மீண்டும் துருக்கி தகுதியுடன் தலைமையை நோக்கி

கலாநிதி முக்தார் ஷன்கீதி.

ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் சமூகவியல் அறிஞரும் நாகரீக ஆய்வின் தத்துவ ஞானியுமான அப்துர் ரஹ்மான் இப்னு கல்தூன் (கி.பி. 1332 – 1406) துருக்கியர் இஸ்லாமிய நாகரீகத்தின் பசுமையை மீள் புணரமைத்தமையை அவதானித்தார். ஏனெனில் பல நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் அந் நாகரீகம் இளைத்து ஒடிந்து போய்க் காணப்பட்டது. அதன் மூக்கனாங்கயிற்றை பற்றியிருந்த அப்பாஸிய அரசின் அதிகார வர்க்கத்தினர் சோர்ந்து விழுந்திருந்தனர். அவர்கள் ஆண்மையையும் பலத்தையும் இழந்திருந்தனர். இடாம்பீகத்தில் மூழ்கி அவர்கள் செயற் திறனிழந்து போயிருந்தமையே அதற்குக் காரணம். போதாமைக்கு கிழக்கில் மங்கோலியரும் மேற்கில் சிலுவை வீரர்களும் அதனை நோக்கி ஒரேயடியாகப் பாயவும் முற்பட்டிருந்தனர். அத்தோடு பாதினி சிந்தனையும் அந்நாகரீகத்தின் உடலை அரித்து வந்தது. இந் நிலையிலேயே துருக்கியர் நுழைந்தனர்.

எகிப்தின் மம்லூக்கிய அரசின் சமகாலத்தில் வாழ்ந்த இப்னுகல்தூன் துருக்கியர் இஸ்லாமிய உலகின் இதயத்தை ஊடுருவியமையையும் அதன் நிகழ்வுகள் மீது இரானுவ மேலாண்மை செலுத்த முற்பட்டமையையும் “ஏற்கனவே திட்டமிட்ட இறை கவனிப்பு எனவும் இறைவன் அவனது படைப்பினங்களது நிகழ்வுகளில் மிக நுனுக்கமாகத் தலையிடல்” எனவும் கருதினார்.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அரபிகளை ஒன்றிதிரட்டினார்கள். எந்த இலக்குமின்றி, ஒழுக்கம் பண்பாட்டுத் தூதுமின்றி தம்மிடையே போராடி சமூகத் தற்கொலை வாழ்வை மேற்கோண்டிருந்த அந்த அரபிகளை அவர்களுக்கும், மனித சமூகத்திற்கும் உயர்ந்த ஒரு உலகை அளிக்க வல்ல போராட்ட வாழ்வின் பக்கம் திரும்பி விட்டார்கள் இத்தகைய உன்னத வாழ்வையும், அந்த ஆரம்ப கால வீர வாழ்வையும், வேகத்தையும் அரபிகள் இழந்து வீழ்ந்து கிடப்பது கண்டு இப்னு கல்தூன் -அவர் அரபு எமனிய மூலம் கொண்டவர்- மிகுந்த கவலைப்பட்டார்.

இப்னு கல்தூனின் ஆய்வுப்படி இப் பின்தங்களுக்குக் காரணம் அரபிகள் தமது பலத்தின் இரு மூலங்களையும் புறக்கணித்ததாகும். அவையே இஸ்லாத்தின் தூதும், தமது சமூக கட்டமைப்பு மீதான பற்றும், ஈடுபாடுமாகும். எனினும் இப்னு கல்தூன் அவர் இன உணர்வுக்கு அப்பாற்பட்ட முஸ்லிம் என்ற வகையில் ஆரம்பகால அரபு வெற்றியாளர்களை இயக்கிய மனோ வேகத்தின் நெருப்பு அணைந்ததன் பின்னர் இஸ்லாமிய நாகரீகத்தின் ஓட்டத்திற்கான தலைமையின் இடத்தை நிரப்ப துருக்கியர் வந்தமை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

