ரமளான் ஒரு போராட்ட மாதம்

நோன்பு காலம் வெற்றியின் மாதம். 17ம் நாள் பத்ர் யுத்தம் வெற்றி முதல் 1973ம் ஆண்டு ரமளான் (ஒக்டோபர்) இஸ்ரேலுக்கு எதிரான வெற்றிவரை வரலாற்றில் பல வெற்றிகள் அம்மாதத்தில் நிகழ்ந்துள்ளன. இப்போது இஸ்லாமிய உலகில் தேசிய சர்வதேச அடக்கு முறைகளுக்கெதிரான போராட்டமொன்று செல்கிறது. இது வரலாற்றில் இதுவரை கண்ட போராட்டங்களில் மிகக் கடுமையானது; மிகச்சிக்கலானது. எனவே இந்தப் போராட்ட வெற்றி இலகுவில் சாதிக்க முடியாதது. சற்று நீண்ட காலத்தை அது எடுக்கும்.

சிறுபான்மையினரான எமது வெற்றி என்ன? இராணுவ வெற்றி என்பது எமது அகராதியில் இல்லாதது. சிந்தனை ரீதியான வெற்றியே எமது வெற்றியாகும். தேசிய நீரோட்டத்தில் கலந்து ஓடும் சக்தியாக நாம் மாற வேண்டும். ஆனால் நாம் கரைந்து போய் விடக் கூடாது. இஸ்லாமியப் பிரதியீடுகளை பிரச்சினைகளுக்கு முன்வைத்து அவற்றில் வெற்றிபெற வேண்டும். தூய்மையும், வளமும், அறிவு மேம்பாடும் நிறைந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை உன்னத வாழ்வுக்கான பிரதியீடாக உருவாக்கிக் காட்ட வேண்டும். இனம், மதம் பாராது மனிதனின் சுபீட்சத்திற்காக உழைக்கும் ஆளுமைகள் பலவற்றை நாம் ஆக்கிக் காட்ட வேண்டும். அவை தேசிய ஆளுமைகளாக மிளிர்ந்து அங்கீகாரம் பெற்றவையாக ஆகவேண்டும்.

இப்படியான எதிர்கால வெற்றிகளை நோக்கியே நாம் அடியெடுத்து நடந்து செல்ல வேண்டும். இந்த வெற்றிகளை சாதிப்பது ஒரு புறமிருக்க, நாம் எங்கே பயணிக்கிறோம் என்ற அறிவும், பிரக்ஞையும் கொண்டவர்களாக இருக்கிறோமா என்பது கூட கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இந்த ரமளானில் இவ்வாறானதொரு கருத்துத் தெளிவுக்கு வருவதிலாவது நாம் வெற்றி பெறுவோமாக. ஏனெனில் கருத்துத் தெளிவே திட்டமிடலின் அடிப்படை மாற்றத்திற்கான முதலடி.

இவற்றை சாதிக்க இரண்டு அடிப்படைகள் முக்கியமானது.

  1. பிக்ஹ் அல் மகாஸித் – சட்ட உயர் இலக்குகள் அறிவு
  2. சிறுபான்மை சட்ட ஒழுங்கு.

இவ்விரு பகுதிகளிலும் நிபுணத்துவம் மிக்க ஒரு குழுவினர் உருவாக்கப் படும் போதுதான் வெற்றிப் பாதையில் அடியெடுத்துச் செல்லல் சாத்தியமாகும். இது பற்றி சிந்திக்கவும், கலந்துரையாடவும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளும் மாதமாக இம் மாதத்தை ஆக்கிக் கொள்வோமாக. எஞ்சி இருக்கும் நாட்களை இதற்காக பயன் படுத்திக் கொள்ள முயல்வோம்.

நோன்பு மாதம் வணக்கங்களின் மாதம் என்பது போன்றே போராட்டங்களின் மாதமாகவும் அது இருந்துள்ளது என வரலாறு பல முறை எங்களுக்குச் சொல்லியுள்ளது. எமது போராட்டம் இந்த சிந்தனைப் போராட்டமே.

இது பற்றி நாம் சிந்திப்போமா?

Reply