கோட்பாடும் நடைமுறையும்

கோட்பாடு என்பது ஒன்று. அதன் நடைமுறை என்பது இன்னொன்று. ஒரு சிறந்த கோட்பாட்டின் இலட்சியம் தன்னியல்பிலும், எழுமாத்திரத்திலும், மன வேகத்திலும் வெற்றி பெற்றுவிட முடியாது. அந்தக் கோட்பாட்டின் இலட்சியத்தை அடைதல் என்பது வாழ்நிலை, யதார்த்தம், சாத்தியக் கூறு, வாய்ப்பு, செயல்முறை என்ற அம்சங்களில் பெரிதும் தங்கியுள்ளது. (1)

இந்த அம்சங்களுடன் இசைவாக்கம் அடைந்து, நடைமுறையாவதிற்றான் ஒரு தத்துவத்தின் மகிமை தங்கியுள்ளது. அது அர்த்தம் பெறுவதுவும் இதனாற்றான். ஒரு கோட்பாடு நடைமுறையாகாத போது அது தோற்றுவிட்டது என்ற கருத்தையே கொடுக்கும். இவ்வளவுக்கும் அக்கோட்பாடு அதன் தத்துவத் தளத்தில் உண்மையாகவும் சத்தியமாகவும் இருக்க முடியும்.

இந்த வகையில் ஒரு தத்துவம், சித்தாந்தம் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்பட முடியும். விஞ்ஞானபூர்வமாக அது நிறுவப்படவும் முடியும். அறிவு அதனை மிகுந்த திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதுவும் சாத்தியம். ஆனால் நடைமுறையில் அது பிரயோகிக்கப்படாத போது அக்கோட்பாட்டை ஏற்றவன் தோல்வி மனப்பாங்குற முடியும். கோட்பாடு பிழையோ என்ற சந்தேகம் அவனில் தோன்றுவதுவும் சாத்தியம். விளைவாக அவன் அக்கோட்பாட்டை கைவிடும் நிலைக்குட்படலாம். ஒரு விரக்தி மனப்பாங்குக்கும் செல்லலாம்.

இன்றைய உலகளாவிய முஸ்லிம்களின் நிலை இதுதான். இஸ்லாம் என்ற தத்துவத்தையும், அதன் இலட்சியத்தையும், அதற்கான தத்துவ தளத்தில் வைத்து முஸ்லிம்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அதனைப் பரந்து உலகளாவிய நடைமுறையுடன் அவர்களால் இணைக்க முடியவில்லை. அதில் அவர்கள் தோல்வியுற்றார்கள். அரபுலக வசந்தம் பின்னடைந்ததன் யதார்த்தம் இதுதான். இஸ்லாமிய இயக்கங்கள் தோல்வியுற்றதுவும் இப்பகுதியில் தான். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத பலர், இயக்கங்களில் ஆழந்த நம்பிக்கை வைத்திருந்த பலர் தோல்வி மனப்பாங்கு கொண்டார்கள்; விரக்தியுற்றார்கள்; இஸ்லாத்திற்கு வெளியில் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் தேடிச் சென்றார்கள்.

ஒரு தத்துவத்தை நடைமுறையொடு இணைப்பது என்பதனை உயிரோட்டமுள்ள ஆய்வுகளினாலேயே அடைய முடியும். முஸ்லிம்கள் அவர்களது ஆரம்ப கால வரலாற்று ஓட்டங்களின்போது தத்துவத்தை நடைமுறையோடு இணைக்கும் இப்பணியை மேற் கொள்ள ஆழ்ந்த ஆய்வுகளை செய்தார்கள். அதற்கான ஆய்வு முறைமை ஒன்றையும் வகுத்தார்கள். அதனையே இஸ்லாமிய வழக்கில் “உஸூல் அல் பிக்ஹ்” என்கிறோம். “அல் பிக்ஹ்” –சட்ட ஒழுங்கு என்பதுவே தத்துவத்தின் நடைமுறைப் பிரயோகமாகும். அந்த நடைமுறைப்பிரயோகத்திற்கான ஆய்வு முறைமையே “உஸூல் அல்பிக்ஹ்” எனப்படுகிறது.

முஸ்லிம் வரலாற்று ஓட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உருவான இந்த ஆய்வு முறைமையை முஸ்லிம்கள் கேள்விக்குட்படுத்தாது, மீளாய்வு செய்யாது அப்படியே பின்பற்றி வந்தார்கள். அக்காலப் பிரிவுகளில் இமாம்கள் உருவாக்கிய அந்த ஆய்வு முறைமைகள் ஒரு பக்திச் சொல்லாடலாக பின்னால் காலப்பிரிவுகளில் மாறிப் போனது. இமாம் ஷாபியீ, அபூ ஹனீபா, மாலிக், அஹ்மத் போன்றோரை அனுகும்போது எதிர்ப்படும் மிகப் பெரும் தடைக்கல் அவர்கள் பற்றிய புனிதக் கட்டுமானமும் அவர்களை ஒரு பெரும் கதையாடலாக்கி வைத்துள்ளமையுமாகும்.

அண்மைக் காலமாக குறிப்பாக அரபு வசந்தத்தின் பின்னர் இப்போக்கில் ஒரு மாற்றம் உருவாகி வருகிறது எனலாம். நவீன இஸ்லாமிய சிந்தனையின் மிக அண்மைக்கால செல்நெறிகள் ஒரு முழுமையான மாற்றம் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளன. தாரிக் ரமழான், அஹ்மத் அல்ரைஸூனி, ஜாஸிர் அவ்தா, முஹம்மத் முக்தார் அல்ஷன்கீதி, ராஷித் அல்கனூஷி, அப்துல் மஜீத் அல்நஜ்ஜார் என்போர் இப்பகுதியில் குறிப்பிடத் தக்க அறிஞர்களாவர்.

இப்பகுதியில் மிக முக்கியமாக அவதானிக்கப்படத்தக்க அம்சம் முஸ்லிம் சிறுபான்மையினராவர். ஆசிய நாடுகளில்தான் அவர்கள் பெரும் தொகையாக வாழ்கிறார்கள். உலகுக்கு இஸ்லாமியத் தூதை முன்வைப்பதில் அவர்களே மிகப் பெரும் பங்காற்ற முடியும். இஸ்லாம் என்ற தத்துவத்தை சிறுபான்மை என்ற யதார்த்தத்தினுள் பிரயோகிப்பது எவ்வாறு என்பதை மையப்படுத்திய ஆய்வுகள் இந்தவகையில் மிக முக்கியமானவையாகும். இலங்கை சிறுபான்மையினராகிய நாமும் இப்பகுதி பற்றிய ஆய்வில் காத்திரமானதொரு பங்களிப்பபுச் செய்ய முயல வேண்டும்.


 

(1) பார்க்க: உதயன், விஜயன்: இந்து மகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும் பக்-13

Reply