காலநிதி  ஹஸன் அல் துராபி என்ற சிந்தனையாளர் – ஓர் அறிமுகம்

 

சென்ற 5ம் திகதி சூடானை சேர்ந்த இஸ்லாமிய சிந்தனையாளர் ஹஸன் துராபி காலமானார். அப்போது அவருக்கு வயது 84.

ஹஸன் துராபி 1932 பெப்ரவரி 01ம் திகதி பிறந்தார். அவரது தந்தை ஒரு நீதிபதியாகவும் ஒரு தரீக்காவின் ஷெய்க் ஆகவும் இருந்தார்.

சிறு வயதிலேயே  அல்குர்ஆனை மனனமிட்ட அவர் பல கிராஅத்களையும் பயின்றிருந்தார். சட்டத்துறையில் முதலில் கல்வியை சூடானில் பெற்ற அவர்  ஒக்ஸ்போட்  பல்கலைக் கழகத்தில் அத்துறையில் MA முடித்தார். பின் பிரான்ஸின் ஸோபோர்ன்  பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்ட படிப்பையும் முடித்தார்.

அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட அவர் ஆங்கிலம், பிரான்ஸ், ஜெர்மனி மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

மிகவும் ஆரம்ப காலத்தில் அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தில் சேர்ந்து பாடுபட்ட அவர் 1969இல் அதிலிருந்து பிரிந்து மிகப் பாரியதொரு அரசியற் போராட்டத்தைக் கொண்டு சென்றார்.

கீழ் வருவன அவரது சில முக்கிய நூல்களாகும்.

تجديد الدين
மார்கத்தை புணரமைத்தல்

منهجية التشريع
சட்டவாக்க முறைமை

المرأة بين تقاليد المجتمع وتعاليم الدين
மார்க்கத்தின் போதனைகளுக்கும் சமூகத்தின் சம்பிரதாயங்களுக்குமிடையே பெண்

ضرورة النقد الذاتي للحركة الإسلامية
இஸ்லாமிய இயக்கத்திற்கான சுயவிமர்சனத்தின் அவசியம்

الشعائر الدينية والصلاة
மார்க்க வணக்கங்களும், தொழுகையும்

الإيمان وأثره في حياة الإنسان
ஈமானும், மனித வாழ்வில் அதன் தாக்கமும்

في الفقه السياسي
அரசியல் சட்ட ஒழுங்குபற்றி

السياسة والحكم
ஆட்சியும், அதிகாரமும்

التفيسير التوحيدي
இது அவரது தப்ஸீர் நூல். ஸூரா அன்கபூத் வரை எழுதி முடித்துள்ளார் என தெரிகிறது.

மிகவும் அண்மையிலேயே ஹஸன் துராபியின் நூல்கள் எனக்குக் கிடைத்தன. இப்போதுதான் அவரைப் பற்றி வாசிக்க ஆரம்பித்துள்ளேன். எனவே அவரை ஆழ்ந்து ஆராய்ந்து சில நூல்களையும் எழுதிய அறிஞர் முக்தார் ஷன்கீதி ஊடாக அவர் பற்றியதொரு அறிமுகத்தை முன்வைப்பது பொருத்தம் எனக் கருதுகிறேன். நான் வாசித்த அளவிலும் சில கருத்துக்களையும் முன் வைக்கின்றேன்.

ஹஸன் துராபி தலைசிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் முன்வைத்த  சிந்தனைகளில் தவறுகள் இருக்கலாம். மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களும் இருக்கலாம். நாம் அவரது சிந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால் அவர் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய மிகப்பாரிய சிந்தனையாளர் என்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய சிந்தனையில் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியவர் அவர். அதற்காக அவருக்கு காபிர், வழிகேட்டுப் பட்டத்தைக் கொடுத்து அவரை ஒதுக்குவது பொருத்தமல்ல.

