பாரிஸ் பயங்கரவாத தாக்குதலும் அதற்குப்பின்னே உள்ள அரசியலும்

 

நவம்பர் 13ம் திகதி பாரிஸில் நடந்த தாக்குதல் மிகப் பாரியது. ஆறு இடங்களில் அத் தாக்குதல் நடைபெற்றது. 352 பேர் காயப்பட 329 பேர் கொலையுண்டனர். 7 பேர் கொண்டதொரு குழு தாக்குதலை நடாத்தியதாகத் தெரிய வந்துள்ளது. 6 பேர் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டனர். ஒருவர் கொல்லப்பட்டார். இன்னமும் இது பற்றிய தேடுதல்கள், விசாரணைகள் நடந்து வருகின்றன. இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் எனப் பலரும் தேடப்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள் முழு முனைப்புடன் பாதுகாப்பு விடயத்தில் செயற்படத் துவங்கியுள்ளன.

இது ஒப்புக் கொள்ளப் படமுடியாததொரு வன்முறை, பயங்கிரவாதம், கொலையுண்டவர்களும் காயப்பட்டவர்களும் சாதாரண பொதுமக்கள். தாக்குதலை யார் நடாத்தியிருந்தாலும், என்ன நியாயங்களை அவர்கள் காட்ட முனைந்தாளும் இது ஒரு இதயமற்ற, மிருகத்தனமான செயற்பாடு என்பதில் சந்தேகமில்லை.

இத் தாக்குதலின் விளைவுகள் பலவாக அமைய முடியும். மேற்குலகின் வலது சாரி தீவிர இயக்கங்களின் வளர்ச்சியை இது துரிதப்படுத்த முடியும். அவர்களது பிரச்சாரமும், கெடுபிடியும் இதனால் அதிகரிக்கும். இந் நிலையில் மேற்குலகில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வில் சிக்கல்களும், பிரச்சினைகளும் அதிகரிக்கும். அவர்கள் தமது பௌதீக, கலாச்சார இருப்பைக் காத்துக் கொள்ளல் ஒரு சவாலாக மாறும்.

முஸ்லிம்கள் மீது பலவகையான அத்துமீறல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நாடுகளுக்கு இது ஒரு வாய்ப்பாக போய் விடும். இஸ்ரேல் பலஸ்தீன் பூமியை ஆக்கிரமித்துள்ள நாடு, தொடர்ந்தும் பலஸ்தீனின் நிலப்பகுதிகளை அது ஆக்கிரமித்து விடுகிறது. அதற்கெதிராக பலஸ்தீன மக்கள் தொடராகப் போராடி வருகிறார்கள். அந்தச் சட்டரீதியான போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி மிக மோசமான அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இஸ்ரேல் முனைந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என அதுவும் தொடர்ந்து பேசி வருகிறது. சீனாவிலும், இந்தியாவிலும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு வகை அத்துமீறல்கள் உள்ளன. சீனா நோன்பு விடயத்தைக் கூட தடை செய்தது. இந்த அனைத்து அத்துமீறல்களையும் அந்த நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என நியாயப்படுத்தி விடமுடியும். அப் பெயரால் மேலும், மேலும் அத்துமீறல்களில் ஈடுபடவும் முடியும். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். இந்த வகையில் இத்தகைய தாக்குதல்கள் மேலும், மேலும் முஸ்லிம் சமூகத்திற்கு நஷ்டத்தை கொண்டு வருகின்றன. இஸ்லாம் பற்றிய மிகப் பிழையான அபிப்பிராயம் உலகில் மிகப் பரவலாகச் செல்லவே இவை வழி வகுக்கின்றன. முஜாஹிதுகள் என தம்மை அழைத்துக் கொள்ளும் நுணுக்கமற்ற அறிவற்ற இப் போராளிகள் இந்த வகையில் பயங்கரத் தவறுகளையே இழைத்து வருகின்றார்கள்

அடுத்து இத்தகைய வன்முறைகளில் இன்னொரு பக்கத்தை நோக்குவது மிகவும் அவசியமானது. அதனை கீழ் வருமாறு விளக்கலாம்:

1.பயங்கரவாதம் என்பது அரசியற் பிரச்சினை. தனி மனிதன் ஒருவன் வன்முறையில் ஈடுபட்டால் அதற்கு சில வேளை மனவியல் கோளாறுகள் காரணமாக இருக்க முடியும். ஒரு நிறுவனமாக, கட்டமைப்பாக வன்முறை தோன்றும் போது நிச்சயமாக அது ஒர் அரசியற் பிரச்சினையாகவே இருக்க முடியும்.

