சமூகத்தளத்தின் உழைப்பாளர்கள் – ஓர் உதாரணம்

 

சென்ற திங்கள் கிழமை 04.01.2016 அன்று என்னோடு நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த இன்னொரு மனிதரும் இறையடி சேர்ந்தார்.

நாம் அல்லாஹ்வுக்காகவே உள்ளோம். அவனிடமே மீள்கிறோம் -இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-

இவ்வுலகிள் எந்தப் பொருளுக்காகவும் மனிதன் இல்லை. எந்தப் பொருளுக்கும்; அவனை விலை பேசிவிடக் கூடாது. இறைவன் மனிதனை விஷேடமாகப் படைத்தான். அவனுக்குரியவனாகவே அவனை ஆக்கிக் கொண்டான். இக்கருத்துத் துலங்க இவ்வுலகில் வாழவேண்டும். அக்கருத்தோடு அவனிடம் மீண்டும் போய்ச் சேரவேண்டும்.

ஹம்ஸா ஹாஜியார் பேருவளையில் பிடவலையில் ஜாமியா நழீமியா வீதியில் வாழ்ந்தவர். 72 வருடங்கள் இவ்வுலகில் அவர் வாழ்ந்தார். சென்றமுறை சகோதரர் நிசாரைப் பற்றி நாம் எழுதியது போன்றே எந்தப் பட்டமும், பதவியுமின்றி இஸ்லாத்திற்காக உழைத்தவர்களில் ஒருவர் இவர்.

இவ்வாறு பெரிய பல்கலைக் கழகப் பட்டங்களோ, பாரிய அறிவுப் பங்களிப்பு செய்யும் பின்னணியோ அற்று, ஆனால் இஸ்லாத்திற்காக அர்பணித்து வாழ்ந்தவர் பலரை இலங்கை நெடுகிலும் காண முடியும்.

ஹம்ஸா ஹாஜியார் எழுதவில்லை, வகுப்புகள் நடாத்தவில்லை. ஆயினும் நல்ல அறிவு அடித்தளம் கொண்டவர் அவர். அவர் ஒரு நல்ல வாசகர். இஸ்லாமிய நூல்களை அவர் தேடித் தேடி வாசிப்பார். மௌதூதி, ஸையத் குதுப், கர்ளாவி, அபுல் ஹஸன் நத்வி, ஷெய்க் கஸ்ஸாலி போன்ற அறிஞர்களது எழுத்துக்களோடு அவருக்கு நல்ல பரிச்சயமிருந்தது. அவரது இறுதி காலம் வரையில் இந்த வாசிப்பை அவர் விடவில்லை. இந்த வகையில் அறிவுபூர்வமான கலந்துரையாடல்களிலும் அவர் கலந்துகொண்டார்;. அவரது வீட்டில் அவர் வகுப்புகளை ஏற்பாடு செய்வார். பலரும் அதில் கலந்து கொள்வார்கள். இப்படி ஒரு அறிவு ஆர்வம் கொண்டவராக இறுதிவரை அவர் வாழ்ந்தார்.

தனது இளமைப் பருவத்தில் ஜமாஅதே இஸ்லாமியோடு அவர் தொடர்புபட்டார். மிகுந்த பாரம்பரியப் போக்கும், ஸூபிப் பின்னணியும் கொண்ட ஒரு கிராமத்தில் ஜமாஅதே இஸ்லாமியில் சேர்ந்துழைப்பது ஒரு பெரும் சவால். இந் நிலையில் பெரும் எதிர்ப்புக்களை ஜமாஅதே இஸ்லாமி எதிர் கொண்டது. அப்போது துடிப்புமிக்க இளைஞசராக இருந்த ஹம்ஸா ஹாஜியாரும் தம்பங்குக்கு அந்த எதிர்ப்புக்களை தயக்கமின்றி எதிர்கொண்டார். நீண்ட காலம் இவ்வாறு இஸ்லாமியப் பாதையில் பாடுபட்டார்.

அடுத்;து ஹம்ஸா ஹாஜியார் நளீம் ஹாஜியாருடன் மிக நெருக்கமாக தொடர்பு வைத்திருந்தார். ஜாமியா நளீமியாவுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் பொறுப்பாக இருந்து நளீமியாவின் வேலைகளில் ஆழ்ந்து பாடுபட்டு உழைத்தார். இந்த வகையில் நளீமீய்யாவிலும் அவருக்கு ஒரு பங்கு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

தாஸீம் மௌலவி, மௌலவி இப்றாஹீம், மஸ்ஊத் ஆலிம் போன்ற பல ஆலிம்களோடும் அவருக்குத் தொடர்பிருந்தது. இது அவரது வாழ்வின் இன்னொரு பக்கம். இது அவருக்கு இஸ்லாமியப் பகுதியோடு ஆழ்ந்த ஈடுபாட்டைச் சம்பாதித்துக் கொடுத்தது.

இலங்கையின் களத்தில் வெளியே பிரபல்யமாகாமல் அடிமட்டத்தில் நின்று உழைத்தவர்கள் நிறையப் பேருள்ளனர். அவர்களுக்கு யாரும் விழாக்கள் வைப்பதில்லை. அவர்களை யாரும் புகழ்ந்து பாடுவதுமில்லை. அத்தகைய மனிதர்கள் இருவரைப் பற்றியே சென்ற வாரமும், இந்த வாரமும் எழுதினேன். இஸ்லாம் வாழ்வதற்கு இவர்களும் முதன்மைக் காரணிகளாக இருந்து வந்துள்ளனர்.

நளீமியாவின் ஆரம்ப காலங்களிலிருந்து தனது மரணம் வரையில் என்னோடு தொடர்பாக இருந்தவர் ஹம்ஸா ஹாஜியார். எம்மிடையே இஸ்லாமிய ரீதியான தொடர்பே இருந்தது. அவர் பற்றி நான் இங்கே எழுதியவை அவருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் சிலவாகும்.

அல்லாஹ் அம்மனிதரை ஏற்றுக் கொள்வானாக. அவரது குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பானாக. எம் எல்லோரையும் இறுதி வரையில் அவனது பாதையில் நிலைத்திருக்கச் செய்வானாக.

Reply