ஷெய்க் அகார் நளீமியின் மனைவியின் மரணம் உயர்ந்ததாக அமையட்டும்.

 

14721666_1136988176422816_5065967218349032127_n

பெண்கள் எல்லாவகையிலும் ஆண்களின் சரிபாதியினர். ஆண்களால் தனித்து இயங்குதல் சாத்தியமில்லை என்று கண்டாலும் இது உண்மை. சமூகத்தின் அவர்களது பங்களிப்பு சரிபாதி என்று கண்டாலும் அது உண்மை.

சமூகக் களத்தில் ஏதோ ஒரு நிறுவனத்தில் தொழில் பார்த்தல் மட்டுமல்ல சமூகப் பணி. வீட்டினுள்ளே இருந்து கொண்டு வேலைப்பார்த்தலும் ஒரு சமூகப்பணியே. சமூக பிரக்ஞையோடும், சம கால பிரச்சினைகள், சிக்கல்கள், போராட்டங்கள் பற்றிய அறிவோடும் குடும்பத்தை இயக்கிச் செல்லும் போது ஒரு பெண் சமூகப் பணியையே செய்கிறாள். இந்த வகையில் ஒரு குடும்பம் ஒரு அடிப்படை அரசியல் அலகாகக் கூட இருக்க முடியும். ஆனால் எமது பிரச்சினை வீட்டில் இயங்கும் பெண்ணை கிணற்று தவளையாகவும், சமூக ஈடுபாடு கொண்டவளாக அமைக்காதிருப்பதும்தான். ஆனால் இறை தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய சமூக மைய நிறுவனமான பள்ளிக்கு பெண்களை அழைத்தார்கள். யுத்த களங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். பல்வேறு சமூகப் பணிகளில் கலந்து கொள்ள வைத்தார்கள். இவ்வாறு சமூகப் பிரக்ஞை பெண்ணாக அன்றைய பெண் ஆக்கப்பட்டாள்.

ஷெய்க் அகார் நளீமியின் மனைவியின் மரணம் பற்றி சில விடயங்கள் எழுத வேண்டும் என எண்ணித் துவங்கினேன். அது பெண்களின் பணி பற்றிய விளக்கமாகத் துவங்கப் பட்டு விட்டது. ஆயினும் நாம் தலைப்பை விட்டு வெளியே செல்ல வில்லை. தலைப்பே அதுதான்.

ஆரம்ப கால பிரிவில் நானும், ஷெய்க் அகாரும் ஒன்றாகவே இஸ்லாமியப் பணியில் இறங்கினோம். இரவு, பகல் எனப் பாராது ஆழ்ந்து பாடுபட்டோம். ஆயினும் பின்னர் இருவரும் ஓரளவு வேலை செய்யும் ஒழுங்கால் பிரிந்தோம். சிந்தனையால் நாம் தூரமாகவில்லை என்றே கறுதுகிறேன்.

அந்த ஆரம்ப காலப்பிரிவில் நளீமிய்யாவுக்கு எமது இரு குடும்பங்களும் ஒரே வாகனத்தில் ஒன்றாகவே வந்து பக்கத்து வீடுகளில் ஒன்றாகவே குடியேறின. அன்றிலிருந்து இரு குடும்பத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பிருந்து வந்தது.

எமது காலப் பிரிவில் ஓர் இஸ்லாமிய பணியாளரின் மனைவியாக இருத்தல் மிகவும் கடினமானது. அவர் நேர காலமின்றி உழைப்பவர். விரிந்த சமூகத் தொடர்பால் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ முடியாதவர். நிறைய எதிர்ப்புகளையும், கடும் சொற்களால் தாக்கப்பட்டும் வாழ்பவர். பொருளாதார ரீதியாக பலவீனர். இவ்வளவு சுமைகளும் அவரது மனைவியின் மீதும் மிகப் பாரமாக இறங்குகின்றன. அந்த அவ்வளவு பாரங்களையும் அவள் பொறுமையுடன் சுமக்கிறாள். சகித்துக் கொள்கிறாள். இந்த வகையில் அந்த இஸ்லாமியப் பணியாளனுக்கு அவள் பலம் கொடுக்கிறாள். அவனையே தாங்குகிறாள்.

இப்படி வாழந்தவரே ஷெய்க் அகாரின் மனைவி. அவர் ஷெய்க் அகாருக்கு மனைவியாக மட்டுமல்ல. ஒரு தாயாகவும், சகோதரியாகவும் இருந்து அவரைப் பராமரித்தார். எனவேதான் யாரும் எதிர்பாராத அவரது இத்திடீர் மறைவு ஷெய்க் அகாரைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் இழப்பாகியது. அது அவரைக் கடுமையாகப் பாதித்தது. எனினும் இந்த இறை சோதனையை ஏற்றுத் தாங்கிச் செல்லும் பண்பும், பக்குவமும் அவரிடம் உண்டு. அல்லாஹ் அவருக்கு இத் துன்பத்திலிருந்து வெளியேறும் ஒரு வழியை ஆக்குவானாக.

ஆனால் ஷெய்க் அகாரின் மனைவியின் மரணத்தைப் பொறுத்தவரையில் நாம் அவதானிக்ககத்தக்க ஓர் உண்மை உள்ளது. அது தான் அல்லாஹ்விடத்தில் அவர் உயர்ந்த கூலியைப் பெறக் கூடியவராக இருக்கலாம் என்பதாகும். கீழ்வரும் இறைதூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை அவருக்கும் பொருந்தலாம் :

ஷஹீதுகள் ஐந்து பேர் :

  • தொட்டு நோயால் மரணித்தவர்.
  • வயிற்றுப் போக்கால் (கொலரா) இறந்தவர்.
  • நீரில் முழ்கி இறந்தவர்.
  • இடிபாடுகளுக்கு உட்பட்டு இறந்தவர்.
  • அல்லாஹ்வின் பாதையில் (யுத்தகளத்தில்) மரணித்தவர்.

(ஷஹீஹ் அல்புகாரி: 2829)

நீரில் மூழ்கி இறத்தல், இடிபாடுகளுக்கு உட்பட்டு இறத்தல் என்பவற்றின் மூலம் எதிர்பாராத அபாயங்கள் மூலம் அகால மரணமடைவோரையே இறை தூதர் (ஸல்) குறிக்கிறார்கள். புவி நடுக்கம், சுனாமி, எரிமலைக் கக்கல் என்பவற்றின் மூலம் இறப்பவர்களையும் இது குறிக்கலாம்.

தற்கால சாலை விபத்துக்களும் இடிபாடுகளுக்கு உட்பட்டு மரணித்தல் போன்ற எதிர்பாரா பயங்கர அழிவுகளேயாகும். அந்த வகையில் இத்தகைய மரணங்களும் ஷஹீதின் கூலிலையைப் பெற்றுத் தர முடியும் என நம்பலாம். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

அல்லாஹ் அப்பெண்ணுக்கு அத்தகைய உயர்ந்த கூலியைக் கொடுப்பானாக எனப் பிரார்த்திப்போம்.

Reply