இறை பயமும் இறைப் படைப்பினங்களை ஆய்வதுவும்

 

“நீர் அவதானிக்கவில்லையா:
அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்குகிறான். அதன் மூலம் நாம் பல்வேறு நிறங்கள் கொண்ட பழங்களை வெளிக் கொணர்கிறோம். மலைகளிலும் வெள்ளை, சிவப்பு என்றவாறு பல நிறங்கள் கொண்ட கடும் கருப்பு நிறமும் கொண்ட மண் படைகள் காணப்படுகின்றன. மனிதர்கள், கால் நடைகள், ஆடு, மாடு, ஒட்டகைகள் அவ்வாறே பல்வேறு நிறங்கள் கொண்டு காணப்படுகின்றன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனைப் பயப்படுபவர்கள் அறிஞர்களே. நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்த சக்தி படைத்தவனாகவும் மிகுந்த மன்னிப்பாளனாகவும் உள்ளான்.”
(ஸூரா பாதிர் 35: 27,28)

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இந்த வசனத்தை விளக்கும்போது “அறிஞர்கள்” – “உலமா” என்ற இடத்தில் “விஞ்ஞானிகள்” எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும் எனக் கூறினேன். அதனைக் கேட்ட சில சகோதரர்கள் அது பற்றி சில கேள்விகள் எழுப்பினர். அதனை விளக்கும் வகையில் இதனை எழுதுகிறேன்.

அல் குர்ஆன் அல்லாஹ், மறுமை நாள் என்ற உண்மைகளை விளக்கும் போதெல்லாம் பிரபஞ்சப் பொருட்களைக் காட்டி விளக்குவது அல் குர்ஆனில் மிகச் சாதாரணமாகக் காணப்படும் உண்மை. மேலே குறிப்பிட்ட இரு வசனங்களில் இதனை மிகத் தெளிவாகவே அவதானிக்க முடிகிறது. மழை பொழிதல், பல்வேறு நிறங்கள் கொண்ட பழங்கள், மலைகளில் மண் படை படையாக பல்வேறு நிறங்களில் காணப்படல், மனிதர்கள், கால் நடைககள், ஆடு, மாடு, ஒட்டகைகளில் அவதானிக்கப்படும் நிறவேறுபாடுகள் என்பவை இங்கே குறிக்கப்படுகின்றன. இவை தாவரவியல், புவியியல், புவிச்சரிதவியல், உயிரியல் போன்ற கலைகள் சார்ந்த விடயங்களாகும். இவை அரபு மொழியுடனோ, இலக்கணத்துடனோ, இஸ்லாமிய சட்டத்துடனோ தொடர்புபட்டதல்ல இவ்வசனம் என்பது மிக மிகத் தெளிவு. அந்தக் கருத்துத் தொடர்ச்சியிலேயே அறிஞர்கள் என்ற சொல் இங்கு கையாளப்படுகிறது. எனவே அந்தக் கலைகள் சார் அறிஞர்கள் என்று சொல்வதுதான் இங்கு மிகப் பொருத்தம். அப்படியின்றி ஷரீஆ சார் அறிஞர்களைத்தான் இந்தச் சொல் குறிக்கிறது எனக் கொள்ளல் அல் குர்ஆனின் இவ்வசன ஓட்டத்தை உடைத்து நோக்குவதாக அமையும்.

இந்த இடத்தில் மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான வசனங்களில் அல்லாஹ், மறுமை நாள் பற்றிச் சொல்லும் இடங்களிலெல்லாம் இப்போக்கை அல் குர்ஆனில் அவதானிக்க முடியும். ஸூரா நபஉ முதல் ஸூரா தாரிக் வரை தொடராக குர்ஆன் பிரபஞ்சப் பொருட்களை அவதானிக்குமாறு, ஆராயுமாறு கூறுவதை மிகவும் தெளிவாகவே காண முடியும்.