சிலுவை படையெடுப்புகளும், மங்கோலிய யுத்த நிகழ்வுகளும் இஸ்லாமிய உலகின் தலைமையைத் தகுதியுடன் சம்பாதித்துக் கொள்ளும் பொன்னான சந்தர்ப்பத்தை துருக்கியர்களுக்குக் கொடுத்தன. அப்போது முஸ்லிம்களுக்கு துருக்கியர்களின் இரானுவத் திறமையும், தியாக மனப்பாங்கும் மிகத் தேவையாக இருந்தது. கி.பி. 1055 இல் மன்னர் தக்ரல் முதல் ஸெல்ஜூகி ஸுல்தான் பக்தாதில் மன்னராக பிரகடனப் படுத்தப்பட்டதிலிருந்து இறுதி பலமிக்க உஸ்மானிய மன்னர் 2ம் அப்துல் ஹமீத் ஸ்தான்பூலில் 1909 இல் பதவி கவிழ்க்கப்பட்டது வரையில் 8 நூற்றாண்டுகள் துருக்கியின் தலைமை இஸ்லாமிய உலகில் நீண்டது. ஆசியாவின் மத்திய பகுதியிலிருந்து பாரசீக நாடுகள் இராக், ஷாம் இறுதியாக எகிப்து, துருக்கி என நகர்ந்த ‘துருக்’ கோத்திரங்களின் நகர்வைத் தொடர்ந்து இஸ்லாமிய நாகரீகத்தின் மையம் மேற்காக மாறியது.

இராணுவப் போக்கு துருக்கியின் தலைமைக்கான வழியாக அமைந்தது. இஸ்லாமிய அகிலத்தின் எல்லைகளைக் காப்பதில் துருக்கியர் காட்டிய உறுதிக்கும், ஈடுபாட்டுக்கும் இஸ்லாமிய வரலாற்றில் எந்த சமூகத்திடமும் உதாரணம் காண முடியாது. இவ்வாறு அவர்கள் தம்மை நிறுவிக் கொண்டனர். இப் பண்புகளால் பலமும் வீரமும் மிக்க அந்த சமூகம் தன்னை தகுதியோடு முன்வைத்தது. பின் அணியில் இருந்து முன்னே வந்தது. ஹலபின் வரலாற்றாசிரியர் இப்னு அல் அதீம் ஒரு சுவாரசியமான நிகழ்வைத் தருகிறார். அது இஸ்லாமிய உலகின் தலைமை ஏற்க துருக்கியர் கடந்து வந்த பாதையின் ஆழ்ந்த வரலாற்று மாற்றத்தைக் காட்டுகிறது. ஸல்ஜூகியரின் இரண்டாவது மன்னர் அலப் அர்ஸலான் ஈராக்கிலிருந்து ஷாமுக்கு நகர்ந்த நிகழ்ச்சியை எழுதும் இப்னு அல் அதீம் எழுதுகிறார்:

கண்ணியத்துக்குரிய ஸுல்தான் யுப்பிரடீஸ் நதியைக் கடந்த போது அந்நதியின் பக்கத்தே இருந்த அழகிய புல்வெளிப் பகுதியோன்றில் இறங்கினார். அப்பகுதி ஸுல்தானுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அப்போது சட்ட அறிஞர் அபூ ஜஃபர் ஸுல்தானைப் பார்த்து: தலைவரே அல்லாஹ் உமக்குப் புரிந்த அருளுக்கு அவனைப் புகழ்வீராக. இந்த நதியை இதுவரை கடந்த துருக்கியர் எல்லோரும் அடிமையாகவே இருந்துள்ளனர். ஆனால் நீங்கள் இன்று மன்னர்களாக அதனைக் கடக்கின்றீர்கள். அப்போது ஸுல்தான் சில தலைவர்களையும், அரசர்களையும் அங்கே அழைத்தார். நான் கூறியதைத் திரும்பச் சொல்லுமாறு கட்டளையிட்டார். நான் திரும்பச் சொன்னேன். அப்போது ஸுல்தானும் அங்கு வந்தோரும் மிக அதிகமாக அல்லாஹ்வைப் புகழ்ந்து நின்றனர். (புக்யது அல் தலப் பீ தாரீகி ஹலப் பாகம்:4 பக்கம்:1974)

 