அமெரிக்கா ஆய்வாளர்களின் ஒருவனான ஸ்டீவன் வோல்ட் கூறுகிறார்:

“காலனித்து அரசுகள் தமது காலனிக்குட்பட்ட நாடுகளில் மக்களோடு நடந்து கொண்ட முறைகளே ISIS போன்ற இயக்கங்களின் தோற்றத்திற்கான ஒரு காரணம்”

பாரிஸ் நகர தாக்குதல்களுக்கு ஏறத்தாழ 24 மணித்தியாளங்களுக்கு முன்னர் சுவிடனின் வெளிநாட்டு அமைச்சர் கூறினார்:

“பலஸ்தீன் – இஸ்ரேலியப் போராட்டம் மத்திய கிழக்கில் வன்முறைகள் தோன்ற ஒரு காரணம்”

2. அரபு உலக ஆட்சி முறை இயல்பாகவே வன்முறையை தோற்றுவிக்கக் கூடியது. மிகப் பெரும்பாலான நாடுகளில் சர்வதிகார கொடுங்கோல் ஆட்சிமுறை நிலவுகிறது. கருத்து சுதந்திரம், மனித உரிமைகள் பேணப்படல் அந்நாடுகளில் கிடையாது. அரபு உலக சிறைகளில் பல அரசியல் கைதிகளால் நிறைந்துள்ளன. அரசியற் காரணங்களுக்காக கொலையுண்டவர்கள் ஆயிரக் கணக்கில் வரக் கூடும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்த ஜனநாயகத்திற்கு முரணான ஆட்சிகளை ஒருபோதும் கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமன்றி அவ்வாட்சிகளோடு உறவு வைத்து நெடுங்கிக் கூடிக் குலாவவும் செய்கின்றன. அந்த உலகை சுரண்டும் ஒரு வழியாகவே இந்தச் சர்வதிகார ஆட்சிகளை மேற்குலகு ஆதரித்து வருகிறது என்பது மிகத் தெளிவான உண்மை.

3. அரபுலக வசந்தம் – புரட்சி – இந் நிலையில் ஒரு பாரிய மாற்த்தைக் கொண்டு வர முனைந்தது. சர்வாதிகார ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டனர். ஜனநாயக அடிப்படையிலான தேர்தல்களும் முதன்முறையாக அந்நாடுகளில் நடந்து முடிந்தன. இந் நிலையில் வன்முறையாளர்கள் பலவீனப் படத்துவங்கினர். அல் காயிதாவின் தலைவர் உஸாமா பின் லேடன் அரபுப் புரட்சிகளுக்கு சார்பாக கருத்து வெளியிட்டார்.

ஆனால் மேற்குலகம் நயவஞ்சகத்தனமான நிலைப்பாட்டை அரபு வசந்தத்தின் போது எடுத்தது என்பது சந்தேகமற்ற உண்மை. அரபு வசந்தத்தின் நாடுகளில் எதிர்ப்புரட்சியாளர்கள் எழுந்த போது அவர்களுக்குக் கை கொடுத்தது மேற்குலகம். இன்றுவரை அவர்களோடு ஒத்து உறவாடுவதை நன்கு அவதானிக்க முடியும். இந்த நிலையில் வன்முறையாளர்கள் மேலும், மேலும் பலமாக எழுவார்கள் என்பதில் என்ன சந்தேகமிருக்க முடியும்?!

ஒரு நாட்டில் அநியாயமும் அட்டூழியமும் அநீதியும் நிகழும் போது அவற்றிக்கெதிராக நின்று, நிதானித்து, ஆராய்ந்து திட்டமிட்டும் போராட ஒரு பிரிவினர் எழுவர். ஆனால் இன்னொரு சாரார் அவற்றைக் கண்டு உணர்ச்சிவசப்படுவர், கொதிப்புறுவர். ஆயுதமே தீர்வு எனக் காண்பர். இந்நிலையில் வன்முறையின் தாக்கம் பாரியது என்பதால், வன்முறையின் சக்தி பாரியதாகவும் அதற்குப் பெருத்த ஆதரவு இருப்பது போன்றும் தோன்றும்.

4. மேற்குலகம் இஸ்லாமிய உலகிற்கு எதிராகச் சூழ்ச்சிகளும், சதிகளும் செய்து வந்தது என்பது வரலாறு. அத்தொடரில், தோன்றும் வன்முறை இயக்கங்களின் உள்ளே நுழைந்து அந்த இயக்கங்களை பிழையாக நடாத்துவதில் மேற்குலக உளவிஸ்தாபனங்கள் வெற்றி பெறுகின்றன. இஸ்லாமிய உலகில் நடக்கும் வன்முறைகளை அவதானிக்கும் போது இந்த முடிவுக்கு வர முடிகிறது என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்து. இந் நிலையில் வன்முறை இயக்கங்கள் இஸ்லாமிய உலகினுள்ளே பல சீர்கேடுகளை விளைவித்து விடுகின்றன. இறுதியில் இலக்குத் தவறிய போராட்டங்களாக அவை மாறிப் போகின்றன.

