சகோதரர் நிசார் என்ற இஸ்லாமிய உழைப்பாளி

 

மரணம் அடுத்த உலகிற்குச் செல்லும் வாயில். அது உண்மையில் அழிவு அல்ல. உலகத்தில் சிறந்த முறையில் வாழ்பனுக்கு மரணம் பற்றிய பயம் இருக்க வேண்டியதில்லை. ஆனாலும் மரணபயம் மனிதனை விட்டு நீங்குவதில்லை. மரணத்தால் கவலையும், ஆழ்ந்த பரிதாப உணர்வும் மனிதனைப் பீடிக்கவே செய்கின்றன.

இந்த வகையில் நாம் சென்ற வியாழக்கிழமை அதாவது 24-12-2015 அன்று எமக்கு மிக நெருக்கமான ஒரு சகோதரரை இழந்தோம். அக்குரணையின் சகோதரர் நிசாரே அவராவார்.

அவரது இழப்பு இஸ்லாமிய தஃவாவுக்கான இழப்பும் கூட. அவருக்கு ஒரு விஷேடமான போக்கு இப்பகுதியில் இருந்தது. அவர் ஒரு கருத்தை சுமந்த மனிதனாகவே எப்போதும் இருந்தார். எந்ந ஒரு இயக்கத்தையோ, சிந்தனையாளரையோ தனியாக அவர் சார்ந்திருக்கவில்லை. இயக்கப்பற்று, ஒரு தனி சிந்தனையாளர் மீதான பற்று என்ற நிலைமை அவரிடம் காணப்படவில்லை. இஸ்லாமியப் பணியில் இது வித்தியாசமான போக்கு. இந்த வகையில் அவர் ஜமாஅதே இஸ்லாமியோடும் இருந்தார். MFCD என்று அன்று அழைக்கப்பட்ட ஸலாமா இயக்கத்தோடும் இருந்தார். தௌஹீத் – ஸலபி சிந்தனைப் போக்கு கொண்டோரோடும் இருந்தார். அனைவருடைய புத்தகங்கள், சிந்தனைகளின் விநியோகஸ்தராகவும் அவர் இருந்தார். இயக்கங்களுக்கு வெளியே நழீமிய்யாப் பட்டதாரிகளோடு நெருக்கமாக இருந்தார். நழீமிய்யாவின் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையின் விநியோகஸ்தராகவும் இருந்தார். இறுதி காலப் பிரிவுகளில் அல்குர்ஆன் கற்கைகள் திறந்த கல்லுாரியோடும் அவர் மிக நெருக்கமாகச் செயற்பட்டார்.

நவீன இஸ்லாமிய சிந்தனையைப் புரிந்து கொண்டு அதற்காகப் பாடுபடுவோர் மிகவும் குறைவு. அவ்வாறு பாடுபட்ட சிலருல் சகோதரர் நிசார் அவர்களுக்கு ஒரு சிறப்பான இடமுண்டு என்பது மிகத் தெளிவு.

சகோதரர் நிசார் அவர்களின் இன்னொரு பண்புதான் தொடர் உழைப்பு. தான் நம்பிய கருத்துக்காகவும், சிந்தனைக்காகவும்  அவர் தனது நேரங்களை மிகவும் பயன்படுத்தினார். வேலை நேரங்கள் தவிர ஏனைய அனைத்து நேரங்களையும் அவர் இதற்காகவே ஒதுக்கிப் பாடுபட்டார். குவைத்தின் தெருக்கள் ஊடாக இதற்காக அயராது சுற்றித் திரிந்தமை யாவரும் அறிந்த ஒரு விடயம். பல்வேறு நிகழ்சிகளின் ஒழுங்கினைப்பாளராகவும், ஏற்பாட்டாளராகவும் அவர் இயங்கினார். இலங்கை வந்ததன் பிறகும் இந்த செயற்பாடுகள் அவரை விட்டு நீங்கவில்லை.