“அஹ்லுஸ் ஸுன்னா, ஷீயா தொடர்புகளில் சிலுவைப் போர்கள் ஏற்படுத்திய தாக்கம்” என்ற எனது நூலின் -இது துருக்கி மோழிக்குப் பெயர்க்கப் பட்டுள்ளது- ஆரம்பப் பகுதிகளில் அரபிகள் இஸ்லாத்தின் ஆரம்பப் புறப்பாட்டின் போது அதன் வாளாக இருந்தார்கள். துருக்கியர் இஸ்லாத்தின் பாதுகாப்புக் காலப்பிரிவில் அதன் கவசமாக இருந்தார்கள் என விளக்கினேன். – 5ம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இஸ்லாமிய உலகின் போக்கு அரபிகளின் கைகளிலிருந்து துருக்கியர்களது கைகளுக்கு மாறியது போலும். சிலுவை யுத்தங்களின் போது இஸ்லாமியப் பாதுகாப்புப் போராட்டத்தின் பெருந்தலைவர்கள் அனைவரும் (ஸல்ஜூகியர், தானிஷ்மென்ட், அராதிகா, ஜின்கியூன், குவாரஜ்மியூன், மம்லூகியர்) துருக்கி இனப் பிரிவினராக இருந்தனர். என்பதை வரலாற்று ஆய்வின்  ஊடாக அங்கே நான் விளக்கினேன்.

சிலுவைப் படையெடுப்புகளை எதிர் கொண்ட போராட்டம் அனைத்தும் அதன் சமூகவியல், இராணுவ அர்த்தத்தில் அடிப்படையில் அருக்கிய வெளிப்பாடாகவே இருந்தது. குர்தி ஸூல்தான் ஸலாஹுத்தீனின் இடைக்கால மிகக் கவர்ச்சிகரப் பங்களிப்பு இந்த விதியை உறுதி செய்வதுவேயன்றி அதற்கு புறம்பானதாக இருக்கவில்லை. ஏனெனில் ஸலாஹுத்தீன் துருக்கி இராணுவத் தலைமையில் ஒரு பகுதி. அதற்குப் வெளியில் இருந்த ஒருவர் அல்ல.

மன்னர் பீபர்ஸின் தலைமையில் புறப்பட்ட துருக்கி மம்லூக்கியரே கிழக்கிலிருந்து புறப்பட்ட மங்கோலியப் புயலை பலஸ்தீனின் ஐய்னு ஜாலூத்தில் வைத்து உடைத்தவர்கள் என்ற உண்மையை இங்கு ஞாபகப் படுத்தத் தேவை இல்லை. என நினைக்கிறேன்.

இஸ்லாம் அன்று வரை எதிர்கொள்ளாத அழிவு தரும் அபாயத்திலிருந்து இஸ்லாமிய உலகை மீட்ட மிகப் பெரும் வெற்றியாக அது அமைந்தது. அரபு வளைகுடாவின் கரையோரப் பகுதிகள் முதல், மத்திய தரைக்கடல் கரைப் பிரதேசம், சூடானின உட்பகுதிகள், பால்கனின் ஆழப் பகுதிகள் வரை இஸ்லாமிய உலகின் எல்லைகளைப் பாதுகாப்பதில் நானூறு வருடங்கள் உஸ்மானியர் அர்ப்பணித்துப் பாடுபட்டமை, போராடியமையையும் நான் இங்கு குறிப்பட வேண்டி அவசியமில்லை.

அஹ்லுஸ் ஸுன்னா அரபிகள் இஸ்லாத்தின் அறிவு, ஆன்மீக அடித்தளத்தினர். அவர்களைச் சம்பாதித்து தம் அணியில் துருக்கியர் இணைத்துக் கொண்டனர். இது இஸ்லாமிய உலகின் போக்கை தம் கையில் வைத்திருக்க துருக்கியருக்கு உதவியது. அஹ்லுஸ் ஸுன்னா குர்திகள் ஒரு போராட்ட இனம். சிலுவை யுத்தங்களில் அவர்களது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அவர்களையும் துருக்கியர் சம்பாதித்துக் கொண்டனர். இவ்வாறு துருக்கி, அரபு, குர்தி தலைமைகள் ஒரு பொதுப் புரிந்துணர்வுக்கு வந்தனர். தங்கள் பங்களிப்பையும், தமக்கான இடத்தையும் அதன் அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொண்டனர். பாரசீக, துருக்கி இலக்கியங்களின் ஆய்வாளரான எகிப்திய ஹுசைன் முஜிப் துருக்கியர்கள் அரபுலகுடனான தொடர்பின் போது இன, அறிவு, மேலுணர்வு கொண்டவர்களாக இருக்கவில்லை; ஆனால் பாரசீகர்களோ இதற்கு மாற்றமாக அரபு பாரசீகத் தொடர்பின் போது இன, அறிவு, மேம்பாட்டுணர்வு  கொண்டிருந்தனர் என்பதை அவதானப்படுத்தியுள்ளார். (அரபு, பாரசீக, துருக்கியர் தொடர்புகள் (பக் 219 – 220)

