உம்ராவின் அந்த ஆறு நாட்கள்..

 

இறையருளால் இறைவீட்டை – கஃபாவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. உம்ரா செய்யப் போய் அங்கே ஆறு நாட்களைக் கழித்தேன். நாங்கள் 85 பேர் 25 நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம்.

உடலும், உள்ளமும் இடம் கொடுக்குமளவுக்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் அருள் மிக்க பாக்கியம் கிடைத்தது.

வந்திருந்த கொஸோவா  சகோதரர் ஒருவருடன் கதைத்தேன். ஏற்கனவே டிட்டோவின் கொடும் பிடியில் அகப்பட்டிருந்த  பொஸ்னியாவைப் போன்றதொரு ஐரோப்பிய நாடு அது.

”அங்கு முஸ்லிம்கள் 85% வாழ்கிறார்கள். இஸ்லாத்தின் மீதான ஈடுபாடு மக்களிடம் அதிகரித்து வருகின்றது. அதனை நெறிப்படுத்தி ஒழுங்கு படுத்தும் நிறுவனங்களும் அங்கே வளர்ந்து வருகின்றன. குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் ஏதுவும் அங்கே இல்லை”

இது அச்சகோதரர் தந்த தகவல்கள். முஸ்லிம் நாடுகள் பற்றி எப்போதும் எதிர்மறைத் தகவல்களே கிடைக்கும். இவை வித்தியாசமான தகவல்கள். சந்தோஷமாக இருந்தது.

மக்காவில் கஃபாவின் சுற்றுப் புறங்களை சற்று சுற்றிப் பார்த்தோம். ஒரு குறுக்குத் தெருவின் உள்ளே நுழைந்தோம். அங்கே ஒரு சிறிய கடை. டீ குடிப்போம் என யோசித்தோம். இரவு நேரம். முன்னால் ஒரு காபட் விரிக்கப்பட்டிருந்தது. பாதை ஓரத்தில். டீ குடித்தோம். கடைச் சொந்தக்காரர் வந்தமர்ந்தார். அவரை விசாரித்தோம். நான் எமனை சேர்ந்தவன் என்றார். எமது சகோதரர் ஒருவர் :   உங்களது மூதாதையர்கள் பரம்பரையே நாம் என்றார். அப்போதவர் உண்மையாக  இருக்க முடியும். உங்களது தோற்றமும் எம்மைப் போன்றே இருக்கிறது என்றார்.

இவ்வாறு மக்கா பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் தங்கி வாழும் நகரம் என்பதை சற்று அக்கம் பக்கத்தில் பார்த்த போது விளங்கியது.

இது எனது உம்ராப் பயணத்தின் பரப்பு.

இனி உம்ராவின் போது – தவாப், சஃயியின் போது, கஃபாவின் உள்ளேயும் வெளியேயும் நின்று வணக்கங்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சிந்தனைகளை உங்களோடு பகிர முற்படுகிறேன்.

  1. ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் அடித்தளமாக அமைந்த நகரம் இது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இங்குதான் ஒரு வீட்டில் வாழ்ந்தார்கள். இந்த நகரத்தில்தான் தன் சிறு வயது முதல் 53 வயது வரை ஓடித் திரிந்தார்கள். பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பின்னர் தன் தூதை முன்வைத்துப் போராடினார்கள். அவர்களின் நெருங்கிய தோழர்களான அபூபக்கரும், உமரும் (ரழி) ஏனையோரும் இங்கே எங்கேயோ உள்ள வீடுகளில் வாழ்ந்தார்கள்.ஆரம்பப் பயிற்றுவித்தல் தளமாக அமைந்த தாருல் அர்கம்  வீடு சபா என்ற அந்தக் குன்றில் தான் இருந்தது. இப்படி எனது சிந்தனை ஓடியது.

    இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வுகளின் தடயங்கள் அங்கிருக்கின்றனவா? அவை பாதுகாக்கப்பட்டனவா? அவ்வாறிருப்பதாகப் தெரியவில்லை.