சுருங்கச் சொன்னால் அவர் ஒரு இலட்சியத்தோடு வாழ்ந்த மனிதர். அவர் பலரைப் போல் பொருள் திரட்டல், சுக போக வாழ்வு என்பவற்றை நோக்கமாக கொண்டு வாழ்ந்தவரல்ல. இலட்சியம் எப்போதும் இஸ்லாம் வாழ வேண்டும், இவ்வுலகில் நிலைபெற வேண்டும் என்பதாகவே இருந்தது. இப் பாதையில் அவர் உறுதியோடு, நம்பிக்கை இழக்காது, அர்ப்பணிப்போடு பாடுபட்டார்.

சகோதரர் நிசார் நவீன இஸ்லாமிய சிந்தனை சார்ந்தவர் எனக் கூறினோம். இந்த சிந்தனைக்காக வாழ்ந்தவர், போராடியவர் அவர். சமூகத்தில் பரவலாக அங்கீகரிக்கப்படாத சிந்தனையாக அது இன்றுவரையுள்ளது. சகோதரர் நிசார் அவர்களது இளமைப் பருவங்களின் போது இதற்கான எதிர்ப்புகள் மிகவும் அதிகம். அப்படி இருந்த போதும் அந்த எதிர்ப்புக்களை அவர் தயங்காது எதிர்கொண்டு அதனால் சில நஷ்டங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இறுதியாக சகோதரர் நிசார் பற்றிச் சொல்ல வேண்டிய இன்னொரு விடயம்தான் அவர் மிக ஆழ்ந்த உதவி மனப்பாங்குடையவராக இருந்தார் என்பதாகும். யாருக்கும், எந் நிலையிலும் அவர் உதவி செய்வார். கருத்துடன்பாடு இல்லாதவருக்கும் கூட அவர் உதவி செய்வார். “நான் ஊர் போகிறேன், உங்களது ஏதாவது கடிதங்கள், பொருட்கள் உள்ளனவா நான் அதனை கொண்டு போய்க் கொடுக்கலாம்”. என்று குவைத்திலிருந்து ஊர் வர முன்னால் பலரிடமும் அவர் தேடிச் சென்று கேட்பார். இந்த உதவி மனப்பாங்கால் அவர் பல வகையில் நஷ்டப்பட்டதுண்டு. என்றாலும் அவர் தனது உதவிமனப்பாங்கை மட்டும் ஒருபோதும் விட்டு விட வில்லை.

பெரிய பதவி பட்டமும் வகித்து அல்லது கல்வித் துறையில் உயர் அந்தஸ்துப் பெற்று இருப்போர் பலர் வீடு, குடும்பம், தொழில் என்ற சின்ன வட்டத்தினுல் வாழ்ந்து மரணிப்பர்.

ஆனால் சகோதரர் நிசார் பெரியதொரு பணக்காரருமல்ல, கல்வி துறையில் பெரிய பதவிகள் வகித்தவருமல்ல. ஆனால் உலகத்தில் வீடு, குடும்பம் என்ற குறுகிய வட்டத்தின் உள்ளே வாழாது விரிந்து பார்க்க அவரால் முடிந்தது. ஒரு கொள்கைவாதியாக வாழ்ந்து அக் கொள்கைகாக இறை மார்க்கத்திற்காக அர்ப்பணித்து வாழவும் முடிந்தது.

இதுதான் மனிதர்களது நிலை. உலக அந்தஸ்தும், பணமும் அவர்களை தீர்மாணிப்பதில்லை நடத்தைகளே அவர்களைத் தீர்மாணிக்கின்றன.

இத்தகைய சமூக ஓட்டத்தில் சாதாரண மனிதர்கள் எமக்கு ஒர் ஆழ்ந்த உதாரணம். அல்லாஹ் அவனது மார்க்கத்திற்காக பாடுபட்டோரை கைவிடமாட்டான். அந்த வகையில்:

“யா அல்லாஹ் சகோதரர் நிசாரின் குறைகளையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வாயாக”

Reply