இன்று முஸ்லின் சமூகம் கேந்திர மூலோபாய கட்டமைப்பு உடைந்து திறந்துபட்ட மிக அபாயகர நிலையில் வாழ்கிறது. வெளிச் சக்திகளின் ஊடுருவலும் இந் நிலையை மேலும் ஊட்டி வளர்க்கின்றன. சிலுவை, மங்கோலிய படையெடுப்புக்கள் காலப் பிரிவை இது ஒத்துள்ளது. இந்த மிகச் சிக்கலான நிலைமையிலிருந்து மீள வேணடுமாயின் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை வகிக்கத் தக்க திடசித்தமும், தகுதியும் வாய்ந்த சக்தியொன்று தோன்ற வேண்டும்.

அரசியல் தத்துவஞானி சார்முவேல் ஹண்டிங்ரன் இக்கருத்தை புரிந்திருந்தார். அதனை “நாகரீகங்களின் மோதல்” என்ற தமது பிரபல்யம் மிக்க நூலில் விரிவாக விளக்கினார். அது பல சமயங்களில் மிகவும் பிழையாக விளக்கப்பட்ட நூல். அந்நூலின் ஆசிரியரும் பிழையாக விளங்கப்பட்டார். அவர் யுத்தத்திற்கான பிரச்சாரகராகவோ அல்லது நாகரீகங்களின் மோதலுக்கான பிரச்சாரகராகவோ இருக்கவில்லை. ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக மிகுந்த தைரியத்தோடு நின்றவர் அவர். அவர் மிகுந்த நுண்ணிய அவதானிப்பாளர். பனிப் போர் காலப் பிரிவில் காணப்பட்ட நிலைமைக்கு மாற்றமாக நாம் வாழும் இக் காலப்பிரிவில் சர்வதேசத் தொடர்புகளில் மார்க்கங்களினதும், நாகரீகங்களினதும் தாக்கத்தை தனது நுண் அறிவால் அவர் புரிந்து கொண்டார். ஹண்டிங்ரன் தனது நூலின் மைய சிந்தனையை கீழ்வருமாறு விளக்குகிறார் :

“உலகம் பனிப் போரின் பின்னர் நாகரீகங்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படப் போகிறது அல்லது தொடர்ந்தும் ஓர் ஒழுங்கு நிலைக்கு வராமலேயே இருந்து விடப் போகிறது. இவ்வுலகில் நாகரீகங்களின் மையநாடுகள் காணப்படுகின்றன அவையே ஒழுங்கமைப்பின் மூல நாடுகளாகும். அது நாகரீகங்களுள்ளேயும், வேறுபட்ட நாகரீகங்களிடையேயும் அவ்வொழுங்குபடுத்தல் பணியை மேற் கொள்ளக் கூடியதாகும்.  அந்நாகரீகங்களின் மைய நாடுகளின் ஊடே நிகழும் கருத்துப் பரிமாறல்கள் ஊடாக இவ்வொழுங்கமைப்பு சாத்தியமாகும். பொது கலாச்சாரக் காரணிகள் தலைமைக்கு சட்ட அங்கீகாரத்தைக் கொடுக்கும். மைய நாடுகளுக்கு ஒழுங்கமைப்பை பிரயோகிப்பதற்கான தகுதியையும் கொடுக்கும். இது உறுப்பு நாடுகளுக்கும், வெளிச்சத்திகள், நிறுவனங்களுக்குமாக அமையும்.”

