அரசியல் யாப்புத் திருத்தம் – சில ஆலோசனைகள்

 

அரசியல் யாப்புத் திருத்தம்  என்பது இந் நாட்களில் அதிகமாகப் பேசப் படும், கருத்துப் பரிமாறலுக்கு உட்படுத்தப்படும் விடயமாகும். இது சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைப்பதே இங்கு நோக்கமாகும். கீழ்வருமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

  1. நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பாதகத்தை மூன்று ஜனாதிபதிகளின் ஊடாக இலங்கை மக்கள் அனுபவித்துவிட்டார்கள். எனவே அம்முறையை நீக்கி பாராளுமன்ற அதிகாரம் மேம்பட்ட ஆட்சி முறையே சிறந்தது. மிகுந்த ஜனநாயகப் பொருள் கொண்டது.
  1. இன முரண்பாடுகளும் போராட்டங்களுமே மகாண சபை ஒழுங்கைக் கொண்டு வந்தது. ஆனால் அது பாரிய நிர்வாகச் செலவை, நடைமுறை நிர்வாக கடினங்களையும் கொண்டுள்ளது. இ்நத வகையில் மாகாணசபை என்பது பொதுமைப்படுத்தப் படாமல் வட, கிழக்கு போன்ற அவசியம் தேவைப்படும் பகுதிக்கு மட்டும் மட்டுப் படுத்தலே பொருத்தமானது.
  1. நாட்டின் சீர்கேடுகள், இன மோதல்கள் உருவாக அரசயில் தலைமைகளின் சீரின்மை முக்கிய காரணமாகும். எனவே அரசியல் தலைமைகள் தெரிவில் கீழ்வரும் அடிப்படைகள் சட்டமாக்கப்படல் பொருத்தமானது.
    1. குறிப்பிட்டதொரு அறிவுத் தரத்தை ஜனாதிபதி, பிரதமர் முதல் அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் ஷரத்தாக்கல்.
    2. ஒழுக்க, பண்பாட்டுக் கோவையொன்று அவர்கள் மீது பிரயோகிப்படல், தெரிவின் போதும் தொடர்ந்து அதிகாரத்தில் நிலைக்கவும் இது ஷரத்தாக கொள்ளப்படல்.
      இதில் குறிப்பாக இன உணர்வு கூர்மைப்படல், இனத் துவேஷத்தை வளர்த்தல் செயற்பாடுகள் ஒழுக்கத்திற்கு முரணானவையாகக் கொள்ளப்படல்.
    3. அனைத்து பாராளுமன்ற அங்கத்தவர்களதும் பதவிக் காலத்தை வரையறுத்தல். ஜனாதிபதிக்குப் போன்று 2 அல்லது 3 முறையேதான் பதவி வகிக்கலாம் எனக் கொள்ளப்படல். அதன் பின்னர் அவர் பதவி வகிப்பதை முற்றாக தடைசெய்தல் அல்லது 10 வருடங்களின் பின்னரே மீண்டும் தேர்தலில் நிற்கலாம் என்ற ஒழுங்கைக் குறைந்தது கொண்டு வர வேண்டும்.இந்த ஒழுங்கு பல வகையான அரசியல், சமூக சீர் கேடுகளைக் களைய உதவியாக இருப்பதோடு, பல புதிய அரசியற் தலைமைகளுக்கும் இடமளிக்கக் கூடியதாக அமையும்.
  1. ஏற்கனவே அரசியல் யாப்பில் காணப்படும் அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும், தத்துவங்ளும் மிகச் சிறந்தவையாக இருந்தாலும், நடைமுறையில் பிரயோகிக்கத்தக்க சட்ட அந்தஸ்தை அவை பெறாது ஒரு வகை நீர்த்துப் போன அமைப்பில்தான் காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானவற்றிற்கு அரசியல் யாப்பில் சட்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தல்.

கீழ் வருவனவற்றை  அவ்வாறு குறிப்பிடலாம்

  1. பொருளாதார சுதந்திரம், உரிமை என்ற வகையில்
    1. இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும்  இந் நாட்டு வளத்தின் பங்குதாரன் என்ற வகையில் போதுமான வாழ்க்கை வசதிகளை அவன் பெறாத போது அதனை முறையிடுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல். அதற்கான தீர்வை அரசு
      1. தொழில் பெற்றுக் கொடுத்தல்.
      2. கொடுப்பனவு வழங்கல்.
      3. குறிப்பிட்ட நபரின் வசதியுள்ள குடும்ப அங்கத்தவர்களைப் பொறுப்பாக்கல்.என்ற ஒழுங்குகளில் செய்யலாம்.
    1. வெளிநாட்டுக் கம்பனிகளின் முதலீட்டை, நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதை வரையரை செய்தலும், அவற்றின் வருமானத்தின் ஒரு கணிசமான பகுதியை நாட்டில் செலவிடும் ஒழுங்குக்குக் கொண்டு வரலும் . குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் தனி ஆதிக்கம் செலுத்த இடமளிக்காதிருத்தலும். இந்த வகையில் தற்போதைய முதலீடுகள் பற்றியதொரு முழுமையான மீள்பரிசீலனைக்கு வரல்.
    2. காணி உச்சவரம்புச் சட்டம் என்பது போல் தனிநபர், கம்பனி பொருளாதார வளப் பயன்பாட்டிற்கும், முதலீட்டு வியாபகத்திற்கும் ஓர் உச்ச வரம்பைக் கொண்டுவரல்.
  1. மக்களின் ஒழுக்கத்தையும், கலாச்சாரத் தரத்தையும் உயர்த்துதல் என்ற கோட்பாட்டிற்கு சட்ட அந்தஸ்தை வழங்கல்:
    1. பாடத்திட்ட கொள்கை ஒன்றை வகுத்தல் அதில் தொழில் நுட்பம் சார் கல்விக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகூடிய முக்கியத்துவத்தை குறைத்து இலக்கியம், மார்க்கம் சார் பாடங்களுக்கு கலை, விஞ்ஞானம் சார்ந்த எத்துறையாக இருந்தாலும் உயர்தரம் (A/L) வரை இடமளித்தல்.
    2. கல்வி ஒரு பொருளாதாரத் தேடலாக முழுமையாக மாறிச் செல்லும் நிலையைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பை யாப்பில் வழங்கல்.

நான் அரசியல் துறை சார்ந்தவனல்ல. என்றாலும் இந்த நாட்டுப் பிரஜை என்ற வகையில் அது பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இக் கருத்துக்களை முன் வைத்தேன். அரசியல் யாப்பு பற்றிய விரிந்த ஆய்வொன்றை இங்கே நான் முன்வைக்க முயலவில்லை.

Reply