உதாரணமாக ஸூரா காப் (سورة ق) இக்கருத்தை எவ்வாறு தெளிவாகக் கூறுகிறது என்பதை அவதானிப்போம்:

“அவர்கள் தமக்கு மேலுள்ள வானத்தை அவதானிக்கவில்லையா? அதனை எவ்வாறு நாம் நிர்மாணித்துள்ளோம்?
அழகுபடுத்தியுள்ளோம்.
அங்கு எத்தகைய ஓட்டைகளும் காணப்படவில்லையே!
பூமியை நாம் விரித்தமைத்துள்ளோம்.
அங்கு ஆழப் பதிந்த மலைகளை அமைத்துள்ளோம்.
அழகிய தோற்றமுடைய அனைத்துவகைத் தாவரங்களையும் முளைக்கச் செய்துள்ளோம்.
இவை அல்லாஹ்விடம் திரும்பும் ஒவ்வொரு அடியானின் கண்களையும் திறந்து விடக் கூடியவை. அவை ஞாபகமூட்டக் கூடியவை.”
(ஸூரா காப் 50:6,7,8)

அல்லாஹ்விடம் திரும்பும் ஒவ்வொரு அடியானும் சுற்றியுள்ள இறை படைப்பினங்களை நோக்க வேண்டும் என்பது இவ்வசனங்களிலிருந்து நாம் நேரடியாக விளங்கும் கருத்து. இறை படைப்பினங்களை ஆராயும் கலைகள் விஞ்ஞானக் கலைகள் என்பதில் என்ன சந்தேகமுள்ளது!

விஞ்ஞான அறிவு கூடக் கூட இறை பயமும் அதிகரிக்க வேண்டும் என்பதை எவ்வளவு தெளிவாக இவ்வசனங்கள் காட்டுகின்றன. ஸூரா ஆல இம்ரானின் கீழ்வரும் வசனங்களையும் அவதானிப்போம்:

“வானங்கள், பூமியின் படைப்பிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுள்ளோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் நின்று கொண்டும், இருந்து கொண்டும், படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை நினைவு கூருவார்கள். வானங்கள், பூமியின் படைப்பு பற்றி சிந்திப்பார்கள்.
எங்கள் இரட்சகனே இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகவும் தூய்மையானவன். எம்மை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக.
(ஸூரா ஆல இம்ரான் 3:190, 191)

இந்த வசனங்கள் மிகத் தெளிவானவை.

இந்த வசனங்களின் பின்னணியில்தான் அன்றைய இஸ்லாமிய உலகில் ஒரு பெரும் விஞ்ஞான யுகமே தோன்றியது. அலி இஸ்ஸத் பிகோபிச் என்ற ஐரோப்பியாவின் மிகப் பெரும் இஸ்லாமிய சிந்தனையாளரின் கருத்துப் படி இஸ்லாமிய உலகம் 5 நூற்றாண்டுகள் உலகை அறிவால் மட்டுமே ஆண்டது. இப்னு அந்நபீஸ், அப்பாஸ் இப்னு பிர்னாஸ், அல் ஜஹ்ராவி, ஹைதமி, குவாரஜ்மி போன்ற நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் அப்போது தோன்றினர்.

இமாம் கஸ்ஸாலி இஹ்யா உலூமித்தீனில் இந்தக் கருத்தை –இறை படைப்பினங்களை ஆராய்வதன் ஊடே –இறைவனை அறிதல்- என்ற கருத்தை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தமிழில் இறை சிந்தனை என்ற நூலில் இக்கருத்தைப் பார்க்க முடியும்.

அக்கால இஸ்லாமிய உலகில் விஞ்ஞானிகளும் மார்க்க அறிஞர்களும் மோதிக் கொள்ளவில்லை. உடன்பட்டே சென்றார்கள். விஞ்ஞானத் துறை சார்ந்த பலர் இஸ்லாமிய துறை சார்ந்தோராகவும் இருந்தனர். இப்னு அந்நபீஸ், இப்னு ருஷ்த் போன்றோர் இதற்கு உதாரணமாவர். ஆனால் நவீன காலப் பிரிவில் விஞ்ஞானிகளும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் மோதிக் கொண்டமையால் மார்க்கமும் விஞ்ஞானமும் எதிரெதிரானது என்று கருத்துப் பரவிப் போய் விஞ்ஞானிகள் மார்க்கத்தைவிட்டுத் தூரமாயினர்; நாஸ்திகர்களாயினர். விஞ்ஞானம் மதச் சார்பின்மையின் அடிப்படையில் கற்றுக் கொடுக்கப்படலாயிற்று. எனினும் உயர்ந்த விஞ்ஞானிகள் பலர் இறை நம்பிக்கை கொண்டவாகளாகவே இருந்தனர். சேர் ஜேம்ஸ் ஜீன்ஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் உதராணமாவர். இவர்களுக்கு உண்மையான இஸ்லாமியத் தூது கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.

