முஸ்லிம் சமூகத்தின் மொழி

 

மொழி ஒரு சமூகத்தின் உயிர் நாடி. மனிதனின் உள உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது அது. மனித உறவாடலுக்கான சாதனம் அந்த மொழி. அதனை சரியாக பிரயோகிக்கத் தெரிந்தவன் மனிதர்களையே ஆள்கிறான்.

அல் குர்ஆனும் ஒரு மொழி அற்புதம். அதன் மொழி அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் கவர்ந்தது; ஈர்த்தது. அப்போது அவர்கள் அதற்கு செவி தாழ்த்த வேண்டாமென்று தமது மக்களை எச்சரித்தார்கள். அதனை கொண்டு வந்த தூதரை அவர்கள் சூனியக்காரன் என்றார்கள். அப்படி அந்தத் தூதர் மக்களை ‘வசியப்படுத்தினார்.‘

எமது சமூகத்தின் முக்கிமானதொரு பிரச்சினையில் ஒன்று இந்த மொழிப் பிரச்சினை. உண்மையில் தமிழே இலங்கை முஸ்லிம்களது தாய் மொழியாக இருந்தது. இன்றும் முஸ்லிம்களில் பெருந்தொகையானோர் மொழி அதுவே. எனினும் இப் பகுதியில் ஒரு குழப்பநிலை உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.

சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் போதனா மொழியாக கொண்டு படிக்கும் மாணவர்கள் தொகை ஓரளவு கூடி வருகிறது. இதனால் தோன்றும் பிரச்சினைகள் பல. அவற்றைக் கீழ் வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. இஸ்லாத்தோடு தொடர்பற்றவர்களாதல்: இஸ்லாத்திற்கான நூல்களும், சஞ்சிகைகளும் தமிழில்தான் அதிகமாகக் காணப்படுகிறன. சிங்களத்திலும் இப்போது கொஞ்சம் நூல்கள் வரத் துவங்கி உள்ளன என்பது உண்மையே. எனினும் அது விரிந்து செல்ல நீண்ட காலமெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அபுல் அஃலா மௌதூதி, யூசுப் அல் கர்ளாவி, ஷெய்க் அல்கஸ்ஸாலி போன்ற பல நவீன கால அறிஞர்களது நூல்கள் தமிழில் பல உள்ளன. வந்து கொண்டும் இருக்கின்றன. சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் போதனா மொழியாகக் கொண்ட மாணவர்கள் இவற்றை வாசிக்கும் திறனற்றவர்களாக இருப்பதால் இஸ்லாத்திற்கு அந்நியமாகிறார்கள். ஆங்கில மொழியில் நிறைய இஸ்லாமிய நூல்கள் காணப்பட்டாலும் அவற்றை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் நிலை இலங்கையில் இல்லை. அவற்றிக்கான விலையும் அதிகம். அதற்கானதொரு சந்தையும் இலங்கையில் இல்லை.பள்ளிகள், இஸ்லாமிய நிறுவனங்கள், இயக்கங்கள் என்பவற்றில் நடாத்தப்படும் நிகழ்ச்சிகளும் பெரும்பாலும் தமிழிலேயே நடாத்தப்படுகின்றன. அத்தோடு ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் நிகழ்ச்சிகளை நடாத்தக் கூடிய வளவாளர்களையும் மிகக் குறைவாகவே காண முடிகிறது.
  2. இலங்கை முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளைப் பேசும் பத்திரிகைகள் தமிழிலேயே உள்ளன. விடிவெள்ளி, மீள்பார்வை, நவமணி, எங்கள் தேசம் போன்றவை தமிழில் முஸ்லிம் பிரச்சினைகளை முன்வைப்பவை. அடுத்து வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்றவையும் ஓரளவு முஸ்லிம் பிரச்சினைகளைப் பேசுபவை. ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளில் இதனை மிகக் குறைவாகவே காணலாம். இந்தப் பின்னணியில் முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளோடு தொடர்பற்றவர்களாகவும் சிங்களம், ஆங்கில மொழிகளைப் போதனாக மொழியாகக் கொண்டவர்கள் ஆகிறார்கள்.
  3. பாட்டு, கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் தோன்றுவது சிங்களம், ஆங்கிலத்தில் குறைவு. அதாவது எமது சமூக வாழ்வு பின்னணியைக் கொண்டு அவை தோன்றுவதில்லை. இவ்வாறே தொடர்ந்து சென்றால் முஸ்லிம் சமூகமே கலை இலக்கியப் பின்னணியற்ற சமூகமாக மாறிப்போகும். தமிழிலும் இஸ்லாமிய இலக்கியங்கள் எதிர்பார்க்கப்படும் அளவுக்கு இல்லை என்பது உண்மை. ஆனால் அது ஓரளவு உள்ளது. அத்தோடு எதிர்காலத்தில் அப்படியொரு வளர்ச்சியையும் எதிர்ப்பார்க்கலாம்.
  4. முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் ஒரு பொது உறவாடல் அற்றுப் போகும் சந்தர்ப்பம் உருவாகி வருகிறது. ஒரே மேசையில் எல்லோரும் உட்கார்ந்து கருத்துப் பரிமாறும் நிலை இல்லாது போகும். இது மிகவும் அபாயகரமான நிலைமை என்பதை விளக்கத் தேவையில்லை.

இங்கு நாம் ஆங்கிலம், சிங்களம் படிக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. கண்டிப்பாக ஆங்கிலம், சிங்களம் என்ற இரு மொழிகளையும் எமது மாணவர்கள் நன்கு பயில வேண்டும். அதன் தேவையை இங்கு விளக்க வேண்டியதில்லை. அதற்கான ஒழுங்குகளை நாம் கட்டாயம் செய்ய வேண்டும். இங்கு நாம் செய்ய வேண்டிய முதன்மையான வேலை என்னவென்றால் ஆங்கிலம், சிங்களத்தை போதனா மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழ் மொழி அறிவற்ற பிள்ளைகளாக ஒருபோதும் எமது பிள்ளைகள் இருந்து விடக் கூடாது.

எமது சர்வதேசியப் பாடசாலைகள் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு க.பொ.த சாதாரண தரத்திலாவது அதனை ஒரு பாடமாக பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.

இரண்டாவது ஒவ்வொரு பெற்றாரும் தமது பிள்ளைகளுக்கு வீட்டிலாவது தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கும் வழியை செய்து கொடுக்க வேண்டும். சிங்கள பௌத்த மக்கள் தமிழ்மொழி கற்பதில் ஈடுபாடு காட்டுவதை இங்கு நாம் அவதானிக்க வேண்டும்.

இஸ்லாத்தை தழுவும் சிங்கள மொழி சகோதரர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தால் மிகவும் குறுகிய காலத்தில் அவர்கள் இஸ்லாத்தை கற்றுக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இறுதியாக அரபு மொழி கற்பதில் நாம் ஈடுபாடு காட்ட வேண்டும். அதற்கான இலகு வழிகளைத் தேட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் இரண்டாவது மொழியாக அதனை மாற்றுவதில் நாம் வெற்றி காண வேண்டும். இது முஸ்லிம் சமூகத்தின் சிந்தனை, நடத்தை, சமூக வாழ்வில் பாரிய தொரு மாற்றத்தை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Reply