சகோதரர் கபூர் நாநாவின் மரணம்

கபூர் நாநா என நளீமிய்யாவில் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மனிதரின் மரணச் செய்தி ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நளீமிய்யா துவங்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே அவர் ஊழியராக பணியாற்றி வந்தார். பள்ளியின் பராமரிப்பாளராகவும், உணவுப் பகுதியின் பொறுப்பாளராகவும், அலுவலக வேலைகளில் ஈடுபடுபவராகவும் என பல பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

ஷெய்க் அகாரின் மனைவியின் ஜனாஸாவிற்கு சென்றிருந்த போது அவரைச் சந்தித்தேன். வழமையான சிரிப்புடனும் மிகுந்த நெருக்கத்தோடும் அவர் பேசினார். எழுபதிற்கு மேல் வயது சென்றுவிட்டவராக இருந்த போதும் உற்சாகமாவும், நன்கு இயங்குபவராகவுமே அவர் அப்போது அவர் எனக்குத் தென்பட்டார். இவ்வளவு கெதியில் அவரை நாம் இழப்போம் என நான் கொஞ்சமும் கருதவில்லை. அல்லாஹ்வின் ஏற்பாடு எவ்வாறெல்லாம் அமைகிறது என சின்ன மனிதர்களாகிய நாம் எவ்வாறு கணிப்பிட முடியும்!

கபூர் நாநா போன்றவர்கள் சமூகத்தின் கணிப்பீட்டில் வராத சாதாரண மனிதர்கள். ஆனால் அல்லாஹ்வின் கணிப்பீடு மிகவும் வித்தியாசமானது. அவன் மனிதர்களின் செயல்களை மட்டும் பார்ப்பதில்லை. உள்ளங்களையும் பார்க்கிறான். செயல்களுக்கான பெறுமானத்தை அங்கிருந்தே கொடுக்கிறான்.

இந்தப் பின்னணியிலேயே சாதாரண மனிதர்களில் நாம் கரிசணை செலுத்த வேண்டியவர்களாகிறோம். நான் கபூர் நாநா பற்றி உடனேயே எழுதியிருக்க வேண்டும். பிந்தியிருக்கக் கூடாது. தொடர்ந்த வேலைகளால் என்னால் நேரமெடுத்துக் கொள்ள முடியவில்லை என்பதுவே அதற்குக் காரணம்.

கபூர் நாநா ஒரு மிருதுவான மனிதர். யாருடனும் முரண்பட்டு மோதிக்கொள்ள அவர் விரும்புவதில்லை. நளீமிய்யாவின் முதலாவது அதிபர் தாஸீன் மௌலவி அவர்களுக்கு கபூர் நாநா மிகவும் நெருக்கமாக இருந்தார். இப்படி பல அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.

கபூர் நாநா உதவும் மனப்பாங்கு கொண்டவர். ஆசிரியர்களுக்கும், சில போது மாணவர்களுக்கும் கூட அவர் உதவிகள் செய்வார். இவ்வாறு எல்லோரது நட்பையும் பெற்று உடன்பாட்டுடன் வாழ்ந்த அவர் அதே போக்கில் நளீமிய்யாவில் தற்போது இல்லையாயினும் முன்பு தொழில் புரிந்த ஒரு சகோதரரைப் பார்க்கவென்று சென்ற போதுதான் மரணமடைந்தார்.

அல்லாஹ் கபூர் நாநாவை மன்னித்து ஏற்றுக் கொள்வானாக.

நாமெல்லாம் அவருக்காக துஆ இரப்போமாக.

Reply