இன உணர்வு கூர்மையடைதல் என்ற நிகழ்வின் முன்னே…

நாட்டின் சில இடங்களில் இனத்துவேஷ வெளிப்பாடுகள் நிகழ்ந்து வருவதை அவதானிக்கிறோம். இது உலகளாவிய நிகழ்ச்சியாக அமைந்திருப்பதுவும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். இந்தியாவின் மோடி அரசாங்கம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தமை, அமெரிக்காவில் டிரம்ப்  ஆட்சிக்கு வந்தமை என்ற நிகழ்வுகள் எல்லாம் இந்த உண்மையையே சுட்டுகின்றன.

இந்த இன உணர்வின் தீவிர நிலை இனக்கலவரங்களாக வெடிக்கும் சந்தர்ப்பமும் உண்டு. எதிர்காலம் மிக மோசமாக அமையும் சந்தர்ப்பம் மிகக் கூடுதலாகவே உள்ளது. இந்நிலையில் எம்மை நாம் திருப்பிப் பார்த்தல் மிகவும் அவசியமானது. இங்கு மூன்று விடயங்களை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

  1. இந்த நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாகி வருகிறது என்ற பயமும், நாடு படிப்படியாக இஸ்லாமிய மயப்பட்டு வருகிறது என்ற பயமும் உருவாக்கப்பட்டுள்ளது. அது பூதாகாரமாகவும் எடுத்துக்காட்டப் படுகிறது.
  2. பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் பலம் பெற்று வருகிறார்கள்.மிகுந்த வசதியாக ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்ற பிரமை மிகவும் கவர்ச்சிகரமாக முன்வைக்கப்படுகின்றது.
  3.  அரசியல் ரீதியாக அவர்கள் தங்களது இன நலன், தேவைகளை முதன்மையாகக் கொள்கிறார்களே தவிர நாட்டின் பொது நலனில் அக்கறை கொள்கிறார்களில்லை என்ற குற்றச்சாட்டு.

இதற்கான தீர்வுகள் எனது பார்வையில் கீழ்வருமாறு அமைய முடியும்.

  1. எமது மார்க்க வெளித்தோற்றங்களில் கணிசமான மாற்றத்தை கொண்டு வருதல் :
    எமது பள்ளிகள், தஃவாவுக்கான கட்டிட ஒழுங்குகள், இயக்க ரீதியான செயற்பாடுகள், எமது உடை போன்ற வெளித்தோற்றங்கள் போன்றவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.இவ்வாறு நான் கூறும் போது ஆத்திரத்தோடும், உணர்ச்சிவசப்பட்டும் இறை தூதர் (ஸல்) அவர்களின் ஸுன்னாவுக்கு எதிராக பெண்களின் பர்தாவுக்கெதிராக இவன் பேசுகிறான் என என்னைக் கடுமையாகப் பலர் சாடுகிறார்கள். ஆனால் எனது உள்ளத்தைப் பற்றி அல்லாஹ்வே அறிவான். சில உண்மைகள் பேசப்படவே வேண்டும். நிகழ்காலத்தில் அதற்கான வரவேற்பில்லாது விட்டாலும் சிந்திக்கும் சிலராவது இருப்பார்கள் என நம்புகிறேன். இப்போது இதனை ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாகவாவது மாற்றுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.

    அத்தோடு ஆன்மீகப் பக்குவம், ஒழுக்கப்பண்பாடுகளை வளர்த்தல், இஸ்லாத்தின் அடிப்படை சிந்தனைகளை வளர்த்தல், குடும்பக் கட்டமைப்பை பலப்படுத்தல் என்பவையே எமது கவனத்தை ஈர்க்க வேண்டும்.

  2. மூடுண்ட சமூக நிலையிலிருந்து வெளிவந்து மைய நீரோட்டத்தில் கலத்தல். இந்த வகையில் மூடுண்ட சமூக ஒழுங்கு என்பது என்ன? மைய நீரோட்டத்தில் கலத்தல்  என்பது என்ன பொருளைக் கொடுக்கும் என்பதை விளங்கிக் கொள்ளலும் அதனைப் படிப்படியாக எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை வகுத்துச் செயற்படலும்.
  3. எமது அரசியல் செயற்பாட்டில் தனிக்கட்சி ஒழுங்கில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதும் தேசிய கட்சிகளுடனான எமது உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்கள் குறித்து விரிந்த கருத்துப் பரிமாற்றத்தை உருவாக்கல்.

இவை எல்லாவற்றினதும் அடிப்படை முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் சம்மந்தமான இஸ்லாமிய சிந்தனையைக் கட்டமைப்பதாகும்.

Reply