இஸ்லாமிய வாதம் என்ற கருத்தியலை புரிதல்

சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் “இஸ்லாமிய வாதம்” என்ற கருத்தியலில் எங்கே நிற்கிறோம்?

கிலாபத்தோ இஸ்லாமிய அரசோ இங்கு சாத்தியமில்லை.இஸ்லாமிய சமூக அமைப்பும் இங்கு நடைமுறைச் சாத்தியமில்லை.சமூக வாழ்வை இஸ்லாமிய மயப்படுத்தல் பற்றியும் இங்கு பேச முடியாது.

இங்கு காணப்படும் கல்வி, பொருளாதாரம், அரசியல் நிர்வாகம் போன்ற வாழ்வொழுங்குகளை ஏற்றுக் கொண்டு அவற்றில் எமக்குள்ள இடத்தைப் பெற நாம் உழைத்துப் பாடுபட வேண்டியது எமது தவிர்க்க முடியாத அதிமுக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டம்.

இப் பகுதியில் உழைத்துப் பாடுபடுவது இஸ்லாமிய உழைப்பாகுமா? நீண்ட காலமாக இந் நாட்டின் இஸ்லாமிய செயற்பாட்டாளர்கள் இப்பகுதிகளில் அவ்வாறு பாடுபடலை இஸ்லாமிய உழைப்பாகக் காணவில்லை.அவற்றை இஸ்லாமிய மயப்படுத்தல் பற்றியே அவர்கள் பேசினர். இப்போது இப்பகுதிகளில் ஓரளவான மாற்றத்தை அவர்களிடையே காண முடிகிறது.
இங்கு 2 விடயங்கள் அவதானிக்கத் தக்கவையாகும்:-

1. இந்த நாட்டின் நடைமுறை வாழ்வு அதாவது பொருளாதாரம், அரசியல் கல்வி, சட்ட ஒழுங்குகள் அவை பற்றிய இஸ்லாமிய சிந்தனை, சட்டங்களை விட்டு எந்தளவு தூரம் தூரமாக உள்ளது.
2. ஷரீஆ என்பதை சட்டம் என்ற கருத்தில் நோக்காது இஸ்லாத்தின் அனைத்துப் பகுதிகளையும் அது அடக்குகிறது என நோக்கினால் எமது செயற்பாட்டொழுங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தெளிவாகத் தீர்மானிக்க முடியும்.

அரசியல் பகுதியில் இந்நாடு ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது.ஜனநாயகம் என்பது இஸ்லாத்திற்கு முரண்படும் ஒரு கோட்பாடு அன்று. அரசியல் அநீதிகளை தவிர்க்க முன்வைக்கப்பட்டதொரு அரச நிர்வாகம் சம்மந்தமான கோட்பாடே அது. நடைமுறைப்படுத்துவதில்தான் தவறுகள் பலவற்றை அங்கு நாம் காண முடிகிறது.
பொருளாதாரப் பகுதியில் வட்டி போன்ற ஒரு சில பாவங்களே இஸ்லாத்தோடு முரண்படுகின்றன. பணக் கொடுக்கல் வாங்கல்களோடு சம்மந்தப்படும் மிக அதிகமான சட்டங்கள் இஸ்லாத்தோடு முரண்படுவதில்லை.

கல்விப் பகுதியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்த பகுதிகள் இஸ்லாத்தோடு முரண்படுவதில்லை. கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவு என்பனவற்றிலேயே சில முரண்பாடுகளை அவதானிக்க முடிகிறது.இந்த வகையில் நடைமுறை வாழ்வுக்கான சட்டப் பகுதியில் முரண்பாடுகள் மிகக் குறைவு.

ஷரீஆவை விரிந்த கருத்தோடு நோக்கும் போது:

நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், ஒழுக்கம் போன்ற பகுதிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளது.

அவ்வாறே இலக்கியம் சம்மந்தமான பகுதியும் பிரதியீடற்ற ஒரு நிலை காணப்படுகின்றமையால் பெரும் சமூக பாதிப்புக்களை தருகிறது.

இந்த சுருக்கமான விளக்கத்தின் பின்னணியிலிருந்து எம்மை எவ்வாறு நாம் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுவும், எமது தஃவா-இஸ்லாமிய உழைப்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பதுவும் தெளிவாக முடியும்.

Reply