இரு பெரும் அறிஞர்களின் இழப்பு

சென்ற 4, 5ம் திகதிகளில் இரு பெரும் அறிஞர்கள் இறையடி சேர்ந்தனர். ஒருவர் அல்லாமா ஷெய்க் தாஹா ஜாபிர் அலவானி. அடுத்தவர் இஸ்லாமிய உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரும், அரசியல் போராளியுமான ஹஸன் துராபியுமாவார். இங்கே இருவர் பற்றியும் ஒரு சிறிய அறிமுகத்தை முன் வைக்கிறோம்.

ஷெய்க் தாஹா ஜாபிர் அலவானி:

1935ம் ஆண்டு இராக்கில் பல்லூஜா என்ற பகுதியில் பிறந்தார். அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் உஸுல் அல் பிக்ஹ் – இஸ்லாமிய சட்டமுறைமைகள் – என்ற துறையில் டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.

பின்னர் இராக்கில் கல்வி கற்பித்தல் துறையில் பங்கு கொண்டார். இராக்கியத் தலைவர் சதாம் ஹுசைனோடு மோத வேண்டிய நிலை பல முறை ஏற்பட்டமையால் நாட்டிலிருந்து 1969ம் ஆண்டு வெளியேறினார். பின்னர் சவுதி அரேபியாவில் இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்கள் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.

பின்னர் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் என்ற அமெரிக்காவில் உருவான ஸ்தாபனத்தை உருவாக்குவதில் இணைந்து கொண்டார். 1988 முதல் 1996 வரை அதன் தலைமைப் பதவியையும் ஏற்று நடாத்தினார். இஸ்லாமியக் கலைகள், சமூகவியற் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தையும் உருவாக்கி 10 வருடங்கள் அதன் தலைமையையும் ஏற்று நடாத்தினார். தாஹா ஜாபிர் அலவானி ராபிதா அல் ஆலம் அல் இஸ்லாமியின் ஸ்தாபக அங்கத்தவராவார். ஜித்தாவின் சர்வ இஸ்லாமிய சட்டமன்ற அங்கத்தவராகவும் அவர் இருந்தார். வட அமெரிக்காவின் இஸ்லாமிய சட்ட மன்றத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.

தனது இறுதி காலப் பிரிவுகளில் அல் குர்ஆன் ஆய்விலேயே ஆழ்ந்து ஈடுபட்டு வந்தார். அதன் விளைவாக அந்தப் பத்து நூல்களை வெளியிட்டார். மேலும் எட்டு நூல்கள் அச்சில் உள்ளன.

ஷெய்க் தாஹா ஜாபிர் அலவானியின் அறிவுப் பங்களிப்பு மிகப் பாரியது. 30க்கும் மேற்பட்ட பல ஆய்வு நூல்களை அவர் ஆக்கி வெளியிட்டார். பல்வேறு ஆய்வு சஞ்சிகைகளில் நிறைய ஆய்வுக் கட்டுரைகளை அவர் வெளியிட்டார். கீழே அவரது சில நூற்கள் தரப் படுகின்றன:

  1. المحصول فى أصول الفقه – என்ற இமாம் பக்ருத்தீன் ராஜியின் நூலை மீளாய்வு செய்து 6 வால்யூம்களில் வெளியிட்டார்.
  2. إصلاح الفكر الاسلامي – இஸ்லாமிய சிந்தனை சீரமைப்பு.
  3. الازمة الفكرية ومناهج التغيير – சிந்தனைச் சிக்கலும், மாற்றத்திற்கான வழிமுறைகளும்.
  4. أدب الاختلاف فى الإسلام – இஸ்லாத்தில் கருத்து வேறுபாட்டுக்கான ஒழுக்கங்கள்.
  5. أصول الفقه منهج بحث ومعرفة – சட்ட அடிப்படைகள் – ஓர் ஆய்வு முறைமை.
  6. لا إكراه في الدين: اشكالية الردة والمرتدين من صدر الإسلام الى اليوم – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது. இஸ்லாத்தின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை மதம் மாறல், மதம் மாறியோர் என்ற கருத்துச் சிக்கல்.
  7. إشكالية التعامل مع السنة النبوية – நபியின் ஸுன்னாவோடு உறவாடுவதன் கருத்துச் சிக்கல்.
  8. فقه الأقليات – சிறுபான்மை சட்ட ஒழுங்கு

தாஹா ஜாபிர் அலவானியின் சிந்தனைப் போக்கு

தாஹா ஜாபிர் அலவானியின் சிந்தனைப் போக்கு பற்றி இங்கே சில குறிப்புகளைத் தருவது பொருத்தமாக அமையும்.

