பத்வாவும், சமூகயதார்த்தமும்

இஸ்லாமிய சட்டத் தீர்வுக்கு – பத்வாவுக்கு மூன்று பக்கங்கள் உள்ளன. அல் – நஸ்ஸூ – சட்ட வசனம் – அல் வாகிஉ – சமூக யதார்த்தம் – அல் மஆல் – அதன் குறுகிய நீண்ட கால விளைவு – என்பவையே அவையாகும்.

அல் குர்ஆனின் சட்டவசனமொன்று இறங்கிய போதும் இறை தூதர் (ஸல்) அவர்கள் தீர்வுகளைச் சொன்ன போதும் சமூக யதார்த்தம், விளைவு என்பவை கவனிக்கப்பட்டன என்பது மிகவும் தெளிவு. மது ஹராமாக்கப்பட்டமை, தொழுகை கடமையாக்கப்பட்டமை போன்ற பல்வேறு சட்டங்களை எடுத்து நோக்கும் போது இவ்வுண்மை மிகத் தெளிவாகத் தெரிகிறது. இங்கு அதற்கான ஆதாரங்களை விளக்குவது நோக்கமல்ல. இமாம் ஷாதிபி, இப்னு தைமியா போன்ற பழைய அறிஞர்களும், ரைஸூனி, ஜாஸிர் அவ்தா போன்ற நவீன அறிஞர்களும் இது பற்றி நிறையவே தெளிவாக விளக்கியுள்ளனர்.

இங்கு நாம் விளக்க வருவது எமது வாழ்வு நிலை பற்றிய சில உண்மைகளையாகும். நாம் சிறுபான்மை என்ற சமூக யாதார்த்தத்தின் உள்ளே வாழ்கிறோம். எனவே அந்த யதார்த்தத்தின் மீது எமது தீர்வுகள் அமையப் பெற வேண்டும். அந் நிலையில் மூன்று உண்மைகள் எமது அவதானத்திற்கு வர வேண்டும்.

1. சமூக யதார்த்தத்துடனான சட்டத் தீர்வின் பொருத்தப்பாடு.

2. அடுத்த சமூகத்திற்கு தூதை எத்தி வைக்கும் பொறுப்பு எம்மீது இருப்பதால் குறிப்பிட்ட சட்டத் தீர்வு தூதை எத்தி வைத்தல் என்ற பகுதியில் ஏற்படுத்தும் தாக்கம். அதாவது குறிப்பிட்ட தீர்வு அடுத்த சமூகங்களின் அறிவிலும், மனநிலையிலும் ஏற்படுத்தும் தாக்கம்.

3. குறிப்பிட்ட சட்டத்தீர்வு – பத்வா உடனடியாகவும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தும் விளைவு. சிறுபான்மை நிலையில் நின்று பேசினால் இன, மத, தீவிர நிலைகளை அத் தீர்வு வளர்த்து விடப் பங்களிப்பு செய்யலாமா என்ற புரிதல்.

மார்க்கத்தில் எமக்கு தெரிவு நிலைகள் பல உள்ளன :-

இஜ்மாவான – ஏகோபித்த முடிவுகள் – தீர்வுகளில் சட்டங்களில் மிகக் குறைவு. கருத்து வேறுபாடுகள் நிறையப் பகுதிகளில் உள்ளன.

மார்க்கத்தில் உள்ள அனைத்தும் வாஜிப்கள் அல்ல. வாஜிப், சுன்னா, முஸ்தஹப் எனப் பல தரங்கள் உள்ளன.

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இந்த உண்மைகளைக் கவனத்திற் கொண்டு தமது மார்க்க வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்ளாத போது :

(i) இறை மார்க்கத்தை விட்டு அடுத்த சமூகங்களை ஓடச் செய்வோம்.
(ii) இன, மத தீவிர நிலைகளை உருவாக்கி முஸ்லிம்களின் இருப்புக்கே ஆபத்தான நிலையை உருவாக்கி விடுவோம்.

Reply