5. சிரியப் புரட்சி சாத்வீகமாக ஆரம்பித்தது. நீண்ட காலம் நிலைத்து நிற்கும் சர்வதிகார குடும்ப ஆட்சியால் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆயுதம் மூலம் அப்புரட்சியை எதிர் கொண்டது அவ்வரசு. மேற்குலகம் சர்வ தேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அரசு பாவித்தும் கூட கைகட்டிப் பார்த்தது மட்டுமல்லாது அரசுக்கு உதவிகளும் செய்தது. இறுதில் ரஷ்யா நேரடியாக தலையிட்டுள்ளது.

இப்படி சிரியாவிலும் பலஸ்தீனிலும் வெடிக்கும் ஒவ்வொரு குண்டிற்கும் துப்பாக்கி ரவைக்கும் ஒவ்வொரு தீவிரவாதி உருவாகவே செய்வான். ISIS அழிந்தால் இன்னொரு தீவிரவாதிகள் பரிவு அங்கு தோன்றவே செய்யும்.

எப்போது அரபு உலகில் சமாதானம் தோன்றுமோ அப்போது பயங்கரவாத இயக்கங்களின் தோற்றத்திற்கான அடிப்படை மூலம் இல்லாது போகும். அப்போது வன்முறையும் அரபுலகில் அற்றுப் போகும்.

6. முஸ்லிம் சமூகம் சர்வதேசிய சமூகம். ஆழ்ந்த ஒற்றுமைப் பட்ட சமூகம். முஸ்லிம்கள் எங்கு துன்பங்களையும், அவலங்களையும் அனுபவிக்கிறார்களோ அப்போது அடுத்த பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தாக்கமுறவே செய்வார்கள். விளைவாக போராட்டம் விரிந்து பரந்து செல்லும். இதனையும் வன்முறை இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர். அதற்காகவே அவை ஜிஹாத் என்ற கருத்தியலை மிகப் பிழையாகப் பாவிக்கின்றன.

7. இஸ்லாம் சமாதானம், அமைதி, சகிப்புத் தன்மையின் மார்க்கம். ஆனால் அதனை பின்பற்றும் மக்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளும், கொடுமைகளும் அந்த சமூகத்தினுள்ளே சிலரை வன்முறையாளர்களாக்குகின்றன.

இந்த தவிர்க்க முடியா எதிர்வினை சமூக நிலையை உலக சுரண்டல், ஆதிக்க சக்திகள் மிகவும் தந்திரமாக பயன்படுத்திக் கொள்கின்றன. மொத்த இஸ்லாமிய இயக்கங்கள், செயற்பாட்டாளர்களுக்கும் பயங்கரவாத முத்திரையைக் குத்துகின்றன. இஸ்லாத்தின் இயல்பிலேயே பயங்கரவாதம் உள்ளது என காட்ட மிக தந்திரமாக முயல்கின்றன.

உண்மையில் இவ்வாறுதான் உலக காலனித்துவ, சுரண்டல் வாத ஆதிக்க சக்திகள் உலகைத் தம் பிடியில் வைத்திருக்க மிகக் கவனமாக திட்டமிட்டு செயற்படுகின்றன. பாரிஸ் தாக்குதல் இந்த வகையில் அவர்களுக்கு எவ்வளவு பெரிய முதலீடாக போய்விட்டது! ஆனால் முஸ்லிம்களின் பெரும்பான்மையினர் இந்த சர்வதேச அரசியலின் கொடூர முகத்தை கண்டுகொள்வதில்லை.எனவே அதற்கேற்ப திட்டமிட்டு இயங்குவதில் அவர்கள் தோல்வியடைகிறார்கள். அவர்களின் உள்ளே தோன்றும் வன்முறை இயக்கங்களும் கூட இச்சர்வதேவச அரசியலுக்கு தம்மை அறியாமலேயே அல்லது நிர்ப்பந்தமாகப் பலியாகிறார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்களும் கூட குறிப்பாக அவர்களின் புத்தி ஜீவிகள் சர்வதேசக் கொடூர அரசியலுக்கு எதிராக போராடுவதில் முஸ்லிம் சமூகத்தினுள்ளே உள்ள மிகப் பெரும் சக்தியை இனங்கண்டு கொள்கிறார்களில்லை. ஒட்டு மொத்தமாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாதிகளாக, அல்லது பின்தங்கிய சக்திகளாக காண்பதுவே அவர்களது சிந்தனைப் பாங்காக உள்ளது. இந்நிலையில் உலகின் போக்கை மாற்றத்தக்க ஓர் அரிய சந்தர்ப்பத்தை உலகம் தொடர்ந்து இழந்து கொண்டே வருகிறது. இதுவே உலகைப் பீடித்துள்ள இன்றைய துரதிஷ்டம்.

Reply