இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா ?

இறை சட்டங்களுக்குக் காரணங்கள் காணப்படுமா ? மனிதனால் அல்லாஹ் இயற்றி அளித்த சட்டங்களுக்கான காரணங்களையும், நோக்கங்களையும் கண்டு பிடிக்க முடியுமா?
அல்லது இறை சட்டங்களுக்கான காரணங்களை மனிதன் தேடிச் செல்லச் கூடாது; அந்த சட்டங்களை அப்படியே பின்பற்றுவதுதான் அவனது கடமை என்பதா? அதாவது மனித பகுத்தறிவால் இறை சட்டங்களுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை எனக் கருத வேண்டுமா?

வேதம் புனிதமானது, அதன் வசனங்கள் புனிதமானவை புனித வசனங்களை மனித அறிவு மாசுபடுத்தி விடக்கூடாது என்ற பின்னணியிலிருந்தே இந்தக் கேள்விகள் தோன்றுகின்றன.
இறை அறிவு கற்பனைக்கெட்டாதளவு பாரியது. அந்தவகையில் அவனது சட்டங்களின் உள்ளே பல இரகசியங்கள் மறைந்திருக்கக் கூடும். எனவே காரணங்களைத் தேடித் திரியாமல் அவற்றை அப்படியே பின்பற்றுவதே முறை. இவ்வகையான பார்வையும் மேற்குறிப்பட்ட கேள்விகளுக்கான காரணங்களாக அமைகின்றன.

சாப்பிட்டு விட்டு கையை சூப்பிக் கொள்ளுமாறு இறை தூதர் (ஸல்) கூறியிருந்தால் கையைச் சூப்பித்தான் ஆக வேண்டும். அந்த ஸூன்னாவை விட்டு விடாதிருக்க கைகளாலேயே சாப்பிட வேண்டும்!

இறை தூதர் (ஸல்) பல்லைத் தீட்ட ஒரு மரக்குச்சியைப் பாவித்தார்கள் எனின் மரக்குச்சியையே பாவிக்க வேண்டும். பல்லைத் தீட்டுவதற்கான காரணமும் நோக்கமும் இங்கு தேவையில்லை. அந்த மரக்குச்சியில் ஏதோ இரகசியங்கள் இருக்கக் கூடும்!

குறிப்பிட்ட செல்வங்களில் இறைதூதர் (ஸல்) ஸகாத் கொடுக்கச் சொன்னால் அதற்கான காரணங்களைத் தேடி அவற்றை ஒத்த இன்னும் பல செல்வங்களிலும் ஸகாத் கடமையாகும் எனக் கொள்ளத் தேவையில்லை. அவ்வாறு இறைதூதர் (ஸல்) சொன்னதில் ஏதோ எமக்குப் புரியாத ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கக் கூடும்.

கரண்டைக் காலின் கீழே உடை செல்லக் கூடாது என்று இறை தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றால் அப்படித்தான் உடுக்க வேண்டும். அதற்கான காரணங்களைத் தேடக் கூடாது. கரண்டைக் காலுக்குக் கீழே செல்லும் அந்தத் துண்டுச் சீலையில் நரகத்தை நோக்கிச் செல்லச் செய்யும் எமக்குப் புரியாத ஏதோ இரகசியங்கள் இருக்கக் கூடும்!

கிலாபத், ஜிஸ்யா, திம்மி என்ற சொற்கள் அல்குர்ஆனிலோ, சுன்னாவிலோ வந்தவை. எனவே அவற்றை அப்படியே பாவித்து அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இங்கே அப்பிரயோகங்களுக்கான காரணங்கள், வரலாற்று சூழல்கள் என்பவை கவனத்திற் கொள்ளப்படத் தேவையில்லை.

ஓவியம், படங்கள் தடைசெய்யப் பட்டுள்ளன என்றால் அதனை அப்படியே பின்பற்ற வேண்டும். அதற்கான காரணங்களையும், நியாயங்களையும் தேடக் கூடாது. ஓவியம், படம் ஹராமானது அவ்வளவுதான்.

முஸ்லிம் பொது மக்களில் பெரும் பகுதியினர் இவ்வாறுதான் நம்புகிறார்கள். ஆலிம்கள் சிலரும் கூட இப்படியே கருதுகிறார்கள். அதே போக்கில் “மதம் என்பது ஒரு புனிதக் கட்டுமானம். அந்த வகையில் அது பெருங்கதையாடலாக மாறிப் போயுள்ளது. எனவே மதத்தைப் பின்பற்றுவோர் இறுகிய சிந்தனை கொண்ட கடும் போக்குவாதிகள்” இவ்வாறு படித்த வர்க்கத்தினர் கருதுகின்றனர்.

அல் குர்ஆனின் வார்த்தைகள் புனிதமானவை. இறை தூதரின் வார்த்தைகளுக்கு மிக உயர்ந்த பெறுமானமுண்டு. இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அதன் பொருள் அவற்றை பக்திச் சொல்லாடலாக மாற்றி ஆய்வுக்கும், காரணங்கள் காண்பதற்கும் அப்பாற்பட்டவையாக அவற்றை ஆக்குவதா?

புனித வேதத்தையும், ஹதீஸையும் ஆய்வுக்கும், காரணங்கள் காண்பதற்கும் அப்பாற்பட்டதாகக் கொள்வது மிகவும் அபாயகரமானது.

அதனையே ஐரோப்பாவின் தலை சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் அலி இஸ்ஸத் பிகோவிச் மிகவும் ஆழமாகக் கீழ்வருமாறு சொன்னார்.

முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று

“இஸ்லாத்திற்கு மதவிளக்கம் கொடுத்தமையாகும்”

ஆனால் இஸ்லாத்தின் யதார்த்தம் அவ்வாறானதன்று. மிகச் சுருக்கமாக அதனைக் கீழ்வருமாறு குறிக்கலாம் :

“தஃலீலுல் அஹ்காம்” – சட்டங்களுக்குக் காரணம் காணுதல், “மகாஸித் அல் ஷரீஆ” – ஷரீஆவின் உயர் இலக்குகள் என்பவை இஸ்லாமிய சட்டப்பகுதியில் ஆய்வுக்குட்படும் அடிப்படைப் பகுதிகள். மிகப் பெரும்பாலான இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட உண்மைகள் இவை.

எனவே காரணங்களையும், நோக்கங்களையும் காண்பதுவே பொதுவாக இஸ்லாத்தினதும் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தினதும் போக்காகும்.

Reply