வாசிப்பற்றவன் மனிதனா?!

 

வாசிப்பு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் வஹீயின் ஆரம்ப வசனங்களின் கட்டளை;
இறையருட் கொடைகளில் ஒன்று.

“படைத்த உமது இரட்சகனின் பெயரால் வாசிப்பீராக.” (ஸூரா அலக் 96:1)

“வாசி! உமது இரட்சகன் மிகப் பெரும் அருட்கொடையாளன்.” (ஸூரா அலக் 96:3)

காகிதத்தைக் கண்டுபிடித்த சீனர்களின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் காகித்தை விரிவுபடுத்திப் பரப்பியதன் ஊடே வாசிப்புக்கான முதன்மைச் சாதனமான புத்தகங்களை ஒரு வளர்ச்சியடைந்த நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

உமையா, அப்பாஸிய காலப் பிரிவின் இஸ்லாமிய சாம்ராஜியம் வாசிகசாலை என்ற கலாச்சாரத்தை தமது சாம்ராஜிய நிலங்கள் முழுக்க மிகவும் விரிவுபடுத்தியது. இவ்வாறு முஸ்லிம்களுக்கும் வாசிப்புக்குமுள்ள தொடர்பு அடிப்படையானது; அசல் தன்மைவாய்ந்தது.

குறிப்பிட்ட பாடத்திட்டத்தை முடிப்பதன் மூலம் சான்றிதழ்களைப் பெரும் கல்வி குறுகிய வட்டம் கொண்டது. அது ஆய்வாழம் கொண்டதாகவும், விரிந்த தன்மை கொண்டதாகவும் அமையும் சந்தர்ப்பம் குறைவு. அதிகமாக இக் கல்வி ஒரு தகவல்கள் திரட்டு; விஷயதானங்களின் சேகரிப்பு.

கல்வி நிறுவனமொன்றில் படிக்காதவனும், அல்லது சிறியதொரு தரத்தோடு அக் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறியவனும் வாசிப்பால் உயர்கிறான்; அறிஞனாகிறான்; அறிவுஜீவியாகிறான்.

வாசிப்பே கல்வியை முழுமைப் படுத்துகிறது; ஆழமாக்குகிறது; விரிவுபடுத்துகிறது. அது பல்வேறு சிந்தனைத் தளங்களைக் காட்டும்; நாடுகளையும், சமூகங்களையும் அறிய உதவும்.

வாசிப்பு விரிவாக விரிவாக தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மனிதன் புரிந்து கொள்கிறான். தன்னையும் புரிந்துகொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளாதிருப்பதும், தன்னைப் பற்றியே அறியாதிருப்பதுவும் எவ்வளவு பெரும் துரதிஷ்டம்!

வாசிப்பு இல்லாதவன் எப்படி மனிதனாக முடியும்?! தன்னைச் சுற்றியுள்ள உலகையோ, தன்னைப் பற்றியோ அவனுக்குத் தெரியாது. அர்த்த பூர்வ வாழ்வு அறிவோடுதான் ஆரம்பமாக முடியும். அறிவற்றவன் ஒரு மிருகம். உண்ணவும், குடிக்கவும், பிள்ளைகள் பெற்று வாழவுமே இவ்வுலகோடு அவன் தொடர்பு கொள்கிறான். அவ்வளவே அவனுக்கு இவ்வுலகு பற்றித் தெரியும். இது என்ன இழிந்த வாழ்வு!

கல்வி நிறுவனமொன்றில் படித்து வெளியேறியதும் வாசிப்பதன் ஊடே அறிவு தேடாது, அறிவு வாழ்வைத் துறந்து, பெற்ற சான்றிதழால் உழைக்க மட்டும் தெரிந்தவன் ஒரு பொருளாதார பிராணி மட்டுமே. வாசிப்பு ஒரு பழக்கமாக வேண்டும். வாசிக்காத ஒரு நாள் வாழ்வில் இருந்து விடக் கூடாது. இப்படி அறிவில் எப்போதும் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும். இதுவே வாசிப்பின் அடிப்படை உண்மை.

