பெருநாள் வாழ்த்துக்கள்

மதிப்புக்குரிய சகோதரர்களே.

உங்களுக்கு எனது பெருநாள் வாழ்த்துக்கள். அத்தோடு நோன்புப் பெருநாளைச் சுட்டும் இறை வசனத்தையும் உங்கள் முன் வைக்கின்றேன். நாமெல்லோரும்  அதன் கருத்தைப் புரிந்து கொள்வோம்.

“… நீங்கள் இந்த நோன்பு நாட்களின் எண்ணிக்கையைப் பூரணப்படுத்த வேண்டும்; உங்களுக்கு வழிகாட்டப்பட்டமைக்காக அல்லாஹ்வை நீங்கள் மேன்மைப் படுத்த வேண்டும்; நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே இவ் வழி உங்களுக்குக் காட்டப் பட்டது.” (ஸூரா பகரா 2:185)

நாம் கொண்டாடும் இப் பெருநாள் நோன்போடு ஒட்டியது. அந்தக் கருத்தைப் பின்னணியாகக்  கொண்டே இவ் வசனம் அமைந்துள்ளது. இவ்வசனத்தின் முதற்பகுதி அல்குர்ஆன் வழிகாட்டலாக இறக்கப் பட்டமையையும் அப்பின்னணியிலேயே நோன்பு கடமையாக்கப்பட்டமையையும் சொல்கிறது.

இந்த வகையில் வழிகாட்டியமைக்காக அல்லாஹ்வை மேன்மைப் படுத்தல், நன்றி செலுத்தல் என்ற இரு கருத்துக்களையும் நோன்பின் நாட்களை பூரணப் படுத்தலோடு இணைத்து இவ் வசனம் விளக்குகிறது.

அல்லாஹ்வை மேன்மைப் படுத்தலுக்கு அல்குர்ஆன் இங்கே தரும் அரபுப் பதம் ”துக்கப்பிருல்லாஹ்” என்பதாகும். அதாவது ” அல்லாஹு அக்பர் எனச் சொல்லல்” எனவும் அதற்குக் கருத்துக் கொடுக்கலாம்.

இந்தப் பின்னணியில் இவ்வசனம் கீழ்வருமாறு சொல்கிறது :

நோன்பைப் பூரணப்படுத்தி வழிகாட்டியமைக்காக அல்லாஹ்வை மேன்மைப் படுத்த வேண்டும் ; தக்பீர் சொல்ல வேண்டும். அத்தோடு நன்றியும் செலுத்த வேண்டும்.

இந்த வகையில் நோன்புப் பெருநாள் என்பது :

நோன்பு பிடித்து இறை நெருக்கத்தைப் பெற்று, இறை வழிகாட்டலைப் புரிந்து கொள்வதால் உருவாகும் மன நிலை. அந்த மன நிலையின் வெளிப்பாடே அல்லாஹு அக்பர் என்ற இறைவனை மேம் படுத்தலும், நன்றி செலுத்தலுமாகும்.

எனவே,

நோன்புப் பெருநாள் என்பது மிகச் சிறந்த முறையில் நோன்பு பிடித்தவருக்காகும். அந்த நோன்பால் இறை நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டு இறை வழிகாட்டலைப் புரிந்து கொண்டவருக்காகும்.

நல்லுணவுகளும், புத்துடைகளும் அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

வேகமான, முனைப்புடனான நோன்பு செயற்பாட்டுக்காக ஒரு இளைப்பாறல் ஆகவும் இப் பெருநாள் ஆகிறது. அல்லாஹ் இத்தகைய உண்மையான பெருநாளைக் கொண்டாடுபவர்களில் ஒருவராக எம்மை ஆக்குவானாக.

வாழ்வில் பரகத்தையும், செழிப்பையும் எமக்கு தருவானாக.

Reply