மிகப் பாரிய சிந்தனைச் சவாலுக்கு இஸ்லாமிய சிந்தனை உட்பட்டிருக்கும் காலமிது. இஸ்லாம் ஓர் ஆட்சியாகவும் , தனித்துவமிக்க சமூகமாகவும் வாழ மிகக் கடும் சாவல்களை அது எதிர்கொள்கிறது. முழு உலகத்திற்கும் எதிராக ஆயுதம் தூக்குவதால் எமது சவால்களை நாம் வென்றுவிட முடியாது. சிந்தனையே சிந்தனையை வெல்லும். சிந்தனை மாற்றீடு மூலமே நாம் உலகில் வாழ முடியும்.

இந் நிலையில் முஹம்மத் அப்துஹூவிட மிருந்து துவங்கிய இந்த சிந்தனைப் போராட்டத்தின் அறிஞர்களை ஆழ்ந்து படிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமியத் தூதை  எத்திவைப்பதில் பெரும் பங்கு வகிக்கக் கூடிய சிறுபான்மை முஸ்லிம்களும் இந்த நவீன சிந்தனைச் பராம்பரியத்தைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

இப்பின்னணியில்  துராபி எவ்வளவு வித்தியாசமான சிந்தனைகளை முன்வைத்திருந்தாலும் அவற்றை நாம் படிக்க வேண்டும், ஆராய வேண்டும். குப்ர், வழிகேடு என அதனை ஒதுக்கக் கூடாது.

ஹஸன் துராபி மேற்கு சிந்தனையையும், கிழக்கு சிந்தனையையும் இணைத்துக் கற்றவர். 20ம் நூற்றாண்டில் அவரின் தரத்திற்கு இவ்விரு சிந்தனைகளை ஆழ்ந்து படித்த இன்னொருவரைக் காண்பதரிது என முக்தார் ஷன் கீதி  அவரது சிந்தனைத் தரத்தை மதிப்பிடுகிறார்.

ஹஸன் துராபிக்கு இருபக்கமுள்ளது,

ஒரு புறத்தால் அவர் காலத்தையும் கடந்து நிற்கும்  புத்தாக்க சிந்தனையாளர். இரண்டாவது மிக சாணக்கியமிக்க அரசியற் போராளி.

மார்க்கத்தை மீள் ஒழுங்குபடுத்தல் (தஜ்தீதுத் தீன்) பகுதியிலும், அரசியல் ஆய்வுப் பகுதியிலும் அவரது பணி மிக ஆழமானது, மிகப் பாரியது.தொடர்ந்து நிலைத்து நின்று ஆய்வுக் குட்படுத்தக் கூடியது. எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கு அவர் விட்டு செல்லும் மிகப் பெரும் சொத்து அதுவே.

தௌஹீத் – நடைமுறைப் பிரயோகம் – என்ற கருத்திலிருந்து அவரது சிந்தனை புறப்படுகிறது. தௌஹீதை – ஏகத்துவத்தை அவர் ஒரு தர்க்கப் பொருளாக பார்க்கவில்லை. அது மனிதனின் நடைமுறை முயற்சி, உழைப்பு என அவர் கண்டார். அது தொடர்ந்தேர்ச்சியான இறைவனை நோக்கிய புறப்பாடு என அவர் விளக்கினார். இஸ்லாத்தின் சம்பூரணத் தன்மையையே அவர் இங்கே இவ்வாறு முன்வைக்கிறார்.

தொழுகை பற்றி விளக்கும் போதும் அதன் நடைமுறைப் பிரயோகத்தையே விளக்கினார். மக்கள் ஒன்று கூடல், சமத்துவம், இமாமை தெரிவு செய்வதில் ஷூறாவின் பிரயோகம் என்பவற்றை அங்கே விளக்கினார்.

துராபி சில அடிப்படையான நடைமுறை ரீதியான சிந்தனைகளை முன்வைத்தார். அவற்றை விரிவாக விளக்க இங்கு முடியவில்லை. வெறும் கருத்துக்களை மட்டும் கீழே தருகிறோம்.

மார்க்கத்தையும், மார்க்கத்தைக் கடைப் பிடித்தலையும் வேறுபடுத்தி நோக்கல்.