(ஹண்டிங்ரன் – நாகரீகங்களின் மோதல் பக்கம்:254)

பின்னர் அவர் தான் வந்த முடிவை விளக்குகிறார்: எப்பிராந்தியத்திலாயினும் சரியே, அப்பிராந்தியத்தின் ஆதிக்க மிக்க நாட்டில் தலைமையின் கீழன்றி சமாதானம் சாத்தியப்பட மாட்டாது. ஏற்பட்ட சமாதானத்தை காத்துக் கொள்ளவும் முடியாது. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய சத்திக்குப் பிரதியீடாக அமைய முடியாது. மைய நாடு தனது நாகரீகத்தின் உறுப்பினர்களோடு உறவாடுகையில் பிராந்திய சக்தி என்ற நிலை சட்ட அங்கீகாரம் உள்ளதாக அமையும். பொறுப்பு நாடாகவும் அது அமையும். மைய நாடு தனது ஒழுங்குபடுத்தற் பணியை மேற்கொள்வதும் சாத்தியமாகும். ஏனெனில் உறுப்பு நாடுகள் அதனை கலாச்சார உறவு நாடாகவே நோக்கும். நாகரீகம் என்பது விரிந்த கூட்டுக்குடும்பமாகும். குடும்ப உறப்பினர்களில் மூத்த அங்கத்தவர் போல் மைய நாடுகள் குடும்ப உறவினர்களுக்கு பலப்படுத்தலையும் ஒழுங்கமைப்பையும் கொடுக்கும். இந்த உறவில்லாத போது பலமிக்க நாடு அப்பிராந்தியத்தில் போராட்டங்களுக்குத் தீர்வுகள் காண்பதோ, ஓர் ஒழுங்கமைப்பைப் பேணுவதோ வரையறைக்குட்பட்ட கொஞ்ச சந்தர்ப்பங்களாகவே அமையும். (நாகரீகங்களின் மோதல் : பக்கம்:255)

இஸ்லாமிய நாகரீகத்தின் இக் காலத்தய அநாதை நிலையை ஹண்டிரன் அவதானித்தார். ஏனெனில் அது தன் வாழ்வுக்குத் தலைமை வகிக்கத்தக்க, உட்கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய, எதிரிகளின் எறி அம்புகளை விட்டுக் காக்கக்கூடிய மைய அரசைப் பெற்றில்லை. “இஸ்லாமிய மைய நாடொன்றின்மை இஸ்லாமிய சமூகங்களுக்கும், இஸ்லாம் அல்லாத சமூகங்களுக்கும் முக்கியமான பிரச்சினையாக அமைகிறது.” (நாகரீகங்களின் மோதல்: 221) இது இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் பலவீனத்தின் மூலமாகவும். ஏனைய நாகரீகங்களுக்கான அச்சுறுத்தலாகவும் அமைகிறது.

(பக்கம்: 289)

கேந்திர மூலோபாய கட்டமைப்பின் உடைவும், அதன் திறந்துபட்ட நிலையும் 20 நூற்றாண்டின் ஆரம்பங்களிலிருந்து ஐரோப்பிய காலனித்துவ வாதிகளால் உஸ்மானிய அரசு சிதறுண்டதிலிருந்து உருவாக ஆரம்பித்தது. “உஸ்மானிய சாம்ராஜியத்தின் முடிவு இஸ்லாத்தை மைய நாடில்லாத நிலைக்காக்கியது. இஸ்லாமிய நாடுகளால் அங்கீகரிக்கத் தக்கதாகவும், இஸ்லாமிய நாகரீகங்களின் தலைமை என முஸ்லிமல்லாத சமூகங்களால் ஏற்கத்தக்கதாகவும் அமையும் வகையில் எந்த ஒரு முஸ்லிம் நாடும் இருபதாம் நூற்றாண்டிள் மிகப் பெரும்பாலான காலப் பகுதிகளில் போதுமான சக்தியோ, காலாச்சாரப் பலமோ, மார்க்க அங்கீகாரமோ பெற்றிருக்க வில்லை. (நாகரீகங்களின் மோதல்: 289)