இதற்கு இன்னொரு நல்ல உதாரணம் அமெரிக்க விஞ்ஞானி குர்ஸி மொரிசன் ஆவார். “விஞ்ஞானம் இறை நம்பிக்கைக்கு அழைக்கிறது” என்ற ஒரு நூலையே அவர் எழுதினார்.

இப்பின்னணியில் நவீன உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகள் எல்லோரும் இறைபயம் கொண்டவர்கள்; இந்த வசனம் அவர்களைத்தான் குறிக்கிறது என நான் கூறவரவில்லை. ஆனால் உண்மையான விஞ்ஞான அறிவு இறைவனை அறியவும் இறை பயத்தை உருவாக்கவும் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்றுதான் சொல்ல வருகிறேன். இது அல் குர்ஆனின் அடிப்படைக் கருத்து.

இன்னொரு கருத்தையும் இங்கு விளக்குதல் முக்கியமானது. ஷரீஅத் துறை அறிஞர்களை இதன் மூலம் இழிவு படுத்திவிட்டேன் என சிலர் கருதிக் கொண்டார்கள். நான் இங்கே விஞ்ஞான அறிவுக்கும் அல் குர்ஆனுக்கும் என்ன தொடர்புள்ளது என்று குறிக்க வந்தேனே தவிர ஷரீஆ துறை அறிஞர்கள் பற்றி விளக்க வரவில்லை. ஷரீஆ துறை உலமாக்கள் அடிப்படையில் இறைபயம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர்கள் அல் குர்ஆனோடும் ஸுன்னாவோடும் தொடர்புபடுகிறார்கள். அவ்வாறே விஞ்ஞானத் துறை சார்ந்தோரும் ஷரீஅத் அறிவைப் பெறும்போதுதான் இறை கட்டளைகளை விளங்கிக் கொள்கிறார்கள். அப்போது அவர்கள் உண்மையான இறை அடியார்களாக மாறுகிறார்கள். அத்தோடு இங்கே இன்னொரு கருத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஷரீஆ துறை அறிஞர்கள் விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொள்ளும்போதுதான் இறைபயம் கொண்டவர்களாக மாறுவது சாத்தியமாகிறது. இதனை அல் குர்ஆனைப் படிக்கும் அவர்களுக்கு அல் குர்ஆனே வலியுறுத்திச் சொல்கிறது.

இறுதியில் இமாம் இப்னு கதீர் இவ்வசனத்திற்கு விளக்கம் சொல்லும்போது குறிப்பிடும் கருத்தைக் கீழே தருகிறோம்:

அறிஞர்கள் மூன்று வகை:

  • அல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறிந்தவர்.
  • அல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறியாதவர்.
  • அல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ் பற்றி அறியாதவர்.

அல்லாஹ்வை அறிந்தவர், அவன் கட்டளைகளை அறிந்தவர்:
இவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறிவார்.

அல்லாஹ்வை அறிந்தவர், இறை கட்டளைகளை அறியாதவர்:
இவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். ஆனால் அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறியாதவராக இருப்பார்.

அல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ்வை அறியாதவர்:
இவர் அல்லாஹ்வின் வரையறைகளையும், கட்டளைகளையும் அறிந்தவர். ஆனால் அவர் அல்லாஹ்வைப் பயந்து வாழாதவராக இருப்பார்.
(உம்தத் அல்தப்ஸீர் – தப்ஸீர் இப்னு கதீரின் சுருக்க நூல்: வா:03 பக்:109)

Reply