இலட்சிய நிலையும், நடைமுறை யதார்த்தத்தையும் வேறுபடுத்திப் பார்த்தல்.

சோதனைகள் புதிய புதிய வடிவத்தைப் பெறல்

வரலாற்று இயக்கத்தின்  மீதேறிப் பிரயாணித்தல்.

கொள்கைளும், கோட்பாடுகளும் நிகழ்ச்சி நிரலாகல்.

வஹியையும், வரலாற்றையும் கலந்து குழப்பல் வரலாற்று இயக்கத்தோடு தொடர்ந்தோட முடியாது தடுக்கும்.

இக் கருத்துப் பின்னணியில் அவர் கூறினார்:

முன்னைய நல்லடியார்களது வரலாறு ஷரீஅத் அடிப்படைகளின் தொடராக இருந்தாலும், அந்த அடிப்படைகளையே மறைக்கும் அளவுக்கு அளவு மீறி அது பெருமைப் படுத்தப் படும் உணர்ச்சி பூர்வ நிலை தோன்றக் கூடாது. இதனைப் பிரயோகிக்கும் வகையில் துராபி சொன்ன சில கருத்துக்கள் கீழ்வருமாறு.

இறுதியில் ஈரானியர்கள் உமையாக்கள் தவிர இன்னும் பாரிய எதிரிகள் தமக்கு உள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வர்.

முஃதஸிலாக்கள், அஷ்அரீகள், முர்ஜிஆக்கள்,சூபிகள் என்பவர்களோடு போராடுவது தவிர இன்னும் பல சவால்கள் உள்ளன. என்பதை ஸலபீ ஸுன்னீப் பிரிவினர் உணர்ந்து கொள்வர்.

இஸ்லாமிய வரலாற்றின் சமன்பாடற்ற நிலையைக்கு அடிப்படைக் காரணம் கோட்பாட்டுக்கும், பிரயோகம், வழிமுறை என்பவற்றிக்குமிடையே சமன்பாடற்ற நிலை தோன்றியதாகும். முஸ்லிம் சமூகம், அதன் கட்டமைப்பு என்ற ஷரீஆ பகுதியில் பாரிய குறைபாடுகள் விடப்பட்டன. தொடர்ந்து துராபி இஸ்லாமிய இயக்கத்தை விமர்சிக்கையில் கீழ்வருமாறு கூறினார்:

கோட்பாட்டாய்வு பற்றிய பகுதி, பிரயோக வழிமுறை ஆய்வைவிட நன்கு வளர்ந்திருந்தது. அசத்தியத்தை ஒழிப்பதில் காட்டும் வேகம் சத்தியத்தை நிலை நாட்டுவதில் காணப்படவில்லை.

பிரபஞ்சத்தையே மாற்றுவோம் எனக் கதையாடுவார்கள். ஆனால் தமக்கு மிக அருகாமையில் உள்ள சிறிய உலகு பற்றிய எந்த அறிவும் அவர்களுக்கு இருக்காது. உணர்ச்சி வேகம் இருக்கும்; அறிவு நுணுக்கம் இருக்காது.

எல்லா இடங்களிலும் யுத்தங்களை மூட்டிவிட்டு பின்னர் அவற்றிலேயே நஷ்டமடைவர்.

குறைந்த சாதன வசதிகளே இருக்கும், தயாரிப்பில் பலவீனமிருக்கும் எனினும் உலகை முழுக்க தமக்கு எதிராகத் தூண்டி விட்டிருப்பர்.

இவ்வாறு ஹஸன் துராபி பல்வேறு சிந்தனைகளையும், கருத்துக்களையும் முன்வைத்தவர்.

அவை ஆழ்ந்தவை, நவீன உலகோடு உறவாடப் பொருத்தமானவை

அவற்றை ஆழ்ந்து படித்தலும் சமூக மட்டங்களில் பரப்புவதும் மிகப் பாரிய பலனை கொடுக்கும்.

Reply