  1. முஸ்லிம் அறிவுப் பாரம்பரியத்தை பின்பற்றல் என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் தவறானது எனக் கண்டார். அடிப்படை மூலாதாரங்களில் நின்று ஆராயும் போது அதனை உதவிக்கு மட்டும் எடுக்கலாம் என விளக்கினார். குறிப்பிட்ட காலப் பிரிவின் படிவுகள் இருப்பது ஒரு காரணம்: நவீன காலப் பிரிவின் முற்றிலும் வித்தியாசமான தன்மை இன்னொரு காரணம் என அதற்கான காரணத்தை விளக்கினார். ‘ரித்தத்’ ‘பெண்களின் சாட்சியம்’ என்ற இரு ஆய்வுகளும் இந்தப் பின்னணியிலிருந்து ஆக்கப்பட்டதாகும்.
  2. முஸ்லிம் சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல வேராக அமைவது சிந்தனைச் சிக்கலே என அவர் கண்டார். இக் கருத்தை விளக்கும் வகையில் நவீன காலப் பிரிவின் சிந்தனைச் சவாலுக்கு முன்னால் முஸ்லிம் சமூகம் எவ்வாறு ஆட்டம் கண்டது என்பதை அவர் விளக்கினார்.
  3. சமூகவியல் கலைகளின் வளர்ச்சியின்மையே முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை சிந்தனைச் சிக்கல் எனக் கண்ட அலவானி அந்த ஆய்வுகளுக்கு முதன்மையான இடம் கொடுத்தார். இஸ்லாமிய, சமூகவியல் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்கியமை இப் பின்னணியியைக் கொண்டதாகும்.
    نحو اعادة بناء علوم الأمة الاجتماعية والشرعية – சமூகக் கலைகள் – ஷரீஆத், சமூகவியல் கலைகளை மீள் கட்டியெழுப்பல் நோக்கி என்ற அவரும் அவரது மனைவி கலாநிதி முனாவும் இணைந்து வெளியிட்ட நூலும் இக் கருத்தையே விளக்குகிறது. معالم فى المنهج القرآني குர்ஆனின் ஆய்வு முறைமைக்கான சில மையக் கற்கள் என்ற அவரது இன்னொரு நூலும் இது சார்ந்ததாகும்.
  4. ஆய்வின் போது அல் குர்ஆனை மையப் படுத்தல், அடிப்படையாகக் கொள்ளல் என்ற கருத்தை வலியுறுத்தியமையும், இறுதி காலப் பிரிவுகளும் அக் காரியத்தில் மூழ்கியமையும்.
  5. ஸுன்னா என்ற மூலாதாரம் மிக ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டும். அங்கு காணப்படும் பல ரிவாயத்துகள் முஸ்லிம் சிந்தனைச் சிக்கலுக்கு வழி வகுக்கிறது எனக் கண்டு அதனைத் தொடர்ந்து வலியுறுத்தியமை.
    إشكالية التعامل مع السنة النبوية – நபியின் ஸுன்னாவோடு உறவாடுவதின் கருத்துச் சிக்கல் என்ற நீண்ட பெரிய ஆய்வு நூல் இப் பகுதி சார்ந்ததாகும்.

இவ்வாறு இஸ்லாமிய அறிவுக்குப் பாரிய பங்களிப்பு செய்த ஷெய்க் அவர்கள் கெஸ்ரோவிலிருந்து வொஷிங்டன் திரும்பும் வழியில் மரணித்தார். அல்லாஹ் அவர்களது குற்றங் குறைகளை மன்னித்து மறு உலகில் உயர்ந்த வாழ்வைக் கொடுப்பானாக.

இவ்விளக்கம் விரிந்து விட்டமையின் காரணமாக ஷெய்க் ஹஸன் துராபி அவர்களைப் பற்றி அடுத்த முறை நோக்குவோம்.

Reply