இஸ்லாமிய நாகரீகத்தின் மைய அரசின் பங்காற்றத் தக்கது எனக் கருதக் கூடிய ஆறு அரசுகளை ஹண்டிங்ரன் மதிப்பீடு செய்கிறார். அவை சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஈரான் என்பவையாகும். அவற்றில் 5 நாடுகள் இத்தலைமையை ஏற்கத் தடையாக அமையும் அடிப்படை அம்சம்களைக் கொண்டுள்ளது என ஹண்டிங்ரன் காண்கிறார். ஒன்று ஒப்பீட்டு ரீதியாக சனத்தொகை குறைபாடும், புவிசார் பாதுகாப்பின்மையும் கொண்ட நாடு (சவுதி அரேபியா). இரண்டு உம்மாவுக்கும் குறிப்பிட்ட நாட்டுக்குமிடையிலான மார்க்க ரீதியான வேறுபாடுகளும் அரபிகளுக்கும் அக்குறிப்பிட்ட நாட்டுக்குமிடையிலான மோசமான உறவும் கொண்ட நாடு (ஈரான்). மூன்று இயற்கை வளக் குறைபாடு கொண்ட நாடு (எகிப்து). நான்கு இனப்பிரிவினையும் இஸ்திரமற்ற அரசியல் போக்கும் கொண்ட நாடு (பாகிஸ்தான்). இறுதியாக அரபு பிராந்திய மையத்திலிருந்து தூரமாக இஸ்லாமிய உலகின் எல்லையில் அமைந்திருக்கும் நாடு (இந்தொனேஷியா).

ஆறு நாடுகளில் துருக்கி மட்டுமே இஸ்லாமிய உலகுக்குத் தலைமை தாங்கும் தகுதியைப் பெற்றுள்ளது. “துருக்கி மைய நாடாக அமைய வரலாற்றுப் பின்னணி, சனத்தொகை, பொருளாதார வளர்ச்சியில் நடுத்தர நிலை, தேசிய இஸ்திர நிலை, இராணுவப் பாரம்பரியம் என்ற அனைத்தையும் கொண்டுள்ளது. ஆனால்  அதாதுர்க் துருக்கி குடியரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தை அடுத்து இப் பங்கை ஏற்று இயங்குவதை இல்லாமல் செய்தார். மதச் சார்பற்ற நாடு என மிகுந்த தெளிவோடு அந்நாட்டை வரையறுத்தமையே இதற்குக் காரணமாகும்” (நாகரீகங்களின் மோதல் 291) பின்னர் அதன் மீது பனிப் போர் திணிக்கப்பட்டது. சோவியத் யூனியனின் அபாயம் அதன் மீது விழுந்தது. இவ்வாறு மேற்குலகோடு இணைந்து அது சீரழிந்தது. (பக் 236) இந்த வகையில் துருக்கி அதன் தனித்துவத்தைப் பொருத்தவரையிலும், மூலோபாயத் திட்டத் தெரிவுகளைப் பொருத்த வரையிலும் உடைந்து சிதறிய நாடாகியது. (பக் 243)

இந்த வகையில் இஸ்லாமிய உலகின் தலைமை நாடாகவும், மைய அரசாகவும் துருக்கி மாறுவதற்குள்ள தடைகள் அடிப்படைத் தடைகளல்ல. இடைக்காலத் தடைகளாகும். அது அந்நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட தீவிர மதச் சார்பின்மை என்ற கொள்கையும் மேற்குக்கு அடிமைப்பட்டுப் போனதுவுமாகும். ஆனால் அதன் தகுதியும் வரலாறும் கலாச்சாரமும் இஸ்லாமிய உலகின் தலையாக அது இருக்க வேண்டும் என வேண்டுகின்றது; மேற்குலகின் வாலாகவல்ல. ஹன்டிங்ரன் துருக்கி மீது போடப்பட்ட விலங்குகள் படிப்படியாக அவிழ்ந்து செல்வதை அவதானித்தார். “துருக்கியைப் பொருத்தவரையில் எல்லா இடங்களிலும் நடப்பது போல ஜனநாயகம் அதனை அதன் மூல நிலைக்கு அதாவது மார்க்கத்திற்குக் கொண்டு சேர்க்கும். (பக் 241) இந்த வகையில் “இஸ்லாமிய எழுச்சி துருக்கி அரசியல் தனித்துவத்தை மாற்றி விட்டது. (பக் 241)

