முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்
முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது. இப்போது அது முஸ்லிம் அல்லாதோரின் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு தீவிரம் பெற்று வருகிறது.
இது பற்றிய சில கருத்துக்களை இங்கே முன்வைக்கிறேன் :
i. உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலப் பிரிவு முதல் இஸ்லாமிய உலகின் பல நாடுகளில் முஸ்லிம் தனியார்ச் சட்டம் மீள் பரிசீலனைக்கு உட்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த நாட்டிலும் நாம் அதனை மீள் பரிசீலினை செய்வதில் தவறேதும் இல்லை.
ii. எமது தனியார் சட்டம் புரணமானதல்ல என்பதோடு பல குறைபாடுகளும் கொண்டது என்பதை அதனை நேர்மையாக வாசிக்கும் யாரும் ஏற்றுக் கொள்வர்.
iii. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் வாழும் நாம் இஸ்லாத்தைப் பற்றிய பிழையான புரிதல்களுக்கு இடமளிக்கக் கூடாது. முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதல்களுக்கு இடமளிக்கக் கூடியது.என்பதில் சந்தேகமில்லை.
iv. குறிப்பிட்டதொரு மத்ஹபில் தங்கியிருந்து முஸ்லிம் தனியார் சட்டத்தை வரைந்தால் இந்தப் பிழையான புரிதல்கள் தவிர்க்க முடியாததாகும். இஸ்லாத்தை ஒரு மத்ஹபில் குறுக்கும் மிகத் தவறான காரியத்தை ஒரு போதும் நாம் செய்யக் கூடாது.
v. குறிப்பிட்தொரு நாட்டின் தனியார் சட்டத்தை முழுமையாக பின்பற்றுவதும் பொருத்தமற்றதாகவே இருக்கும் என்பது புரிந்து கொள்ளத்தக்கதொன்று. இந்த பின்னணியில் எனது ஆய்வுக்குட்பட்ட வகையில் சிரியாவின் தனியார் சட்டத்தையும் அத்தோடு முக்கியமாக கீழ்வரும் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குப் பொருத்தமானதொரு தனியார் சட்ட நகலொன்றைத் தயாரித்துக் கொள்ள முடியும்.
- இமாம் அபூ ஜஹ்ரா – الأحوال الشخصية
- கலாநிதி முஸ்தபா ஸிபாவி – شرح فانون الأحوال الشخصية
- அப்துர் ரஹ்மான் அஸ் ஸாபூனி –م نظام الاسرة – وحل مشكلاتها في ضرء الاسلا
vi. இஸ்லாமியத் துறை சார்ந்தோரையும், சட்டத்துறை சார்ந்தோரையும் கொண்டதோடு குழு இதற்காக அமைக்கப்படல் மிகப் பொருத்தமாக அமையும்.
பாரிய அழுத்தங்களுக்கு உட்பட்டு எம்மை நாம் மாற்றிக் கொள்வது அவமானமானதாகும். சிறுபான்மையினராகிய நாம் அந்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆனால் அதற்கு முன்னால் நாமாக ஆராய்ந்து விளங்கி எம்மை மாற்றிக் கொள்ள முடியும். அதுவே சிறந்தது.
அல்லாஹ் இஸ்லாத்தை அனைத்து சமூகங்கள், நிலைமைகள், கலாச்சாரங்களுக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய வகையிலேயே இறக்கி உள்ளான். அதனை நாம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கூட ஏற்று அங்கீகரிக்கக் கூடிய வகையில் இஸ்லாத்தை முன்வைக்க முடியும்.
உதாரணமாக திருமண வயது குறித்த சர்ச்சையை எடுத்துக் கொள்வோம்.
சிறுபிள்ளைத் திருமணம் அனுமதிக்கப்பட்டது என்ற அபிப்பிராயம் இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவன்று.
இமாம் இப்னு ஷுப்ருமா, அபூபக்கர் அல் அஸமு, உஸ்மான் அல் பத்தி என்ற சட்ட அறிஞர்கள் சிறு பிள்ளைத் திருமணம் செல்லுபடியாகாது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்களது இக்கருத்துக்கு நியாயமான சில ஆதாரங்களைக் காட்ட முடியும்.
இந்நிலையில் சிறுபிள்ளைத் திருமணம் – 12 வயது திருமணம் முடித்துக் கொடுக்கத் தக்க வயது என்ற கருத்தில் ஏன் நாம் பிடிவாதமாக இருக்க வேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மை என்ன?
தனியார் சட்டத்தோடு சம்மந்தப்படும் ஏனைய பல பிரச்சினைகளும் இவ்வாறானதுதான்.
இங்கு நான் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனையவில்லை. மாற்றமாக நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விடயம் நாம் சிறுபான்மையாக வாழ்கிறோம். அந்நிலைக்கு ஏற்ப எம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இத்தகைய நாட்டில் தஃவாவின் நலனைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதும் தான்.