குழந்தை என்ற செல்வம்

02.09.2016  எனக்கொரு விஷேட நாள். அருள் மிக்க நாள்

அன்று அல்லாஹ் எனக்கொரு பேரனைத் தந்து அருள் புரிந்தான். அத்தோடு எனது இரண்டாவது பரம்பரையும் ஆரம்பமாகிறது. 23 வருடங்களின் பின்னர் எமது வீட்டை அழகுப்படுத்த, உயிர்ப்பிக்க ஒரு குழந்தைச் செல்வம் வருகிறது. அக்குழந்தைக்கு அம்யஜ்(z)  (اميز) என்று பெயர் வைத்தோம். என்னைப் போலவே, என்னை விடவும் மேலாக ஒரு இஸ்லாமிய அறிவு ஜீவியாக நின்று அப்பேரன் ஒரு அறிவுப் போர் நடத்த வேண்டும் என்பது எனது பிரார்த்தனை; அவா; எதிர்பார்ப்பு.

நீங்கள் எல்லோரும் அதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டுமென உங்கள் எல்லோரிடமும் வேண்டுகின்றேன்.

இந்த நேரத்தில் குழந்தைச் செல்வம் பற்றி உங்களோடு இரண்டொரு வார்த்தைகள் பகிர்ந்து கொள்ளலாமா?

மனிதனே உலகில் மாபெரும் செல்வம். பௌதீக உலகும், மனிதனின் சமூக உலகும் அவனது நல்ல அல்லது கெட்ட நிலையிலே தங்கி இயக்கப்படுகின்றன.

மனிதன் ஏதுமறியா ”வெள்ளைக் ” குழந்தையாகவே உலகுக்கு வருகிறான். மேற்கூறிய அவனது பெறுமதி உணரப்பட்டால் குடும்பம் முதல் சமூகத்தின் பயிற்றுவித்தல் நிறுவனங்கள் வரை அனைத்தும் திறம்பட இயங்குகின்றன.

ஒரு சமூகத்தின் சிந்தனை, பண்பாடு, நாகரீகம் இவற்றை அடுத்து பரம்பரைக்கு கடத்தும் ஊடகம் குழந்தை.

எனவே எமது நாகரீகத்தின் சிந்தனையின் அடிப்படை அக்குழந்தையே. ஒரு சமூகம் என்பது சிந்தனை, நாகரீகம், பண்பாடு என்ற மானசீகப் பொருட்களே. அது வெறும் பௌதீக செல்வமன்று. இந்த வகையில் குழந்தை உரிய முறையில் பயிற்றுவிக்கப்படாத போது சமூகம் அழிவை நோக்கிச் செல்கிறது.

எனவே குழந்தையே மாபெரும் செல்வம் என்பது மீண்டும் உண்மையாகிறது.

ஒரு குடும்பத்தின், சமூகத்தின் பௌதீக வளமும் கூட தொடர்ந்து பாதுகாக்கப்படுவதும், வளர்வதுவும் அடுத்து வரும் பரம்பரைகளிலேயே தங்கியுள்ளது. மீண்டும் குழந்தையே செல்வங்களைப் பாதுகாக்கும் முதன்மைப்பட்ட செல்வமாகிறது.

இப்பின்னணியின் எமது வீட்டின் மிகப் பெரும் செல்வமாகக் குழந்தைகளைக் கண்டு அவர்களை வளர்ப்போம்.

அம்யஜ்(z) உங்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்கிறார்.

Reply