இல்லை. மேற்கத்திய உலக சிந்தனைகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இஸ்லாமிய சிந்தனை அதற்குப் பின்னால் செல்வது போன்றே தெரிகிறது.

அரசியலில் ஜனநாயகம்

மனித உரிமைகள் பகுதி

இலக்கியப் பகுதி

பெண்ணின் சமூகப் பங்களிப்பு

உலக அமைதியும், சமாதானமும் கொண்ட நாடுகள் சமூகங்களுக்கு மத்தியிலான சக வாழ்வு………

போன்ற இப்பகுதிகளெல்லாம் இஸ்லாம் முற்போக்கான, நாகரீக சிந்தனைகளை கொண்டில்லை என்ற குற்றச் சாட்டு சுமத்தப்படுகிறது.

இந்நிலையில் சிலர் முஸ்லிம்களில் சிலரும் கூட இஸ்லாம் காலாவதியாகி விட்ட மார்க்கம் என்ற கருத்தைக் கொள்கின்றனர்.

வேறு சிலர் இஸ்லாம் தனிப்பட்ட விவகாரங்களோடு சேர்ந்த ஒரு மதமாக இருக்கட்டும். அது சமூக வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு கொள்கையாக இருக்க முடியாது என்ற கருத்தைக் கொள்கின்றனர்.

இப்பிரச்சினையை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதைச் சுருக்கமாக விளக்குவோம்.

இஸ்லாத்தின் வழிகாட்டல் சிந்தனை என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது :

1.தூய இறை வழிகாட்டல்

2.இறை வழிகாட்டலும் மனித ஆய்வும் கலந்தது

அல் குர்ஆனினதும், சுன்னாவினதும் பல வசனங்கள் பல கருத்துக்களுக்கு இடம்பாடானவை. நெகிழ்ந்து கொடுக்கக் கூடியவை. சில வசனங்கள் திட்டவட்டமானவை ஒரு கருத்தையே கொடுக்கக் கூடியவை.

அத்தோடு மனித வாழ்க்கையின் மாறிச் செல்லும் பகுதிகளைப் பொறுத்த வரையிலும் அல் குர்ஆன் அடிப்படை ஒழுக்க விழுமியங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையுமே சொல்லும். அவற்றை நடைமுறையில் பிரயோகிப்பதுவும், அதற்கான பொறிமுறைகளை உருவாக்கிக் கொள்வதுவும் மனித அறிவுக்கு விடப்பட்டுள்ளது.

இவ்விரு பகுதிகள் சம்மந்தப்பட்ட மனித ஆய்வுத் தொழிற்பாடே இஜ்திஹாத் என இஸ்லாமிய வழக்கில் அழைக்கப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாத்தின் காலத்தோடொட்டிய இயக்கம் இஜ்திஹாதின் சீரிய இயக்கத்தில் தங்கியுள்ளது.

இந்நிலையில் இஸ்லாத்தின் வரலாற்று ஓட்டத்தில் நிகழ்ந்த மிகப் பெரும் அபாயம் வரலாற்றின் ஆரம்ப காலப்பிரிவிலே இஜ்திஹாதின் இயக்கம் நின்று விட்டமையாகும்.

இதன் விளைவாக அல் குர்ஆனும், சுன்னாவும் காட்டிய சமூக வாழ்வோடு சம்மந்தப்பட்ட சட்ட மூலாதாரங்கள் இரண்டாந்தரமானவையாக மதிக்கப்பட்டன. இஸ்லாமியக் கலைகள் என சில குறிப்பிட்ட கலைகள் அதி முக்கியத்துவம் பெற்றன.

இவை அனைத்தினதும் மிக முக்கிய விளைவாக சமூகவியல் கலைகள் இஸ்லாமிய வாழ்வில் நன்கு வளர்ச்சியடையவில்லை. புதையுண்டு போயின.

இவ்வாறு முஸ்லிம் அறிவு விட்ட வரலாற்றுத் தவறின் விளைவாக இஸ்லாம் நவீன காலத்திற்குப் பொருத்தமற்ற மார்க்கம் போன்று தோன்றுகிறது. பிற்பட்ட காலப்பிரிவுகளின் சமூக வாழ்வின் ஒழுங்காலும், அந்நிய சமூகங்களின் பாதிப்பாலும் தோன்றிய சில தவறான ஆய்வுத் தீர்வுகள் இஸ்லாத்தின் பெயர் பெற்று இஸ்லாம் பின் தங்கிய சமூகங்களின் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகி உள்ளது.

இஸ்லாத்தின் இத்தகைய சிந்தனைப் பின்தங்களிலிருந்து மீள நவீன காலப்பிரிவின் அறிஞர்கள் ஜமாலுத்தீன் ஆப்கானி முதல் இன்று வரை முதன்மையாக அறிவு ரீதியாகப் போராடி வருகிறார்கள். அதில் படிப்படியாக பல வெற்றிகளையும் சாதித்து வருகிறார்கள்.

Reply