வாசிப்பற்றவன் மனிதனா? பகுதி 2

 

இக்கட்டுரையின் முதலாம் பகுதியைப் பார்க்க…


 

வாசிப்பு கல்விக்காக வெறும் பொழுது போக்குக்காக அல்ல என்ற அவதானம் மிக முக்கியமானது. இந் நிலையில்தான் அது அறிவு தேடலுக்கான அனைத்துப் பண்புகளையும் பெறும்.

அத்தோடு வாசகன் தன்னை ஒரு அறிவு ஜீவியாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கையும் கொண்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் தரப்படும் பாடத்திட்டங்களை மட்டும் படித்து அறிவு ஜீவியாக மாறல் மிகவும் அருமை. எனவேதான் பட்டங்கள் பலவற்றைப் பெற்றும் வெறும் தகவல்கள் சுமந்தவர்களாக இருக்கும் பலரை நாம் காண்கிறோம்.

அறிவுஜீவி என்பவன் விடயங்களை தர்க்க ரீதியாகப் பார்க்கத் தெரிந்தவன். அவன் ஒரு கண்டுபிடிப்பாளன். நிகழ்வுகள், இயக்கங்களிடையே காணப்படும் தொடர்புகளைக் கண்டு முடிவுகளுக்கு வரக்கூடியவன். ஆக்க சக்தி உள்ளவன். பல புதிய உண்மைகளையும், சிந்தனைகளையும் முன்வைப்பவன்.

அறிவு ஜீவியை ஒரு கல்வி ஸ்தாபனம் உருவாக்குவதில்லை. சில அடிப்படைகளை மட்டும் அது கொடுக்க முடியும். பரந்த ஆய்வடிப்படையிலான வாசிப்பே ஒரு அறிவு ஜீவியை உருவாக்கிறது.

இப்போது நாம் விளக்கியது வாசிப்பதன் உயர்ந்த நிலை. உயர் இலட்சியம். வாசிப்புக்கு அடுத்த தரங்கள் உள்ளன.

குறைந்தது வாசிப்பு பாமரத்தன்மையை இல்லாமலாக்க வேண்டும். விஷயங்களை மிகவும் மேலோட்டமாகப் பார்ப்பது,வெறும் வசன, சொற்கவர்ச்சிகளுக்கு உட்படுவது, குறிப்பிட்ட நபருக்கு வீர வணக்கம் செலுத்துவது – இவற்றையே பாமரத்தன்மை என்கிறோம்.

விஷயங்களை அப்படி அப்படியே எடுத்து ஆழ்ந்து பார்க்கத் தெரியாமல் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் சத்தமிடும் எல்லோருக்கும் பின்னால் செல்லும் நிலைதான் சர்வாதிகாரத்தை உருவாக்கும் நிலை. சர்வதேச ஆதிக்க, சுரண்டல் சக்திகளுக்கு சாதகமான நிலை.

இந்நிலையை அகற்றப் பயன்படுவது சுதந்திர வாசிப்பே. இதற்கு மக்கள் திட்டமிட்டு நெறிப்படுத்தப் பட வேண்டும்.

இங்கு நாம் மக்கள் என்று குறிப்பிடுவது பல்கலைக்கழகப் பட்டம் பெறாதவர்களை மட்டுமல்ல. பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களிலும் பாமரர்கள் உள்ளனர். தமது பாடத்திட்டத்திற்கு வெளியில் எதுவும் தெரியாது, பட்டம் பெற்றதன் பின்னர் அறிவு தேடுவதை நிறுத்திக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

பாமரர்களையும் வாசிக்கப் பழக்க வேண்டும். பாமரத்தன்மையை நீக்கலே அதன் இலக்காகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கானதொரு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தல் மிகவும் அவசியமானது. இது நடைபெறாத போது அறிவுஜீவிகள் ஒரு உலகத்திலும் பொதுமக்கள் வேறொரு உலகிலும் வாழ்வார்கள். அப்போது அறிவு ஜீவிகள் தனிமைப் பட்டுப் போவார்கள். அவர்களால் பெரியளவு எதுவும் சாதிக்க முடியாது போகும். ஆதிக்க சக்திகள் தமது கையில் வைத்துள்ள பாரிய ஊடக சக்தியால் உலகை எப்போதும் தம் கையில் வைத்திருப்பார்கள்.

இஸ்லாமியவாதிகளின் வாசிப்பென்பது மிகவும் அத்தியவசியமானது. வாசிப்பற்றவன் இஸ்லாமியவாதியாக இருக்கத் தகுதியற்றவன். இஸ்லாமியவாதியின் வாசிப்பு மூன்று வகையானது.

(1) இஸ்லாமியக் கலைகள் சார் வாசிப்பு. இப்பகுதியில் பழைய அறிவுப் பாரம்பரியத்தை வாசிப்பது அவசியம் என்பது உண்மையானாலும் நவீன காலப்பிரிவில் இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், ஆய்வுகளும் மிகப் பாரியன. அவற்றை வாசித்து ஆழ்ந்து படிக்காவிட்டால் நவீன உலகில் இஸ்லாமியவாதியாக நின்று பேசவே அவன் தகுதியற்றவனாவான்.

(2) அரசியல், பொருளாதாரம், இலக்கியம் போன்ற நடைமுறை உலகைப் புரிந்து கொள்ளும் பொதுவாசிப்பும், இவை சார் நவீன இஸ்லாமிய ஆய்வுகளும்.

இவைசார் விரிந்த ஆய்வு ரீதியான வாசிப்பே நவீன உலக சிந்தனைப் போராட்டதின் இஸ்லாமியவாதியின் ஆயுதம். தனது தூதை எவ்வாறு சுமந்து செல்ல வேண்டும் என்ற அறிவையும் அப்போதுதான் பெற முடியும்.

(3) திட்டமிடல், நிர்வாகம், ஊடகத்துறைசார் வாசிப்புகள். இது இஸ்லாமியவாதியை இவ்வுலகில் மிகச்சிறந்த முறையில் இயங்கும் வாய்ப்பைக் கொடுக்கும்.

இஸ்லாமியவாதி ஒரு சிறந்த போராளியாகி, தனது சமூகத்திற்கும் உலகுக்கும் கொடுப்பவனாக இருக்க வேண்டுமானால் இப்படி தன்னை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாசிப்பது எவ்வாறு? அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது எவ்வாறு? வாசிப்பதற்கான திட்ட ஒழுங்கு எவ்வாறு என்ற கேள்விகள் எழும்ப முடியும்.

இன்ஷா அல்லாஹ் பிறகொரு முறை இதே தலைப்பில் பதில் சொல்ல முயல்வோம்.

Reply