  2. இலட்சக்கணக்கான மக்கள் கூட்டம் முன்னேயும், பின்னேயும் எல்லாப் பக்கங்களிலும் அலை மோதுகிறது. கஃபாவிலிருந்து ஒரு கிலோமீற்றர் வரை சுற்றிப் பரந்து நின்று தொழுகிறது.நாம் ஒழுங்குபடுத்தல் சிந்தனையற்றதொரு சமூகமா? என்னிடம் அடுத்து எழுந்த சிந்தனை இது.

    கடுமையான சனநெருக்கடி தவாப், சஃயி, தராவீஹ், கியாமுல்லைல் போன்ற எல்லா நிலைகளிலும். எனவே ஓதல்கள், துஆக்களை மிகச்சரியாகச் செய்ய முடியாமை.

    தன்னை பாதுகாத்துக் கொள்ளல், தன் இடத்தை பாதுகாத்துக் கொள்ளல், பொருட்களைப் பாதுகாத்தல், தன்னோடு வந்தவர்கள் அல்லது குடும்பத்தினரை ஒட்டி இருத்தல் இவற்றில் ஈடுபாடு காட்டவேண்டிய நிலை. இந் நிலையில் மன ஒருமைப்பாட்டுடன் வணக்கங்களைக் கொண்டு போக முடியாத நிலை.

    வணக்க வழிபாடுகளின் பொருளையும், கருத்தையும் விளங்கி அவற்றை அடைவதற்கேற்ப வணக்கங்களை எம்மால் ஒழுங்கு படுத்த முடியாதா?!

    ஹஜ், உம்ரா என்பவை எவ்வளவு உயர்ந்த வணக்கங்கள்.

    கஃபா, சபா, மர்வா, மினா, அரபா என்பவை எல்லாம் எவ்வளவு புனித இடங்கள்.

    எவ்வளவு தூரம் அவ்விடங்களில் நின்று, நிதானித்து,புரிந்து வணக்கங்களில் ஈடுபட வேண்டும்.

    இந்நிலையில் சர்வதேச முஸ்லிம் உம்மாவின் சந்திப்பாக அமையும் இந்த வணக்கங்களை பயன்தரக் கூடிய வகையில் ஒழுங்குபடுத்த முடியாது போய்விடுமா?

  3. என்னைச் சுற்றிலும் பார்க்கிறேன். மக்களில் பலர் கஃபாக் கட்டுக்கள் மீது ஏறி நின்று அதனைக் கட்டிப் பிடித்து நிற்கின்றார்கள். சிலர் கஃபாவின் சுவர்களைத் தடவுகிறார்கள். பலர் மகாமு இப்றாஹீம் – இப்றாஹீம் (அலை) அவர்களது பாதங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியைத் தடவுகிறார்கள். இவை எதுவும் மார்க்கத்தில் அங்கீகரிக்கப் படாதவை. ஆனாலும் வெளித் தோற்றங்கள் மீது மக்களுக்கு அப்படியொரு பற்று. தவாப், சஃயி என்பவற்றின் அர்த்தங்களை விளங்கி அந்தப் பின்னணியில் தமது வணக்கங்களை மேற்கொள்ளும் நிலை இன்னும் அரிதாகவே உள்ளது.ஹஜ், உம்ராவின் வணக்க வழிபாட்டு அடையாளங்கள் தரும் பொருளைப் புரிந்து அதனை மனதிற் கொண்டு வணக்கங்களை மேற்கொள்ளும் நிலை சமூகத்தில் வேரூன்ற வேண்டும். அப்போதுதான் வணக்கங்கள் உண்மையான பயன்களைக் கொடுக்கும்.
  4. என்னைச் சுற்றி கஃபாவினுள்ளே பல ஆயிரக்கணக்கான மக்கள் குர்ஆனை ஓதுகிறார்கள். நானும் ஓதுகிறேன். ஸூரா அன்கபூத்தின் ஒரு வசனம் என்னை நிறுத்துகிறது. பல முறை அவ்வசனத்தை ஓதியிருக்கின்றேன். எனினும் அது இம்முறை ஒரு புதிய வசனமாக எனக்குத் தோன்றுகிறது. இது அந்த வசனம்.அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, அவனை சந்திப்பதையும் நிராகரிப்பவர்கள் அவர்கள் எனது கருணையில் நம்பிக்கை இழந்தார்கள். (ஸூரா அன்கபூத் 29 : 23)

    இறை நிராகரிப்பிற்கு இறை கருணை பற்றி நம்பிக்கை இழத்தல் ஒரு காரணம் என இவ்வசனம் சொல்வதாகப் புரிந்து கொண்டேன். இது ஒரு ஆழ்ந்த கருத்து. அற்புதமானதொரு விளக்கம்.