துருக்கி அதன் மீது திணிக்கப்பட்டுள்ள செயற்கை விலங்குகளிலிருந்து தன் தனித்துவத்தைக் கண்டு கொள்ளும்போது முழுமையாக விடுதலை பெறும் என ஹண்டிங்ரன் தனது பெறுமதி மிக்க அவதானங்களை முடித்துக் கொள்கிறார். அவர் எழுதுகிறார் :

“துருக்கி தனது உண்மைத் தனித்துவத்தை கண்டு கொள்ளுமானால் மேற்குலகில் அங்கத்துவப் பிச்சை கேட்கும் தனது இழி நிலையை விட்டு நீங்கிக் கொள்ள துருக்கி தயாராகும் கட்டம் உருவாகலாம். இஸ்லாத்தின் தலைமைப் பேச்சாளன் என்ற வகையிலும் மேற்கின் போட்டியாளன் என்ற வகையிலும் துருக்கி அதிகம் தாக்கம் கொண்ட தனது வரலாற்றுப் பாத்திரத்தை மீண்டும் ஏற்கலாம். (பக் 291)

ஹண்டிங்ரனின் இந்த நூல் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்த நூலின் ஆசிரியர் இப்போது உயிர் வாழ்ந்திருந்தால் தனது ஆழ்ந்த ஆய்வின் உண்மை நிலையையும், எதிர் காலத்தை நோக்கிய தன் வார்த்தையின் ஆழத்தையும் கண்டு சந்தோஷப்பட்டிருப்பார். துருக்கி தனது வேர்களைக் கண்டு கொண்டது. தன்மை நன்கு விளங்கிக் கொண்டது.

இங்கு நாம் விவரித்த வரலாற்றுப் பாடத்தையும், ஹண்டிங்ரன் விளக்கிய புவிசார் அரசியலின் தாக்கத்தையும் நோக்கும் போது அவை இஸ்லாமிய உலகின் எந்த ஒரு நாடும் மைய அரசாக மாற மூன்று ஷரத்துக்கள் அவசியமெனக் காட்டுகிறது.

(1) இஸ்லாத்தின் காலாச்சார இதயமான அரபுலகத்திற்கு புவியியல்  ரீதியாகவும் உளரீதியாகவும் அண்மித்திருக்க வேண்டும்.

(2) தனது இலட்சியங்ளை நகர்த்தத்தக்க வகையில் பொருளாதார சக்தியையும் இராணுவப் பலத்தையும் மனித வளத்தையும் நிறுவனக் கட்டமைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.

(3) இத் தலைமையின் விலையாகிய தியாக உணர்வையும் அபாயங்களை ஏற்கும் பண்பையும் கொண்டிருப்பதோடு, அரசியல் நாட்டமும் காணப்பட வேண்டும்.

துருக்கி அரசிடம் மட்டுமே முதலாவது, இரண்டாவது ஷரத்துக்கள் பூரணமாகக் காணப்படுகின்றன. மூன்றாவது ஷரத்து அதனிடம் இன்னும் பூரணமாகவில்லை. விருப்பமும் துருக்கிய நலனும் இருந்த போதிலும்கூட தனது பக்கத்து நாடான சிரியாவின் பயங்கரக் காயம் தொடர்ந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்த போதும் துருக்கி எதுவும் செய்ய இயலாதிருக்கும் நிலை இதனைக் காடடுகிறது. பாதாள அரசின் விலங்குகளும், துருக்கியை உள்ளிருந்து அரித்து வரும் அரசுக்கு நிகரான கட்டமைப்பு -கோலன் இயக்க செயற்பாடுகள்-, துருக்கியை வீழ்த்த எதிர்பார்த்து நிற்கும் மேற்கின் துரோகம் பற்றிய பயம் என்பவையே இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

எனினும் இறுதியில் நிகழ்ந்த தோற்றுப் போன சதி;ப் புரட்சி இவ்விலங்குகளிலிருந்து பாரியளவு துருக்கியை விடுதலை செய்து விட்டது. புரட்சி நிகழ்வுகளோடு ஒட்டி முழு இஸ்லாமிய உலகிலும் ஏற்பட்ட உணர்வுப் புயல், இது மேற்போக்கான ஒரு அரசியல் நிகழ்ச்சி எனக் காட்டவில்லை. அது ஒரு வரலாற்றுத் திருப்பம் என்றே உணர்த்துகிறது.

Reply