வாசிப்பு குறிப்பிட்ட துறை சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட சிந்தனை முகாம் சார்ந்ததாகவோ மட்டும் இருக்கக்கூடாது. இது பார்வையைக் குறுக்கும். குறிப்பிட்ட சிந்தனை முகாம் சார்ந்து இது அமைந்தால் குறிப்பிட்ட நபரை அது பிடிவாதக்காரனாகவும், வெறி உணர்வு கொண்டவனாகவும் ஆக்கும். இதுவே மூளைச் சலவை செய்ததாக அமைகிறது. துறையோ, முகாமோ சாராது, விரிந்து வாசிப்பவன் உண்மைகளை அவசரமாகப் புரிந்து கொள்கிறான். அவனது பார்வை விரிகிறது. விட்டுக் கொடுக்கும் மனப் பாங்கும், சகிப்புத் தன்மையும், அடுத்த கருத்துக்களை மதிக்கும் போக்கும் அவனிடம் உருவாகிறது. ஒரு பிரச்சினைக்கு ஒரு கோணமல்ல, பல கோணங்கள் உள்ளன என்றும், தீர்வு என்பது ஒரு தீர்வல்ல, பல தீர்வுகள் உள்ளன எனவும் அவன் புரிந்து கொள்கிறான். இந்த வகையில் கருத்து வேறுபாட்டின் வட்டமும் சுருங்குகிறது.

இந்த வகையில் வாசிப்பு என்பது ஒரு கற்றல்; அறிவு தேடல் செயற்பாடு என்றாகிறது. குறிப்பிட்ட துறையில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தை படிப்பது மட்டுமே கல்வி அல்ல. அது முழுமையான கல்வியுமல்ல. அது மிகச் சரியாக அமைந்தால் கற்றலுக்கு அது வழிகாட்டும்; நெறிப்படுத்தும். வாசிப்பைத் தொடரும் போதுதான் கற்றல் செயற்பாடு விரிகிறது. ஆழமாகிறது.இந்தவகையில் வாசிப்பை ஒரு கற்றல் தொழிற்பாடாகவே கொள்ள வேண்டும். வெறுமனே பொழுது போக்குக்கான ஒரு வழியல்ல அது.

இந்த வகையில் வாசிப்பு மூன்று கூறாகப் பிரியும்:

  1. தான் கற்ற துறையை விரிவுபடுத்தலுக்காகவும், அதில் ஆழ்ந்து செல்வதற்காகவும் வாசித்தல்.
  2. அறிவின் புதிய பரப்புகளை, அறிந்து கொள்ள வாசித்தல்.
  3. பொது வாசிப்பு.

இதில் முதலாவது வகை தன் துறை சார்ந்து கற்றலை விரிவு படுத்த வாசித்தல் என்பதற்கு ஆலோசனை பெருமளவு தேவை இல்லை. துறை சார்ந்தவரே அதனை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். எனினும் இங்கு ஓர் அடிப்படை உண்மை உள்ளது. அதனை மட்டும் குறிப்பிடுவோம். தனது குறிப்பிட்ட துறையின் முன் மாற்று சிந்தனைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும், பார்வைகளையும் கற்றலே இந்த வாசிப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட துறையை நான் படித்த கோணத்திற்கான விமர்சனங்கள் யாவை? அதன் மாற்றுப் பார்வை என்ன எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது வகையின் பொருள் எனது துறைக்கு வெளியே உள்ள அறிவுப் பகுதிகளை வாசித்தல் என்பதாகும். நான் பொருளாதாரத் துறை சார்ந்தவனாயின் ஏனைய கலை, மருத்துவம், வானவியல், புவிசார் அறிவுகள் என்பவற்றைக் கற்க வாசித்தல். இதுவே உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், பிரச்சினைகளை பல கோணங்களில் பார்க்கவும் உதவி செய்யும்.

மூன்றாவது பொதுவாசிப்பு என்பது துறைசார் கலைச் சொற்பிரயோகங்கள், வகைப் படுத்தல்களை விட்டு நீங்கிய நூல்களை வாசித்தலாகும்.இத்தகைய நூல்கள், பொருளாதாரம், அரசியல், மருத்துவம் போன்ற துறைகள் பற்றிப் பேசும். ஆனால் அக்கலைகளில் பொது உண்மைகளையும் அவை சார் பிரச்சினைகளையும் பேசும். இவையே வாசிப்பின் அடிப்படையாகும். வாசிப்பை இங்கிருந்து துவங்கல் இலகு. வெறும் ஆரம்ப அறிவு பெற்றவர் கூட தன் கற்றல்களை இந்த வாசிப்பிலிருந்து துவங்கலாம்.

Reply