    பௌதீக உலகின் சில வித்தியாசமான நிகழ்வுகள், சமூக வாழ்வின் அநீதிகள். அநியாயங்கள் இறைவன் இருப்பதை மறுக்கக் காரணமாகின்றன. ஏனெனில் இறைவனை மனிதன் இயல்பிலேயே கருணையாளனாகப் பார்க்கிறான். அதற்கு மாற்றமாக உலகைப் பார்க்கும் போது இறைவனை மறுக்கும் நிலை அவனிடம் தோன்றுகிறது.

    இவ்வாறு ஆழ்ந்து பார்ப்பதில் சில நேரங்கள் கழிந்தன.

  5. கஃபாவில் ஒரு வாசிகசாலை இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை. ஒரு முறை நேரத்தோடு கஃபாவின் உள்ளே நுழையும் போது ” பைதுல் ஹராம் வாசிகசாலை” என்ற பெயர்ப் பலகையைக் கண்டேன். அங்கே நுழைந்த போது, ஒரு சாதாரண, அழகிய வாசிகசாலையைக் கண்டோம். பல்வேறு நூற்களை அங்கே கண்டோம்.”ஆய்வுகளுக்கான அபிவிருத்தி மையம்” என்ற நிறுவனம் பல சிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகிறது. அதன் மூன்று ஆழ்ந்த ஆய்வு நூல்களைக் கண்டேன் “சட்டத்தின் வரலாறு”  என்பது அவற்றில் ஒரு நூல். இஸ்லாமிய சட்டத்தின் பின்னணியில்  உள்ள வரலாற்று இயக்கத்தை அந்நூல்  கவனமாக ஆய்கிறது. வெறும் சட்டத்தை மட்டுமல்லாது அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் ஆராயும் போதுதான் சரியாக சட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்ற கருத்தை அந்நூல் ஆழமாக நிறுவுகிறது எனத் தெரிந்தது. நூலை முழுமையாக வாசிக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எனினும் நூல் சொல்ல வரும் சிந்தனையைப் புரிந்து கொண்டேன்.
  6. கஃபாவைச் சூழ உள்ள பகுதிகள் கட்டாந்தரையாகவும். Tiles பிடிக்கப்பட்ட தரையாகவும் இருப்பது கண்டபோது புற்களும். சிறிய மரங்களும் நடப்பட்ட ஒரு சோலையாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் எனத் தோன்றியது. சவுதியின் சில பகுதிகள் இவ்வாறு சோலையாக மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாறு பலவகைச் சிந்தனைகளோடும், வணக்கங்களோடும், பிரார்த்தனைகளோடும் அந்த ஆறு நாட்களும் கழிந்தன.

இங்கு முன்வைக்கப் பட்ட சில கருத்துக்கள் முழு முஸ்லிம் உம்மாவையும் நோக்கியதாகும். சவுதி அரசை மட்டும் குறிப்பது அல்ல. ஏனெனில்அவற்றில் பல ஒவ்வொரு நாட்டு முஸ்லிக்களும் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

என்னதான் குறைபாடுகள் இருந்தாலும் ஓருண்மையை மறுக்க முடியவில்லை. உம்ராவும், ஹஜ்ஜும் முஸ்லிம் சமூகத்தின் பலத்தையும், ஒற்றுமையையும் எடுத்துக் காட்டும் சாதனங்கள். அந்த மாபெரும் மக்கள் கூட்டம் கண்டு மனம் நெகிழாத எந்த மனிதனும் இருக்க முடியாது.

இறுதியில் மிகுந்த மனப்பாரத்தோடும், கவலையோடும் அப் புனித பூமியை விட்டுப் பிரிந்து வந்தோம்.

அல்லாஹ் அந்த உன்னத முஸ்லிம் சமூகம் தோன்ற அருள் புரிவானாக.

Reply